பிரிவுகள்
அனுபவம்

நானும் ஒரு சிங்களத்தமிழன்

கடந்த சில வாரங்களாகவே இணையத்தில் உலாவும் நேரம் குறைந்துவிட்டது. காரணங்கள் இங்கு முக்கியமில்லை. ஆனாலும் பேஸ்புக் டுவீட்டர் பக்கம் மட்டும் அவ்வப்போது தலைகாட்டி ஜனநாயக கடமையை நிறைவேற்றி விடுவதுண்டு. இந்த உலாவல்களில் தான் கடந்த சில நாட்களாக சிங்களத்தமிழர் என்ற ஒரு புதிய சொற்தொடர் பரவலாக பகிரப்படுவதை காணக்கிடைத்த‍து. (அதன் வரலாறு இங்கே. இதையும் இன்னும் சில பல பதிவுகளையும் வாசித்த பின்னரே அதன் பின்னணி அரைகுறையாகவாவது விளங்குகிறது!). இது பலருக்கு அதிச்சியான ஒரு சொற்தொடராக இருக்கலாம், சிலருக்கு தனிப்பட்ட ரீதியில் பாதிப்பதாகவும் இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி இருக்கவில்லை. ஏனென்றால், நானும் ஒரு சிங்களத்தமிழன்.

தமிழர் என்பது ஒரு இனம் இல்லை என்று நம்புபவன் நான். ஒரு மொழி பேசுவதால் மட்டுமே ஒரு இனமாக முடியாது. அதிலும் முக்கியமாக தமிழ் பேசுபவர்கள். எமக்குள் இருக்கும் ஒற்றுமையே எந்த அடிப்டையிலாவது வேற்றுமை பார்க்க முடிவது. அதைத்தாண்டி தமிழர் என்பது நூற்றுக்கணக்கான ஒத்த மொழி பேசும் குழுக்களை குறிக்கும் ஒரு பொதுப்பெயர். அவ்வளவு தான். தமிழ்த்தமிழர், ஆங்கிலத்தமிழர், சிங்களத்தமிழர் என்பதெல்லாம் தமிழரில் அடங்கும். இந்த அடிப்படையில் நானும் ஒரு சிங்களத்தமிழன்.

Tamil Community - Worldwide

நான் பிறந்தது யாழ்ப்பாணம், ஈழத்தமிழர் வாழும் இடம். நான் வளர்ந்தது ஹப்புத்தலை, மலையகத்தமிழர் வாழும் இடம். (அதன் பின் இன்னும் சிறிது காலம் யாழ்ப்பாணம்). நான் படித்த‍தும் அதிக காலம் வாழ்ந்த‍தும் கொழும்பு, சிங்களத்தமிழர் வாழும் இடம். நான் இப்போது இருப்பது அவுஸ்திரேலியா, புலம்பெயர்தமிழர் வாழும் இடம். இவர்களைத் தவிர இலங்கைத்தமிழர், இந்தியத்தமிழர், சிங்கப்பூர்த்தமிழர், மலேசித்தமிழர் போன்ற பலவேறு தமிழர் இனக்குழுக்கழுடன் நெருங்கிப் பழகும் வாய்பும் எனக்கு கிடைத்திருக்கிறது. எனது இந்த அனுபவங்கள் நான் எந்தத்தமிழர் குழுவுக்குள் உள்ளடங்குகிறேன் என்பதில் எனக்குள் பல சந்தேகங்களைத் தோற்றுவித்திருக்கிறது. இந்த சூழலில் நான் ஒரு குழுவை தேர்ந்தெடுக்க பயன்படுத்தக்கூடிய அடிப்படை, நான் எங்கு அதிக காலம் வாழ்ந்திருக்கிறேன் என்பது. அவ்வகையில், நானும் ஒரு சிங்களத்தமிழன்.

இந்த தெரிவில் அரசியல் சார்பு, மதச் சார்பு போன்றவை எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது தெரியவில்லை. அவற்றயும் சேர்த்தால் இன்னும் சில பல உபபிரிவுதமிழர் குழுக்கள் இருக்க‍க்கூடும். ஆனால் இப்போதைக்கு நான் எனக்கான குழுவை தேர்தெடுத்திருக்கிறேன். இன்னும் சில காலத்தில் எனது அனுபவங்கள் மாறும் வேளையில் நான் வேறு ஒரு குழுவை தேர்ந்தெடுக்க கூடும். தமிழர் குழுக்கழுக்கு இடையில் மாறுவதற்கு மதமாற்றம் போன்ற சடங்குகளோ தடைகளோ இருப்பதாக தெரியவில்லை. அதுவரை, நானும் ஒரு சிங்களத்தமிழன்.

