பிரிவுகள்
காண்பவை

கானல் நீர் – குறும்படம்

இன்று காலை வேலைகளுக்கு மத்தியில் வெட்டியாக இருந்த வேளை, மூஞ்சிப்புத்தகத்தில் இந்த குறுப்படத்தை பார்க்க கிடைத்தது.

கானல் நீர் – குறும்படம்

மூன்று வருட பிரிவின் பின்னர் சந்திக்கும் காதலர்கள், நாம் அன்றாடம்(?) காணும் ஒரு கதையாக இருந்தாலும் திரைக்கதையும் சொல்லப்பட்ட விதமும் சிறப்பானவை. இந்த குறுப்படம் எந்த வெட்டல்கள் ஒட்டல்கள் (editing) இல்லாமல் ஒரே காட்சியில் படமாக்கப்பட்டுள்ளது. கதையோடு இணைந்து வரும் அந்த பாடல் உணர்வுகளோடு அழகாக பொருந்துகிறது. வசன ஒலிப்பதிவில் சற்று கவனம் செலுத்தியிருக்காலம். இதில் நடித்திருக்கும் Adit Arun மற்றும் Regina Cesandra ஏற்கனவே M. பாலாஜியின் காதலில் சொதப்புவது எப்படி என்ற குறுப்படத்தில் நடித்தவர்கள். வேறு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். சிறப்பான நடிப்பு.

புதிய இயக்குனர் Ramya Ananthe Kalingarayar, ஒளிப்பதிவாளர் Sai Kumar மற்றும் L.V.Prasad Film & TV Academy மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.

நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என அனைத்து பரிமாணங்களிலும் சிறப்பான ஒரு அழகிய குறுந்திரைப்படம் – கானல் நீர்.

பிரிவுகள்
அனுபவம்

அழகு – காதல் – கடவுள் – பணம்

நான் பதிவு எழுதுவதே அபூர்வம், தொடர்பதிவு எழுதியதே இல்லை. இது தான் நான் முதல் முறையாக வலைப்பதிவில் எழுதும் தொடர் பதிவு. ஆதலால் விதிமுறைகளும் தெரியாது, இந்த தொடர்பதிவின் வரலாறும் தெரியாது. ஏதோ கொடுக்கப்பட்ட தலைப்பை மட்டும் வைத்துக்கொண்டு இதை எழுதுகிறேன்.

அழைத்தவர்:

  • மயூரேசன் – நன்றி… 🙂

அழைப்பது:

  • யார் ஏற்கனவே அழைக்கப்பட்டிருக்கிறார்கள், யார் அழைக்கப்படவில்லை போன்ற விபரங்கள் தெரியாததால் யாரையும் அழைக்கப்போவதில்லை. – தப்பிச்சிட்டாங்க… 🙂

—————————————-

அழகு

அக அழகு, புற அழகு, பிற அழகு என்று பல அழகுகள் இருப்பதாக அறிஞர் பெருமக்கள் கூறுவர். ஆனாலும் எனக்கு அது பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது. எனக்கு அழகு என்றவுடன் ஞாபகம் வருவது ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள். பொதுவாக இயற்கையின் அழகு பிடிக்கும். இது பெண்களையும் சேர்த்து தான்… 😉

அழகியல் சிறப்புள்ள புகைப்படங்களை எடுக்கவேண்டும் என்பது நீண்டநாள் ஆசை, பயிற்சியும் முயற்சியும் இருந்தால் அதுவும் கைகூடலாம். (இதில் Nude photography (NOT erotic photography) போன்றவற்றிலும் ஆர்வம் உண்டு)

காதல்

காதலில் வெற்றியா தோல்வியா என்பதல்ல முக்கியம், காதலித்தவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்களா என்பதே முக்கியம் என்பது என் கருத்து. காதலில் எனது அனுபவங்களை தொகுத்து கதை ஒன்று எழுதிக்கொண்டிருக்கிறேன்….(ஆனால் எப்போது எழுதி முடியும் என்பது தெரியாது 🙂 )

கடவுள்

இல்லாத ஒன்றை இல்லை என்று சொல்வது, அந்த இல்லை என்றை கூற்றை தவறாக்கி இல்லை என்று சொல்லப்பட்டது இருக்கிறது என்பதாவ அமையும் என்பது “Nothing means Something” என்ற கூற்றுக்கு நான் கொடுக்கும் விளக்கம். ஆக நான் கடவுள் இல்லை என்று சொல்ல மாட்டேன். (இது ஒரு தெளிவான கூற்று, விளங்காதவர்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டால் விளக்க முடியும் 😉 ).

பணம்

பணம் என்பது நாம் செலவு செய்யும் வரை பெறுமதியற்றது, ஆதலால் பணத்தை செலவு செய்வதே பிடிக்கும். ஆனாலும் குறுகியகாலத்துக்கு சேமித்து மொத்தமாக செலவளிப்பது எனது வழக்கம். செலவு செய்வதற்கு என்பதை தாண்டி பணத்தின் மீது ஆர்வமில்லை. (வேறு எதற்கு தான் என்ற கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது, எப்போதுமே செலவுசெய்யாமல் தொடர்ந்து சேமிக்கும் யாரிடமாவது கேட்கவும்…)

—————————————-

பானையில் அவ்வளவுதான்…. ஆகவே பதிவிலும் அவ்வளவே…

அன்புடன்,
நிமல் (எ) நிமலபிரகாசன்

பிரிவுகள்
அனுபவம்

நான், நீ – காதல், கதை – ஆம், இல்லை

0
நீ என்னை காதலிக்கிறாய்.
நானும் உன்னை காதலிக்கிறேன்.
[ஒரு வருடம்]

1
நான் உன்னை காதலிக்கவில்லை.
நீ என்னை காதலிக்கிறாய்.
[நான்கு வருடங்கள்]

5
நீ இன்னமும் என்னை காதலிக்கிறாய்.
நான் உன்னை காதலிக்கலாம்…(?)
நான் உன்னை காதலிக்கிறேன்.
[இரண்டு வருடங்கள்]

7
நான் உன்னை காதலிக்கிறேன்.
இன்னொருவன் உன்னை காதலிக்கிறான்.
நீ …?
நான் உன்னை காதலிக்கிறேன்.
நீ இன்னொருவனை காதலிக்கிறாய்.
[ஒரு வருடம்]

8
நீ இன்னொருவனை காதலிக்கிறாய்.
நான் …?
[ஒரு வருடம்]

9
நான் இதை வலைப்பதிவில் எழுதுகிறேன்.
நீ இதை வாசிக்கலாம்…(?)

அன்புடன்,
நிமல்

பி.கு.:

  1. இது கதையோ, கவிதையோ அல்ல.
  2. இது முற்று முழுதான ‘கற்பனை’.