பிரிவுகள்
பயணம்

ஒரு பயணத்தின் படக்கதை – ஹண்டர் பிராந்தியம்

பயணத் திகதி: நவம்பர் 23, 2010

மூன்றாம் நாள் பனிக்குளிரில் முழுநிலா ஒளிர்ந்து கொண்டிருந்த அதிகாலை 4.30க்கு விடிந்தது. சற்றுத் தாமதித்தே புறப்படலாம் என்பதால் அன்று என்ன இடங்களைப் பாரக்கலாம் என்பதை முதல் நாள் சேகரித்திருந்த கையேடுகளில் இருந்து தெரிவு செய்தேன்.

ஒரு பயணத்தின் படக்கதை - ஹண்டர் பிராந்தியம்காலை 5.45க்கு டாரியிலிருந்து தெற்காக பசிபிக் நெடுஞ்சாலையில் ஹண்டர் (Hunter) பிராந்தியத்தை நோக்கிப் பயணிக்கலானோம். ஹண்டர் பிராந்தியம் அல்லது ஹண்டர் பள்ளத்தாக்கு என்று அறியப்படும் இந்த பகுதி நியூ சவுத் வேல்ஸ் மாநிலந்தின் சிட்னிக்கு வடக்காக அமைந்துள்ளது.

Sunrise in Taree
கிழக்கே உதிக்கும் சூரியன்
Toyota Camry Altise
பனியில் குளித்து நிற்கும் கார்
பசிபிக் நெடுஞ்சாலை
தெற்கே செல்லும் இந்தப் பாதை, ஹண்டர் நோக்கி...

எமது முதலாவது நிறுத்தம் ஹோக்ஸ் நெஸ்ட் (Hawks Nest). இது மாயல் ஏரிகளுக்கும் (Myall Lakes) ஸ்டீபன்ஸ் துறைமுகத்துக்கும் (Port Stephens) இடையில் அமைந்துள்ள ஒரு கடற்கரை ஊர். நாம் டாரீயிலிருந்து 115கிமீ தெற்காக பயணித்து ஹோக்ஸ் நெஸ்ட் கடற்கரையை அடையும் போது நேரம் காலை 8.30. மிகவும் குறைந்த சனத்தொகையை கொண்டுள்ள இந்தப் பிரதேசம் பெரும்பாலும் விடுமுறை வீடுகளையும் ஓய்வுபெற்றொர் குடியிருப்புக்களையும் மட்டுமே கொண்டுள்ளது. தங்களுடைய வான்களிலேயே குடியிருந்து பயணிக்கும் பலரையும் அங்கு காணக்கூடியதாக இருந்தது. அந்த கடற்கரையோரமாக காலை உணவை முடித்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.

Nimal at Hawks Nest Beach
ஹோக்ஸ் நெஸ்ட் கடற்கரையில் நான்
Arunan at Hawks Nest Beach
ஹோக்ஸ் நெஸ்ட் கடற்கரையில் அருணன்

எமது அடுத்த நிறுத்தம் ஹண்டர் பள்ளத்தாக்கு (Hunter Valley) பிரதேசத்தில் உள்ள பொக்கொல்பின் (Pokolbin). எமது பிரதான பாதையான பசுபிக் நெடுஞ்சாலையில் தெற்காக 70கிமீ நியூகாஸில் (Newcastle) வரை பயணித்து அங்கிருந்து 80 கிமீ மேற்காக பயணிக்க வேண்டும். ஆனால் நாம் GPS சொல் கேட்டு சென்றதால் சற்று மாறுபட்ட பாதையால் சென்றோம்.

Setting GPS
சுத்தலில் விட்ட GPSஐ சுத்துதல்

நாம் சென்ற பாதை ரம்யமான பச்சை நிலங்களாலும் அமைதியான காடுகளாலும் இருமருங்கிலும் சூழப்பட்டிருந்தது. நாம் கடந்து சென்ற குரி குரி (Kurri Kurri), செஸ்நொக் (Cessnock) போன்ற சிறு நகரங்களில் பழைமையான பல கட்டடங்களையும் காணக்கூடியதாக இருந்தது. நாகரிக மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படாத இயற்கையோடு இணக்கமான பிரதேசமாக அது இருந்தது.

Carousel Keepsakes / The Old Edwards Wine Salon
ஒரு பழைய வைன் மதுக்கடை.
School of Arts
இந்த பிராந்தியத்திலுள்ள பழைமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றான செஸ்நொக்கில் அமைந்துள்ள கலைப் பாடசாலை (School of Arts).
Cessnock Airport
செஸ்நொக் விமான நிலையம் பெரும்பாலும் தனியார் விமானங்களாலும் பயிற்சி விமானங்களாலும் பயன்படுத்தப்படுகிறது.

ஹண்டர் பள்ளத்தாக்கு திராட்சைத் தோட்டங்களுக்கும் வைன் உற்பத்திக்கும் பிரபலமான ஒரு பிரதேசம். நாம் நேரடியாக அங்கிருந்த தகவல் மையத்திற்கு சென்றோம். அங்கு வைன் சுவைக்கும் சுற்றுலாக்களில் வந்திருந்த பெருமளவான சீன சுற்றுலாப் பயணிகளை காணக்கூடியதாக இருந்தது. நாம் உலகில் எங்கு சென்றாலும் அங்கு சீனர்களை சுற்றுலா பயணிகளாக காண முடியும். சீன அரசு நாட்டின் சனத்தொகையை கட்டுப்படுத்த மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறது என்று நண்பன் அருணன் சொன்னதில் உண்மை இல்லையென்றே நினைத்துக்கொண்டேன். அந்த தகவல் மையத்தில இருந்த பெண்மணியின் வீட்டுப்பிரச்சனை காரணமாக அவர் கடுப்பான மனநிலையில் இருந்ததால் அங்கிருந்து பயனுள்ள தகவல்கள் எதையும் பெறமுடியவில்லை. ஆனாலும் இங்கு வந்ததற்காக சில புகைப்படங்களை எடுத்துவிட்டு மீண்டும் வந்த பாதை வழியே எமது பயணத்தை தொடர்ந்தோம்.