பிரிவுகள்
அனுபவம்

ஒரு மாதமும் ஒரு நாளும்

நான் பிரிஸ்பேன் வந்து இன்றுடன் ஒரு மாதமும் ஒரு நாளும் ஆகிறது. மூன்று வருட அவுஸ்திரேலிய வாழ்க்கையின் ஆரம்பம். புதிய இடம், புதிய மக்கள், புதிய தனிமை, புதிய அனுபவம், கடந்த ஒருமாத அனுபவங்களின் தொகுப்பு இது. (பதிவு வைத்திருக்கும் இலங்கைப் பதிவர் என்பதிலிருந்து இனி பதிவு வைத்திருக்கும் அவுஸ்த்திரேலிய பதிவர் என்றும் சொல்லலாம்.)

சில நாள் பயணம்

ஏப்ரல் 23 – கொழும்பிலிருத்து சிங்கப்பூர் வழியே சிட்னி, பின் பிரிஸ்பேன். வெறிச்சோடி இருத்த கொழும்பு-சிங்கப்பூர் விமானத்தில் அதிகாலை/நடுராத்திரி 1 மணிக்கு தந்த காலை(?) சாப்பாட்டுக்குப் பின் 3 ஆசனங்களில் ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழும்பினால் சிங்கப்பூர். ஆனா ஒரு அரைமணி நேரம் சிங்கப்பூரை சுத்திக்காட்டிய பின்னர் தரையிறங்கும் போது நேரம் காலை 7 மணி. அடுத்து சிங்கப்பூர்-சிட்னி விமானம் இரவு 8மணிக்கு(!). இடைப்பட்ட 12 மணித்தியாலம்  பல்கலைக்கழக நண்பன் பிறைதீசனோடு சிங்கப்பூர் சுத்துப்பார்த்துவிட்டு மீண்டும் இரவு 7 மணிக்கு விமான நிலையத்துக்கு வந்தோம். சிட்னிக்கான இரட்டைத்தட்டு விமானத்தில் பயணித்ததும் ஒரு முதல் அனுபவம். 7 மணித்தியால பயணத்தில் 2 தடவை உணவு, சில மணிநேர தூக்கம் என்று சிட்னியில் தரையிறங்கும் போது நேரம் காலை 7 மணி – ஏப்ரல் 24.

ஏப்ரல் 24 – உறவினர்களுன் இரண்டு நாட்களும் நண்பர்கள் சஞ்சயன், கேசவனுடன் ஒரு நாளும், மீதி தூக்கத்திலும் என்று சிட்னியில் தங்கியிருந்த நான்கு நாடகளும் போயின. வலைப்பதிவர் கானா பிரபா சிட்னியில் இருக்கும் விடையம் மறந்து போனதால் அவரை சந்திக்க சந்தர்ப்பம் வாய்கவில்லை. (இல்லாவிட்டால் ஒரு பதிவர் சந்திப்பு நடத்தியிருக்கலாம்). சிட்னியில் இருந்து பிரிஸ்பேன் வந்த போது நேரம் இரவு 11 மணி – ஏப்ரல் 27.

பல்கலைக்கழகம்

ஏப்ரல் 28 – பல்கலைக்கழகத்தில் முதல் நாள். ஒரு ஆராய்ச்சி மாணவனாக இருப்பதாலும் தவணை ஆரம்பித்து 2 1/2 மாதங்களின் பின்னர் சேர்வதாலும் இலகுவாக பதிவுசெய்தல் மற்றும் இதர செயற்பாடுகளை செய்ய முடிந்தது. வாரம் ஒருதடவை எனது research supervisorஐ சந்திப்பது தவிர்த்து மீதி எல்லாம் சுயகற்றலாகவே (இப்போது இரண்டு பெரும் புத்துகங்களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறேன்.) இன்றுடன் ஒரு மாதம் – மே 28.

