பிரிவுகள்
பொது

உனக்கு என்ன தெரியாது, எனக்கு உன்ன தெரியாது

ஒரு சராசரி இலங்கைத்தமிழனாக எனக்கு தெரிந்த இந்திய அரசியல் அம்சங்கள் சில உண்டு. திராவிட இயங்கங்கள், கருணாநிதி, ஜெயல‍லிதா, காங்கிரஸ், நேரு குடும்ப‍ம், அண்மையில் அன்னா கசாரேவும் மோதியும்.

சில நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். நண்பர் தமிழ்நாட்டுக்காரர், தமிழர். வழக்கம் போலவே அரசியல் தான் முக்கிய அம்சம். அதைத் தாண்டி கதைப்பதும் குறைவுதான். அது இந்தியாவிலும் தேர்தல் காலம், இலங்கையிலும் தேர்தல் காலம், நான் அப்போது இருந்த குவின்ஸ்லாந்து மாநிலத்திலும் தேர்தல் காலம். அரசியல் இயந்திரங்களின் மீதான எமது ஒருமித்த அவநம்பிக்கைகளை தவிர்துப் பார்த்த‍தில் அன்றைய கலந்துரையாடலில் நாம் வந்தடைந்த முடிவு தான் ‘உனக்கு என்ன தெரியாது, எனக்கு உன்ன தெரியாது’.

ஒரு சராசரி இலங்கைத்தமிழனாக எனக்குத் தெரிந்த இந்திய அரசியல் அம்சங்கள் சில உண்டு. திராவிட இயங்கங்கள், கருணாநிதி, ஜெயல‍லிதா, காங்கிரஸ், நேரு குடும்ப‍ம், அண்மையில் அன்னா கசாரேவும் மோதியும். இவ்வளவும் தெரிந்த‍தற்கே முக்கிய காரணம் இந்தியத் தொலைக்காட்சிளும் செய்தி ஊடகங்களும் தான். அந்த வகையில் எனது புரிதல்களும் இந்த தொலைக்காட்சிகள் தேர்ந்தெடுக்கும் பார்வையிலேயே தங்கியிருக்கிறது. அதைத்தாண்டி பொதுவான ஒரு இந்தியனின் பார்வையில் இந்திய அரசியலை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைப்பதில்லை.

இதுவே இலங்கை அரசியலைப்பற்றிய ஒரு சராசரி இந்தியத்தமிழனுக்குத் தெரிந்திருப்பது இன்னமுமே மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்தியர்கள் பார்க்க இலங்கைத் தொலைக்காட்சிகளோ இதர பொது ஊடகங்களோ இல்லை. அவர்களுக்கான மூல ஆதாரங்களாக இருப்பது இலங்கைச் செய்திகளை, அரசியலை இந்தியத் தொலைக்காட்சிகளிலும் இதர செய்தி ஊடகங்களிலும் கதைக்கும் இந்தியர்கள், இந்திய அரசியல்வாதிகள். ஆக, பொதுவான ஒரு இலங்கைத் தமிழனின் பார்வையில் இலங்கை அரசியலை பார்க்கும் வாய்ப்பு அவர்களுக்கும் கிடைப்பதில்லை.

இந்த சூழலில், தமக்கான தனி நிகழ்ச்சி நிரலில் இயங்கும் ஊடகங்களூடாகவும் அரசியல்வாதிகள் ஊடாகவும் நாம் பெறக்கூடிய தகவல்கள் ஒருபோதும் பூரணமானதாகவோ தூய்மையானதாகவோ இருக்க வாய்ப்பில்லை. ஒரு சராசரி குடிமகனுக்கு இருக்க‍க்கூடிய பிரச்சினைகளையும் அவர்கள் எடுக்கும் அரசியல் தெரிவுகளையும் புரிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைப்பதில்லை. தி.மு.க.வுக்கு வாக்களிக்கும் ஒரு இந்தியத்தமிழனின் தெரிவும், சிரிசேனவுக்கு வாக்களிக்கும் ஒரு இலங்கைத்தமிழனின் தெரிவும் மற்ற பக்கத்தில் இருப்பவர்களுக்கு தெரியவும் வாய்ப‍்பில்லை.

புரிதலும் தெளிவும் மட்டுப்படுத்தப்பட்ட இந்த சூழலில் என்னால் செய்ய முடிந்த‍து மற்றவரின் அரசியலை புரிந்து கொள்ள முயல்வது, இல்லாவிட்டலா அவர்களின் அரசியல் தெரிவில் எனக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை புரிந்து கொள்ள முடிவது. ஆக, அந்த கலந்துரையாடலின் முடிவில் நம் இருவருக்கும் பொதுவான புள்ளியாக இருந்தது குவின்ஸ்லாந்து அரசியல் மீதான எமது புரிதல் மட்டும் தான். கடைசியில் குவின்ஸ்லாந்து தேர்த‍லில் வந்த அரசியல் மாற்றமும் நாம் எதிர்பார்த‍து தான். காரணம் அது நம் இருவருக்கும் புரிந்த அரசியல். அதை தாண்டி – உனக்கு என்ன தெரியாது, எனக்கு உன்ன தெரியாது.