Potters Hotel Brewery Resort
நுல்கபாவில் அமைந்துள்ள இந்த தங்கும் விடுதி வைன் சுவைக்கும் சுற்றுலாக்களில் வருபவர்கள் மத்தியில் பிரபலமானது.
Hunter Beer Co.
Hunter Beer Co. நுல்கபாவில் அமைந்துள்ள ஒரு பியர் தயாரிக்கும் நிறுவனம். இது பியர் தயாரிப்போடு கலந்த விடுமுறை வாய்ப்புகளை வழக்குகிறது. மட்டையாகி மகிழ்ச்சியாக இருக்கி பொருத்தமான இடம்.
Pokolbin, New South Wales
பொகோல்பினில் நாம் கண்ட ஒரு திராட்சைத் தோட்டம். இந்த பிரதேசமே பெரும்பாலும் திராட்சைத் தோட்டங்களால் நிறைந்திருக்கிறது.

அடுத்த பதிவில் நெல்சன் குடா…

பிரிவுகள்
பயணம்

ஒரு பயணத்தின் படக்கதை – தெற்காக டாரி வரை

பயணத் திகதி: நவம்பர் 22, 2010

கிறாப்டனில் இருந்து தெற்காக 80கிமீ பயணித்து நாம் கொப்ஸ் துறைமுகத்தை அடையும் போது பிற்பகல் 3 மணி ஆகியிருந்தது. மேகம் சூழ்ந்து மழை தூற ஆரப்பித்ததால் அங்கு சில படங்களை எடுத்து, சிறிது நேரம் உலாவிய பின்னர் பயணத்தை தொடர்ந்தோம்.

ஒரு பயணத்தின் படக்கதை - தெற்காக டாரி வரை

கொப்ஸ் துறைமுகம் (Coffs Harbour) நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் வடக்கு கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய சுற்றுலா நகரம். மலைகளாலும், தேசிய வனங்களாலும், அழகிய கடற்கரைகளாலும் சூழப்பட்டிருப்பதால் பெருநகரங்களிலிருந்து பலரையும் கவரும் ஒரு ஊராக இது திகழ்கிறது. சுற்றுலாத் துறையைத் தவிர வாழைப் பயிர்ச்செய்கையும் இங்கு ஒரு முக்கிய தொழிற்துறையாக இருக்கிறது.

கொப்ஸ் துறைமுகம் (Coffs Harbour)
கொப்ஸ் துறைமுகம் சிறுபடகுகளுக்கு பிரபலமான ஒரு துறைமுகம். இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளில் கணிசமானவர்கள் கடல் மாரக்கமாக பயணம் செய்து வருகிறார்கள்.
கொப்ஸ் துறைமுகத்தில் ஒரு படகு
கொப்ஸ் துறைமுகத்தில் ஒரு படகு. இங்கு நிறுத்தப்பட்டுள்ள படகுகளில் பெரும்பாலானவை விடுமுறைக்காலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுபவை.
Coffs Harbour Customs
கொப்ஸ் துறைமுகத்திலுள்ள சுங்க அலுவலகம். கடல்வழியாக கொண்டுவரக்கூடிய தாவர உயிரிகள், மற்றும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவது இவர்களின் முக்கிய பணியாகக் குறிப்பிடப்படுகிறது.

நாம் மேலும் 50கிமீ தெற்காக பயணித்து மாலை 4 மணியளவில் Nambucca Headsஐ அடைந்தோம். நம்புகா நதியின் முகத்துவாரத்துக்கு அண்மையில் அமைந்த இந்நகரம் அலைச்சறுக்கு விருப்பிகளுக்கு பிரபலமானது. நாம் வந்த நேரத்தில் ஊர் மூடத்தொடங்கியதால் Captain Cook Lookout பகுதியில் சில படங்களை கிளிக்கிய பின்னர் எமது பயணம் தொடர்ந்தது.

Nambucca Heads Estuary
நம்புக்கா நதி கடலுடன் சங்கமிக்கும் Nambucca Heads முகத்துவாரம்.
Captain Cook Lookout
நாம் பயணித்த வாடகை வண்டி Captain Cook Lookout குன்றின் உச்சியில்.

இன்னுமொரு 110கிமீ பயணம், பசிபிக் நெடுஞ்சாலையில் மணிக்கு 110கிமீ வேகத்தில் நாம் Port Maquarieஐ அடைந்த போது நேரம் மாலை 7.30. கோடை காலம் என்பதால் இன்னமும் வெளிச்சம் இருந்தது. பசி எம்மை அழைத்ததால் அங்கிருந்த ஒரு தாய் உணவகத்தில் இரவுக்கு பசியாறினோம்.