தமிழ்க் கோவில், தமிழ்ப் பாடசாலை மற்றும் Duplex Mode

ஒரு சில குடும்ப நண்பர்கள், முகுந்த் மற்றும் சில பல்கலைக்கழக சீனியர்கள் தவிர பிரிஸ்பேனில் வேறு தமிழர்கள் யாரையும் எனக்கு தெரிந்திருக்கவிலை. ஒரு தடவை குயின்ஸ்லாந்து பிள்ளையார் கோவிலுக்கும் போன போது அங்கு சில தமிழர்களையும் காண முடிந்தது. இங்கும் எல்லாவிதமான அர்ச்சனைகளும் பூசைகளும் இருக்கின்றன. தமிழர்கள் மட்டுமல்லாது வேறு இந்துக்களும் அங்குவருவதை அவதானிக்க முடிந்தது. (அர்ச்சனை பிரசாதமாக ஆப்பிள் வழங்கப்படுகிறது.)

முகுந்த் மூலமாக ‘தமிழ் பிரிஸ்பேன்’ மின்னஞ்சல் குழுமம் பற்றி அறிந்து அந்த குழுவில் இணைந்து கொண்டேன். கடந்த ஞாயிறு பிரிஸ்பேன் தமிழ்ப் பாடசாலையின் விளையாட்டு போட்டிக்கும் போகும் சந்தர்ப்பம் அமைந்து. அங்கு பலருடன் உரையாடும் சந்தர்பமும் கிடைத்தது. தமிழ்ப் பாடசாலை என்றாலும் இங்கு ஆங்கிலம் மூலமாகவே தமிழ் கற்பிக்கப்படுகிறது. இந்த பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்புவது ஒரு குற்ற உணர்ச்சியாலா அல்லது தங்கள் பிள்ளைகளும் தமிழ் கற்கவேண்டும் என்ற எண்ணத்தாலா என்பது எனக்கு குழப்பமாகவே இருந்தது. பல பெற்றொரும் தமது பிள்ளைகளுன் ஆங்கிலத்திலேயே உரையாடுவதை காணக்கூடியதாக இருந்தது.

வெளிநாடுகளில் வாழும் தமிழ் குடும்பங்களில் காணக்கூடிய இன்னொரு முக்கிய அம்சம் ‘Duplex Mode Communication”. அதாவது பிள்ளைகளுக்கு தமிழ் (ஓரளவு) விளங்கும், ஆனால் கதைக்கமாட்டார்கள். ஆதலால் பெற்றோர் தமிழில் உரையாடுவார்கள், பிள்ளைகள் ஆங்கிலத்தில் உரையாடுவார்கள். இந்த விசித்திரமான உரையாடல்களை கிரகித்து கொள்ள சிலகாலம் தேவை. ஆக இந்த தலைமுறையோடு அவர்கள் ஆங்கிலம் பேசும் தமிழர்கள் ஆகிவிடுவார்கள். அதாவது தமிழர் என்பது ஒரு மொழி கடந்த ஒரு சமூக அடையாளமாக மாறிவிடும்.

தனிமையும் ஒரு அனுபவம்

வெளிநாட்டு கல்வி, தனிமையான வாழ்க்கை என்று பலரும் பயங்காட்டினாலும், இதுவும் ஒரு புதிய அனுபவமாக தான் இருக்கிறது. ஒரு புதிய நகரம், புதிய மனிதர்கள், புதிய மனிதர்கள் என ஒரு பெரு நகரத்தில் தொலைந்த குழந்தையை போன்ற அனுபவம், ஆனால் இங்கும் பல புதிய விடையங்கள் சூழ்ந்திருகின்றன அறிந்து கொள்ள. இந்த அனுபவம் எனக்கு பிடித்திருக்கிறது, தனிமை என்பது தனித்திருப்பது அல்ல என்பதும் புரிந்திருக்கிறது.

பிரிவுகள்
காண்பவை

பார்த்த படங்கள் 2010 (ஜனவரி – மார்ச்)

நான் திரையரங்கில் படம் பார்ப்பது குறைவு, பெரும்பாலும் YouTubeஉம் Torrentஉம் தான். அப்படி பார்த்த சில படங்கள் பற்றி, நான் அவ்வப்போது எழுதி வைத்தவை. (ஒரு டயறி குறிப்பு போல).

Just for my personal reference…!