பொர்ட் மகுவாறி (Port Maquarie) நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் வடக்கு கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு பெரு நகரம். இது ஓய்வுபெற்றவர்கள் விரும்பி குடியேறும் ஒரு பிரதேசமாக குறிப்பிடப்படுகிறிது. 1879ல் அமைக்கப்பட்ட டக்கிங் பொயின்ட் கலங்கரை விளக்கம் (Tacking Point Lighthouse) இங்குள்ள ஒரு முக்கிய இடமாகும். அவுஸ்திரேலியாவின் மூன்றாவது பழைய கலங்கரை விளக்கம் என்று எமது கையேடு சொல்லியதால் அங்கு செல்வது என முடிவெடுத்து GPS இடம் சொன்னால் அது எம்மை அரைமணித்தியாலங்களுக்கு சுத்தலில் விட்டுவிட்டது.

The day sets down
மாலை மங்கும் நேரத்தில் டாரி நோக்கி பசிபிக் நெடுஞ்சாலையில்...

இரவு 8மணிக்குப் பின்னர் வானம் மிகவும் இருட்டிவிட்டதால் அங்கிருந்து  பயணத்தை தொடர முடிவுசெய்தோம். தெற்காக பசிபிக் நெடுஞ்சாலையில் முடிந்தவரை செல்லலாம் என்று 80கிமீ பயணித்து 9மணியளவில் டாரி என்னும் ஊரை அடைந்தோம். களைப்பும் தூக்கமும் நெடுச்சாலைப் பயணத்தின் எதிரிகள் எப்பதால் அந்த ஊரிலேயே இரவு தங்கினோம். இரண்டாம் நாளின் முடிவில் பயணித்த மொத்த தூரம் 802கிமீ, இரண்டாம் நாள் பயணித்த தூரம் 505கிமீ.

அடுத்த பதிவில் மூன்றாம் நாள்…

பிரிவுகள்
பயணம்

ஒரு பயணத்தின் படக்கதை – கிறாப்டன்

பயணத் திகதி: நவம்பர் 22, 2010

கிறாப்டன் கிளரன்ஸ் ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகரம். 1855ம் வருடம் அமைக்கப்பட்ட இந்நகரம் இந்த பிரந்தியத்தின் ஆரம்ப குடியேற்றங்களாலும் இன்றும் இருக்கும் பல பழைய கட்டடங்களாலும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த பிரந்தியத்தின் பிரதான விமான நிலையமும் கிறாப்டனிலேயே அமைந்துள்ளது.

ஒரு பயணத்தின் படக்கதை - கிறாப்டன்

யாம்பாவிலிருத்து பசிபிக் நெடுஞ்சாலையில் 60கிமீ தெற்காக பயணித்து கிறாப்டன் நகரை அடையும் போது நேரம் பகல் 12மணி. இங்கு பார்கக்கூடய இடங்களைப் பற்றி அறிவதற்கு பயணிகள் தகவல் மையத்திற்கு சென்றால், திங்கட்கிழமைகளில் பெரும்பாலான இடங்கள் இங்கு மூடி இருப்பதாக சொன்னார்கள். பகல் உணவை Hungry Jacksல் முடித்த பின்னர், பழைய நகரை சுற்றி ஒரு நகர்வலம் வந்து சில புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டோம். அங்கிருந்து கொப்ஸ் துறைமுகம் நோக்கி எமது பயணம் தொடர்ந்தது.

Retired
ஒரு பழைய நகரின் பழைய எரிபொருள் நிரப்பு நிலையம்.
Prince Street, Grafton
கிறாப்டன் கடைவீதி.
Grafton Clock Tower
கிறாப்டனின் மத்தியில் அமைந்துள்ள இந்த மணிக்கூட்டு கோபுரம் 1800களில் கட்டப்பட்டது.
Christ Church Cathedral, Grafton
1884ம் வருடம் கட்டப்பட்ட Christ Church Cathedral இந்த பிராந்தியத்தில் உள்ள பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும்.

அடுத்த பதிவில் கொப்ஸ் துறைமுகத்திலிருந்து டாரி வரை பயணிக்கலாம்…

பிரிவுகள்
பயணம்

ஒரு பயணத்தின் படக்கதை – யாம்பா

பயணத் திகதி: நவம்பர் 22, 2010

இரண்டாவது நாள் காலை 8 மணிக்கு விடிந்தது. பாணும் மீனும் தேநீரும் காலை உணவாகியது. பலீனாவில் பார்ப்பதற்கு எதுவும் இல்லாததால் அங்கிருத்த கோல்ஸ் அங்காடியில் மேலும் சில பொருட்களை வாங்கிய பின்னர் யாம்பா நோக்கி பயணித்தோம்.

ஒரு பயணத்தின் படக்கதை - யாம்பா

யாம்பா, பலீனாவிலிருது தெற்காக உள்ள ஒரு சிறு துறைமுக நகரம். பசிபிக் நெடுஞ்சாலையில் தெற்காக 80கிமீ பயணித்து, யாம்பா றோட் வழியாக கிழக்காக 15 கிமீ பயணித்தால் யாம்பா நகரை அடையலாம். இங்கிருக்கும் கலங்கரை விளக்கும் கடற்கரையும் பிரபல சுற்றுலா தலங்கள் என்று ஒரு வழிகாட்டி கையேடு சொன்னதால் இங்கு செல்ல முடிவெடுத்திருந்தோம். நாம் யாம்பாவை சென்றடையும் போது காலை 11மணி ஆகியிருந்தது. புகைப்படங்கள் எடுக்கவும் இளைப்பாறவும் சிறிது நேரம் அங்கு நிறுத்திய பின்னர் கிறாப்டன் நோக்கிய எமது பயணம் தொடர்ந்தது.

Pacific Highway
பசிபிக் நெடுஞ்சாலை வழியே பயணம்.
Chatsworth Island, New South Wales
பசிபிக் நெடுஞ்சாலையில் பலீனாவுக்கும் யாம்பாவுக்கும் இடையே ஆறுகளால் சூழப்பட்ட ஒரு பசுமையான பிரதேசம் சட்ஸ்வேர்த் தீவு.
Yamba Road
யாம்பா செல்லும் இந்த பாதை விவசாய நிலங்களும் பின்னர் சதுப்பு நிலங்களாலும் சூழப்பட்டுள்ளது.
The Clarence River Lighthouse at Yamba
Clarence River Light யாம்பாவில் அமைந்துள்ள ஒரு கலங்கரை விளக்கம். இங்குள்ள கலங்கரை விளக்கம் 1880ல் முதலில் கட்டப்பட்டுள்ளது. தற்போதுள்ள அமைப்பு 1955ல் நவீனமயப்படுத்தப்பட்டு கட்டப்பட்டுள்ளது.
Yamba Beach
அமைதியான நடுவெய்யில் நேரத்தில் யாம்பா கடற்கரை.

அடுத்த பதிவில் கிறாப்டன்…

பிரிவுகள்
பயணம்

ஒரு பயணத்தின் படக்கதை – நிம்பின்

பயணத் திகதி: நவம்பர் 21, 2010

எமது பயணத்தின் முதல் நாளில் நாம் சென்ற முக்கியமான ஊர் நிம்பின். இது நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், பிரபலமான பைரன் குடாவிலிருந்து 70 கிமீ மேற்காக அமைந்துள்ளது. நிம்பின் தொழிற்துறை ரீதியாக பின்தங்கிய ஒரு பிரதேசத்தில் இருந்தாலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த ஒரு கிராமமாக திகழ்கிறது. இது அவுஸ்திரேலிய Bundjalung பழங்குடி மக்களின் பூர்வீக இடமா கருதப்பட்டாலும், தற்காலத்தில் மாற்று கலாச்சாரங்களுக்கான ஒரு மையமாக உருவெடுத்துள்ளது.

ஒரு பயணத்தின் படக்கதை - நிம்பின்

நிம்பின் அவுஸ்திரேலியாவின் ‘கஞ்சா தலைநகரமாக’ கருதப்படுகிறது. இங்கு கஞ்சாவின் ‘நேரடி’ விற்பனை இல்லாவிட்டாலும், கஞ்சா கலாச்சாரம்/ஹிப்பி கலாச்சாரம் சார்ந்த ஏனைய பொருட்கள் இலகுவில் கிடைப்பது பலர் இந்த ஊரை நாடிவர முக்கிய காரணம் என குறிப்பிடப்படுகிறது. இங்கு வருடாந்தம் நடைபெறும் கஞ்சா மாநாட்டிற்கு அவுஸ்திரேலியாவிலிருந்து மட்டுமல்லாது பல வெளிநாடுகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொள்வது இந்த ஊரின் பெருமையைச் சொல்கிறது.

Nimbin Village
நிம்பின் கடைவீதி. இங்கு ஒரு 10-15 நிமிடங்கள் நடந்து திரிந்தால் சொர்க்கத்தில் பறக்கும் சுகத்தை அனுபவிக்க நேரலாம்.
Nimbin H.E.M.P. Embassy
இந்த பிரதேசத்தில் கிடைக்கும் பல்வேறு போதைப்பொருள்/கஞ்சா சார்ந்த பொருட்கள் பற்றிய விபரங்களை இங்கு பெறலாம். 1973ல் நடைபெற்ற கஞ்சா மாநாட்டிலிருத்து இவர்களின் சேவை தொடர்கிறது.
Nimbin School Of Arts
1904ம் வருடம் திறக்கப்பட்ட நிம்பின் கலைப் பாடசாலை இந்த பிரதேசத்தின் முதலாவது பொதுக் கட்டடம். தற்போது இது ஒரு ஊர் மண்டபமாக பயன்படுகிறது.
Nimbin Visitor Information Centre
நிம்பின் விருந்தினர் தகவல் மையம். இங்கு சுற்றுலா பயணிகளுக்கு இந்த பிரதேசத்தை பற்றிய பொதுவான தகவல்களை வழங்கப்படும். இந்த ஊரில் புத்தர் கடும் பிரபலம், காரணம் தான் தெரியவில்லை.
Nimbin Environment Center
நிம்பின் சூழல் மையம், இந்த பிரதேசத்தின் சூழலை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு சமூக நிறுவனம்.
Nimbin Business Hours
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஒரு கடை வாசலில் இருந்த திறந்திருக்கும் நேரங்கள் பட்டியல். இங்கு மக்கள் இருக்கும் 'நிலை' இதை வாசித்தால் புரியும்.
Nimbin Road
நிம்பினில் அதிக நேரம் தாமதித்தால் எங்களின் நிலை என்வாகும் என்பது தெரியாததால் நாம் மாலை மங்கும் நேரத்தில் அங்கிருந்து எமது பயணத்தை தொடர்ந்தோம்.

முதலாவது நாள் கிறாப்டன் நகருக்கு பயணிப்பதாக திட்டமிட்டிருந்தாலும், நிம்பின் நோக்கிய எமது பாதை விலகலால், இரவாகும் போது பைரன் குடாவிற்கு தெற்காக உள்ள பலீனா நகரில் தங்க முடிவெடுத்தோம். முதல் நாளில் 297கிமீ பயணம் செய்திருந்தோம். நாம் எடுத்துச் சென்றிருந்த பாணும் டூனாவும் எமது இரவு உணவாகியது.