விண்ணைத்தாண்டி வருவாயா (Vinnaithaandi Varuvaayaa) – நான் வாழ்க்கையில் பார்க்கும் என்னைச்சுற்றி நடக்கும் (பலர் யதார்த்தத்தை மீறிய என்று சொல்லும்) பல சம்பவங்கள். இனிய Romantic Musical. அளவான நடிப்பு, அழகான ஒளிப்பதிவு. தெலுகு Ye Maaya Chesave முடிவை விட Vinnaithaandi Varuvaayaa முடிவுதான் பிடித்திருத்தது. படம் பிடித்திருந்தது…! (9/10)

ஆயிரத்தில் ஒருவன் (Aayirathil Oruvan) – தமிழில் நான் பார்த்த படங்களில் மிகவும் வித்தியாசமான படங்களில் ஒன்று, (தமிழில்…!). முக்கியமாக ஒளிப்பதிவும் இசையும். படம் பார்த்து முடித்த பின் எழுத்திலே கொண்டுவர முடியாத ஒரு உணர்வு. இப்படியான படங்கள் இனியும் வரவேண்டும். படம் பிடித்திருந்தது. (9/10)

தமிழ் படம் (Thamizh Padam) – புது முயற்சி. முடிவிலே திகட்டினாலும், மொத்தத்தில் சூப்பர். நல்ல இசை, ‘ஒமகசீயா’ பாடலும் தான். படம் பிடித்திருந்தது. (8/10)

கோவா (Goa) – நாம் பொதுவிலே பேச மறுக்கும், ஆனால் ‘கலாச்சாரத்துக்கு புதிது அல்லாத’ உறவு முறைகளை சாதாரணமாக காட்சிப்படுத்தியிருந்தது. நல்ல நகைச்சுவை, நல்ல இசை, நல்ல பொழுதுபோக்கு படம். படம் பிடித்திருந்தது. (7/10)

புகைப்படம் (Pugaippadam) – இந்த வருடம் வெளியான, நான் பார்த்த முதல் தமிழ்ப்படம். வித்தியாசம் என்று எதுவும் இல்லாத கதை, புதிய நடிகர்கள். காலத்தால் சற்று பிந்திய, இனிய இசை. இன்றைக்கும் என் பயணங்களில் நான் கேட்கும் ‘இது கனவோ’ பாடல். முடிவில் கொஞ்சம் சொதப்பல். படம் பிடித்திருந்தது. (7/10)

குட்டி (Kutty) – சுமாரான கதை, நல்ல நகைச்சுவை. (பார்க்கும் போது) படம் பிடித்திருந்தது. (இப்போது) படம் பரவாயில்லை. (6/10)

தீராத விளையாட்டு பிள்ளை (Theeradha Vilaiyattu Pillai) – வெட்டியாக இருக்கும் போது நெட்டிலே பார்த்த படம். சுமாரான நகைச்சுவை, சுமாரான பாடல்கள், நல்ல பாடல் காட்சிகள். படம் பரவாயில்லை. (5/10)

கச்சேரி ஆரம்பம் (Kacheri Arambam) – வெட்டியாக இருக்கும் போது நெட்டிலே பார்த்த படம். படம் பரவாயில்லை. (5/10)

(பலர் யதார்த்தத்தை மீறிய என்று சொல்லும்)
பிரிவுகள்
பொது

பழம் தமிழ் எழுத்துருக்கள்

ஒரு தொடர் எழுதுவதற்காக முன்னர் சேர்த்து வைத்திருந்த புத்தகங்களை வாசித்துக் கொண்டிருந்த போது ஒரு பழைய தாள் கிடைத்தது. பாடசாலை நாட்களில் நானும் நண்பன் ராமும் குறியீட்டு முறையில் எழுத பயன்படுத்திய reference தாள் அது.

ஏதோ ஒரு புத்தகத்திலிருந்து பிரதி பண்ணி வைத்திருந்தோம். பழம் தமிழ் எழுத்துருக்கள் அவை. எப்படி எழுதுவது என தெரியாவிட்டாலும், நாமாக ஒரு முறைக்கு எழுதப்பழகி ‘இரகசிய தகவல் பரிமாற்றங்களுக்கு’ [:)] பயன்படுத்தி வந்தோம்.

சரி பதிவுக்கு வருவோம்… பெருசா ஒண்டுமில்ல…. அந்த இரண்டு பக்கங்களையும் இங்கே மின்வருடி போட்டிருக்கிறேன். ஆ,ருக்காவது பயன்பட்டா சந்தோசம், இல்லாட்டி ஒரு பதிவு. 🙂

உயிர் எழுத்துக்கள்:
Tamil Vowels - உயிர் எழுத்துக்கள்

மெய் எழுத்துக்கள்:
Tamil Consonants - மெய் எழுத்துக்கள்

(சுட்டியால் தட்டினால் படம் பெரிதாகும் ?!)

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்