அடுத்த பதிவில் யாம்பா…

பிரிவுகள்
பயணம்

ஒரு பயணத்தின் படக்கதை – முதல் நாள்

பயணத் திகதி: நவம்பர் 21, 2010

கடந்த வருடம் நவம்பர் மாதம் பிரிஸ்பேனிலிருந்து மெல்பேர்னுக்கு சென்ற road trip பற்றி ஒரு தொடர் பதிவு எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஆனாலும் நேரமின்மையால் அது சாத்தியமாவது போல் தெரியவில்லை. ஏற்கனவே இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. அந்த பயணத்தின் போது எடுத்த படங்களை ஒரு தொடராக இடுகிறேன். படங்களோடு ஆங்காங்கே எனது அனுபவங்களும் வரும்.

ஒரு பயணத்தின் படக்கதை

இது ஒரு குறுகிய காலத்தில் திட்டமிட்ட ஒரு நீண்ட பயணம். மூன்று மாநிலங்கள், பல நகரங்கள், பத்து நாட்கள் மற்றும் 3300 கிமீ நெடுஞ்சாலைப் பயணம் என்பதை ஒரு நீண்ட பயணம் என்று சொல்லலாம் தானே.  மெல்பேர்ணில் இருக்கும் நண்பன் அருணன் விடுமுறைக்காக நவம்பரில் பிரிஸ்பேன் வருவதாக முடிவாகிய பொது அவன் திரும்பிச் செல்கையில் காரில் செல்லலாமொ என்ற எண்ணம் தோன்றியது. எனக்கும் பல்கலைக்கழகத்தில் விடுமுறை சாத்தியம் என்பதால் இந்த பயணத்தை நவம்பர் முதல் வாரத்தில் திட்டமிட்டு கடைசி வாரத்தில் பயணம் சாத்தியமானது.

நவம்பர் 21, ஞாயிறு எமது பயணம் ஆரம்பமானது. காலை 10 மணிக்கு Hertzல் பதிவு செய்திருந்த Toyota Camry Altise வண்டியை எடுத்து, பாண் மற்றும் சில பொருட்களையும் வாங்கிய பின்னர், பசிபிக் நெடுஞ்சாலையில்  பயணம் ஆரம்பமானது. எமது முதலாவது நிறுத்தம் பிரிஸ்பேனுக்கு தெற்காக 100கிமீல் உள்ள டுவீட் ஹெட்ஸ் முனை.

Point Danger
Point Danger அவுஸ்திரேலியாவின் கிழக்கு கரையோரத்தில் தங்க கடற்கரை பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு முனைப் பகுதி. இது அவுஸ்திரேலிய மாநிலங்களான குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகியவற்றின் எல்லையாகவும் அமைகிறது.
Captain Cook Memorial Lighthouse
கப்டன் குக் நினைவு விளக்கு 1971ம் வருடம் கட்டப்பட்ட ஒரு கலங்கரை விளக்கம் ஆகும். இது குவின்ஸ்லாந்தின் குலங்கட்டாவுக்கும் நியூ சவுத் வேல்ஸின் டுவீட் ஹெட்ஸுக்கும் இடையிலான எல்லைக் கோட்டில் அமைந்துள்ளது.
Captain Cook Memorial Lighthouse
மண் நிறத்தில் இருப்பது குயின்ஸ்லாந்து, சாம்பல் நிறத்தில் இருப்பது நியூ சவுத் வேல்ஸ். இந்த மாநிலங்களின் எல்லை 1863ம் வருடம் முதல் இங்கு குறிக்கப்பட்டுள்ளது.
Old Lines
நிம்பின் கிராமத்தை நோக்கி பயணிக்கையில் எம்மோடு பயணித்த பாதை.
Nimbin Road
நிம்பின் கிராமத்தை நோக்கி நாம் பயணித்த பாதை, முழுதாக தார் பாதையாக இருந்தாலும் பல இடங்களில் மண் பாதை போலவும் இருந்தது, ஒரு கிராமத்துக்கே உரித்தான புழுதி வாசனையுடன்.
Mt Burrell Fruit
போகும் வழியிலே ஒரு பழக்கடையும், வாசலிலே குருவி விரட்டும் ஒரு வெருளியும்.

அடுத்த பதிவில் நிம்பின் கிராமத்தை பார்க்கலாம்…

பிரிவுகள்
அனுபவம்

எழுதாத சில பதிவுகள் – 2010

நான் ஒரு பதிவு எழுதாத பதிவராக என்னை நிலை நிறுத்திய வருடம் 2010. இந்த வருடம் எனது பழைய நாட்குறிப்புக்களை வைத்து தேற்றிய ஏழு பதிவுகளைத் தவிர்த்துப் பார்த்தால் ஐந்து பதிவுகளை மட்டுமே நான் பதிவு என்று நினைத்து எழுதியிருக்கிறேன். ஏன் என்று யோசித்தால் ஒரே ஒரு காரணம் தான் தோன்றுகிறது: எனக்கு எழுத வரவில்லை.

எழுதாத சில பதிவுகள் - 2010

நான் கதைகள் எழுத கதாசிரியனோ, கவிதைகள் புனைய கவுஜனோ இல்லை. என் வாழக்கையின் சில பக்கங்களை பதிந்து வைப்பதே எனது பதிவுகள். இங்கு எனது எண்ணங்களை எழுத்தாக மாற்றுவது அவ்வளவு சாத்தியமானதாக இல்லை. அதுவும் ஆங்கிலத்தில் எழுத முடிந்த அளவுக்கு தமிழில் எழுத முடிவதில்லை; தமிழ் சிக்கலானதாக இருக்கிறது. ஆங்கிலம் ததிங்கினத்தோம் ஆடிய ஒரு காலத்தில் தரமற்ற கட்டுரைகளானாலும் கருப்பொருளே இல்லாமல் 15-20 பக்கங்கள் (தமிழில்) எழுத முடிந்திருக்கிறது. இப்போது அது சாத்தியமாவது இல்லை. ஆங்கில எழுத்தின் கட்டமைப்பு அல்லது கட்டற்ற கட்டமைப்பு எனக்கு வாய்திருப்பது போல் தமிழ் எழுத்து வடிவத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. ஆங்கிலத்தில் எந்த டென்ஸ் (tense) என்று யோசிக்காமல் எழுதுவது போல் தமிழில் முடிவதில்லை. முக்கியமாக தமிழில் ஸ்பெல்லிங் (spelling) மிகவும் குழப்பமானதாக இருக்கிறது. எல்லாவற்றிலும் மிக முக்கியமாக மற்றவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் என்னால் எழுத முடிவதில்லை (உதாரணம்: இந்த பதிவு).

எழுத ஆரம்பித்து முடிக்காமலே பத்துக்கும் அதிகமான பதிவுகள் இருக்கின்றன. அவற்றில் பாதி ஒரு வருடத்துக்கும் பழையவை. அவற்றை இனியும் எழுதி முடிக்கும் எண்ணம் இல்லை. எனவே இந்த வருடத்தில் எழுதியிருக்க வேண்டிய சில பதிவுகளின் தொகுப்பாக, சம்பவங்களின் தொகுப்பாக இந்த பதிவு.

இந்த வருடம் ஆரம்பித்தபோது நான் கொழும்பில் ஒரு மென்பொருள் பொறியியலாளன். வருட இறுதியில் அவுஸ்திரேலியாவில் ஒரு ஆராச்சி மாணவன். கடந்து வந்த 12 மாதங்களில் பல நல்ல அனுபங்களையும் சில நல்ல மனிதர்களையும் கடந்து வந்திருக்கிறேன். நான் ஏப்ரல் 2009ல் மென்பொருள் பொறியியலாளனாக வேலைக்கு சேர்ந்த போதே எடுத்த ஒரு முடிவு மார்ச் 2010ல் வேலையை விடுவது. வேலையில் சேரும் போதே இதை சொல்லிவிட்டு வேலையில் சேர்ந்த ஒரு விசித்திரமான கதை அது. அதன் பின்னர் என்ன என்று திட்டமிட்டபோது முதன்மையாக இருந்தது ஆராய்ச்சி படிப்பு. இதில் சிறுவயது கனவு, இலட்சியம் என்று எதுவுமம் இல்லை, 3-4 வருடங்கள் திட்டமில்லாமல் கடந்து போகும் என்கிற சோம்பேறி திட்டம் மட்டுமே இருந்தது.

நான் 2009 இறுதியில் இருந்தே பல பல்கலைக்கழகங்களுக்கும் விண்ணப்பித்திருந்தேன். 2010இன் தொடக்கத்திலிருந்து அவர்களின் பதில்கள் வர ஆரம்பித்தன. தம்மிடம் என்னைவிட திறமையான விண்ணப்பங்கள் இருக்கின்றன என்று MIT (US) சொன்னது, மிகவும் நியாயமான கூற்று. Purdue (US) ஸ்காலர்ஷிப் தரமாட்டேன் என்று சொன்னது, நான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டேன். University of Wollongong (AU) ஸ்காலர்ஷிப் இல்லை என்றது, இருந்தாலும் நான் வருவதாக இல்லை என்று பதில் போட்டேன். University of New South Wales (AU) எல்லாம் தரலாம், செப்டெம்பரில் வா என்றது. National University of Singapore (SG) ஜூலையில் வா என்றது, Queensland University of Technology (AU) பெப்ரவரி 15 வா என்று ஜனவரி 30 மின்னஞ்சல் அனுப்பியது. கடைசியில் நான் ஏப்ரல் 30 வருவதாக QUTஐ சமாதானப்படுத்தினேன்.

மார்ச் 31க்கு பின்னர் வேலையில்லா வெட்டிப்பயலாக நண்பர்களோடு ஒரு இரண்டு வாரங்கள் செலவிட்ட பின்னர் ஏப்ரல் கடைசி வாரத்திலிருந்து அவுஸ்திரேலிய வாசம். இந்த புது தேசத்தில் என் முதல் மாத அனுபவங்கள் இங்கே.

இதற்கு பின்னரான எட்டு மாதங்களிலும் வாசித்தலும் எழுதுதலுமாகவே வாழ்க்கை கடந்து போய்விட்டது. தனிமையை விரும்பும் எனக்கு இந்த வாழ்க்கை மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. எப்போதாவது மனிதர்களுடனும் மிகுதி நேரம் எல்லாம் கணனியுடனும் எனது பொழுதுகள் நகர்கின்றன. ஆரம்பத்தில் விசித்திரமானதாக இருந்த ஒரு புது நாட்டின் வாழ்க்கை முறை, சில நாட்களிலேயே சாதாரணமானதாக மாறிவிட்டது. ஆரம்பத்தில் இரண்டு மாதங்கள் வசித்த வீடு மாணவர்களுக்கான ஒரு குடியிருப்பு, ஆண்களும் பெண்களுமான அந்த சர்வதேச மாணவர்களுடன் இருந்தது ஒரு வித்தியாசமான அனுபவம். அதன் பின்னர் தனித்த வீடும், மின்சாரம், தொலைபேசி, நீர் என்று கட்டணங்கள் செலுத்துவதும் ஒரு அனுபவம் தான்.

இதை தவிர சொல்லிக்கொள்ளும் படி செய்த மற்றுமொரு வேலை கண்டதையும் காணாததையும் படமெடுத்து திரிந்தது. எடுத்த சில படங்களை இங்கு காணலாம்.

கடைசியாக பயணிப்பதற்கென்றே விசாலமான இந்த நாட்டில் சில தலங்களை தரிசித்து வரும் வாய்ப்பு இந்த வருடத்தில் அமைந்தது. இரண்டு தடவை தங்க கடற்கரைக்கும், பிரிஸ்பேன் நகரை சுற்றிலும் உள்ள வேறு சில இடங்களுக்கும் அவ்வப்போது சென்று வந்திருக்கிறேன். நவம்பர் மாத இறுதியில் ஒரு 3300கிமீ பெரும் பயணம். பிரிஸ்பேனிலிருந்து மெல்பேர்ணுக்கு நண்பன் அருணனுடன் பயணித்தது. சிட்னி வழியாக பல சுற்றுலா நகரங்களையும் பார்த்து சென்ற இந்த பயணத்தின் இன்னுமொரு முக்கிய அம்சம் நான் முதன் முதலாக வாகனத்தை ஓட்டிச் சென்ற நீண்ட பயணம் இது.

படங்களுடன் இந்த பதிவை மேலும் தெளிவாக இங்கே வாசிக்கலாம்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்…

பிரிவுகள்
அனுபவம்

2010ல் டுவீட்டியவை

2010ம் வருடம் நான் தமிழில் பதிவுகள் தான் எழுதவில்லை என்று பார்த்தால் நான் அதிகம் தமிழில் டுவீட்டவும் இல்லை. இது எனது 2010 தமிழ் டுவீட்டுக்களின் தொகுப்பு. (இதுக்கெல்லாமா தொகுப்பு எண்டு கேக்கப்படாது).

2010ல் டுவீட்டியவை

 1. 2 Jan – புதுவருடத்தில் மீண்டும் ‘புது வெள்ளம்’ முடிந்தது இனி ‘சுழற்காற்று’ ஆரம்பம்…
  • இந்த வருடமும் நான் மீண்டும் ‘பொன்னியின் செல்வன்’ வாசித்தேன். இது எத்தனையாவது தடவை என்பதெல்லாம் நினைவில் இல்லை, ஆனால் ஒவ்வொரு முறையுமே அது புதிதாகவே இருக்கிறது.
      
 2. 8 Janசொந்த செலவில் சூனியம் வைக்க விரும்புவோர் கட்டணம் செலுத்தி உத்தமம் (INFITT) உறுப்பினராகலாம். (என்னாம கும்மியடிக்கிறாங்க…!) #தமிழ்
  • 25$ கட்டணம் செலுத்தி சேர்ந்து ஒரு வாரத்தின் பின் அது ஒரு கட்டண எரித சேவை போல இருப்பதாக உணர்ந்து எழுதியது. ஒரு வருடத்தில் அந்த கருத்து இன்னமும் வலுப்பெற்று அடுத்த வருடம் அங்கத்துவத்தை புதுப்பிப்பதில்லை என்று முடிவெடுத்தாயிற்று.
      
 3. 12 Sep – SMSம் Emailம் Facebookம் இல்லாத காலங்களில் காதல் கடிதம் என்று ஒன்று இருந்திருக்கிறது… http://bit.ly/nimal-tamil-blog-diary-2001
  • பழைய நாட்குறிப்பு ஒன்றை வைத்து நான் எழுதிய பதிவுகளின் தொகுப்பு. இந்த வருடம் நான் எழுதிய பதிவுகள் என்று இதைச் சொல்லலாம்.
      
 4. 25 Sepமா புளிச்சாலும் சப்பாத்தி சுடலாம், மா புளிக்காமலும் தோசை சுடலாம்…
  • சமயலும் கைப்பழக்கம்…
      
 5. 24 Oct – இங்கே இடியும் மழையும்…
  • பிரிஸ்பேனில் மழைகாலம் ஆரம்பம்.
      
 6. 3 Nov – தின்னத் தெரியாதவனுக்கு தான் பன்னு கிடைக்கும் – http://t.co/PcMiqZy
  • நான் பார்த்த ஒரு நல்ல குறும்படம். தமிழில் ஒரு சில நல்ல குறும்படங்கள் வந்த ஆண்டாகவும் 2010ஐ சொல்லலாம்.
      
 7. 10 Novதங்களை ஆன்மீகவாதிகள் என்று கூறிக்கொள்ளும் சில அரைகுறை வியாதிகளைப் பார்க்கும் போது தோன்றும், “நான் எவ்வளவோ பரவாயில்லை…!” 😉
  • அப்பப்ப இப்படி எதாவது கருத்துக்கள் கபால் என்று வந்து விழும், அதை உடனடியா டுவீட்ரில போடாட்டி பிறகு மறந்திடும்.
      
 8. 17 Nov – அடுத்த வாரம் சிட்னி என்னை இருகரங்கூப்பி வரவேற்கவிருக்கிறது.
  • சிட்னி பயணத்துக்கான முன்னறிவிப்பு.
      
 9. 24 Decஅந்தப்பக்கம் எலி, இந்தப்பக்கம் நான்… ஒரு புரிந்துணர்வோடு பொழுது போகிறது…!
  • இந்த வருட்த்தின் ஸ்டார் டுவீட் இதுதான்.
      
 10. 28 Dec – மன் மதன் அம்பு – எனக்கு பிடித்திருக்கிறது. விசேஷமான படம் என்று இல்லை, ஆனால் நல்ல படம். Good entertainer.
  • வருடத்தின் ஒரே ஒரு திரைப்பட டுவீட்.
      
பிரிவுகள்
காண்பவை

Ritu (2009) – வாழ்க்கையின் பதிவுகள்

நான் அண்மையில பார்த்த ஒரு மலையாள மொழி திரைப்படம் Ritu (பருவகாலம்). பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படம், வாழ்க்கையின் பல பருவங்களில் மாறிச்செல்லும் மூன்று நண்பர்களின் கதைகளை சொல்லிச் செல்கிறது. மகிழ்ச்சி, சோகம், நட்பு, காதல் என்று பல உணர்வுகளால் பின்னப்பட்ட ஒரு திரைப்படமாகவே நான் இதை பார்க்கிறேன்.

Ritu (2009)

சிறுவயது முதலாக நட்பாக இருக்கும் Sarath Varma, Varsha John மற்றும் Sunny Immatty. மூவரும் ஒன்றாக படித்து IT துறையில் வேலை செய்பவர்கள். கல்லூரி வாழ்க்கையின் பின்னர் ஷரத் அமெரிக்கா சென்றுவிட, மற்ற இருவரும் பெங்களூரில் வேலைக்கு சென்றுவிடுகிறார்கள். ஷரத் தன் நண்பர்களோடு ஒரு புதிய நிறுவனத்தை தொடங்கும் நோக்கில் மூன்று வருடங்களின் பின் திரும்பிவருகிறான். ஆனால் இந்த கால இடைவெளி அவர்களின் நட்பில் பல மாற்றங்கள். சொல்லாத காதல், மாறிய நட்பு, நண்பனின் துரோகம் என்று பல பரிமாணங்களில் செல்கிறது கதை.

நாம் எதை துரத்தி எதை இழக்கிறோம் என்பதை சொல்லாமல் சொல்கிறது இந்த திரைப்படம்.

பிரிவுகள்
பொது

சீதனம்: ஏன் தவறு இல்லை

நேற்று நண்பர்கள் சிலர் Facebookல் பகிர்ந்திருந்த ஒரு பதிவு “யாழ்ப்பாண மாப்பிளைகளின் தற்போதய சீதன பெறுமதி நிலவரங்கள்“. இதற்கு வந்திருந்த பெரும்பாலான பதில்கள் சீதனம் வாங்குவது தவறு/பிழை/கேவலம்/அவமானம் என்ற தொனியிலேயே அமைந்திருந்தன. இதில் சில கருத்துக்கள் ‘லம்பாக சீதனம் வாங்குறதுக்காகவே நாங்க லவ் பண்ணுறதில்ல’ போன்ற உயரிய நோக்கங்களோடு வாழ்ந்து வரும் சில நண்பர்களிடம் இருந்தும் வந்திருந்தன.

சீதனம்: ஏன் தவறு இல்லை

நானும் பல சந்தர்ப்பங்களில் பொதுப்புத்தியில் கதைக்கும் போது சீதனம் தவறு என்ற கண்ணோட்டத்துடனேயே கதைத்திருக்கிறேன். ஆனாலும் சற்று நிதானமாக யோசித்தால் அது ஏன் தவறு இல்லை என்று தோன்றுகிறது.

எமது சமூகத்தில் திருமணம் என்பது குடும்பம் என்ற சமூக கட்டமைப்பை உருவாக்க மட்டுமே (Not for life, but just to create a family). இங்கு திருமணங்கள் ஒரு சமூக அங்கீகாரத்துக்காக, சமூகத்தில் மதிக்கப்படுதல் என்ற தேவைக்காகவே மட்டுமே பெரும்பாலும் செய்யப்படுகிறது. இதில் காதல், கத்தரிக்காய், அவரக்காய் எல்லாம் திருமணத்தின் பின் தானாக வந்து ஒட்டிக்கொள்ளும் என்பது எமது காலமான நம்பிக்கை.

திருமணங்களைச் சுற்றியிருக்கும் நம்பிக்கைளும் சமூக அங்கீகாரத்துக்காகவே. எட்டோ பத்தோ பொருத்தங்கள் இருத்தால் மட்டுமே திருமணம் என்ற கொள்கைகள் கூட, டொக்டர் மாப்பிள்ளைக்காக ஒன்றிரண்டு பொருத்தங்கள் குறையலாம் என்ற உப கொள்கை மூலம் சமன் செய்யப்படும். இங்கு டொக்டர் மாப்பிள்ளைக்கு இருக்கும் சமூக அங்கீகாரம் (மூட) நம்பிக்கைகளையும் முட்டாள் நம்பிக்கைகள் ஆக்கி விடுகின்றன.

இங்கு சீதனமும் ஒரு சமூக அங்கீகாரம் தான். ஊருக்குள்ளே யார் அதிகம் கொடுத்தது, யார் அதிகம் வாங்கியது என்ற போட்டிகளும், 10 வருடங்களின் பின் எந்த மாப்பிளைக்கு அதிகம் சீதனம் என்ற prediction மூலம் A/Lல Maths அல்லது Bio தெரிவு செய்வதும், இவை எல்லாமே இந்த சமூக அங்கீகார தேடலின் தொடர்ச்சி.

இப்படி சமூக அங்கீகாரத்துக்காக மட்டுமே திருமணம் செய்யும் நாம் சீதனம் வாங்குவதும் சமூக அங்கீகாரத்துக்காக எனும் போது அதில் தவறு இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது. உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

(Post image uses a photo from jennifer könig, licensed under a Creative Commons Attribution license.)