கடந்த சில வாரங்களாகவே இணையத்தில் உலாவும் நேரம் குறைந்துவிட்டது. காரணங்கள் இங்கு முக்கியமில்லை. ஆனாலும் பேஸ்புக் டுவீட்டர் பக்கம் மட்டும் அவ்வப்போது தலைகாட்டி ஜனநாயக கடமையை நிறைவேற்றி விடுவதுண்டு. இந்த உலாவல்களில் தான் கடந்த சில நாட்களாக சிங்களத்தமிழர் என்ற ஒரு புதிய சொற்தொடர் பரவலாக பகிரப்படுவதை காணக்கிடைத்தது. (அதன் வரலாறு இங்கே. இதையும் இன்னும் சில பல பதிவுகளையும் வாசித்த பின்னரே அதன் பின்னணி அரைகுறையாகவாவது விளங்குகிறது!). இது பலருக்கு அதிச்சியான ஒரு சொற்தொடராக இருக்கலாம், சிலருக்கு தனிப்பட்ட ரீதியில் பாதிப்பதாகவும் இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி இருக்கவில்லை. ஏனென்றால், நானும் ஒரு சிங்களத்தமிழன்.
தமிழர் என்பது ஒரு இனம் இல்லை என்று நம்புபவன் நான். ஒரு மொழி பேசுவதால் மட்டுமே ஒரு இனமாக முடியாது. அதிலும் முக்கியமாக தமிழ் பேசுபவர்கள். எமக்குள் இருக்கும் ஒற்றுமையே எந்த அடிப்டையிலாவது வேற்றுமை பார்க்க முடிவது. அதைத்தாண்டி தமிழர் என்பது நூற்றுக்கணக்கான ஒத்த மொழி பேசும் குழுக்களை குறிக்கும் ஒரு பொதுப்பெயர். அவ்வளவு தான். தமிழ்த்தமிழர், ஆங்கிலத்தமிழர், சிங்களத்தமிழர் என்பதெல்லாம் தமிழரில் அடங்கும். இந்த அடிப்படையில் நானும் ஒரு சிங்களத்தமிழன்.

நான் பிறந்தது யாழ்ப்பாணம், ஈழத்தமிழர் வாழும் இடம். நான் வளர்ந்தது ஹப்புத்தலை, மலையகத்தமிழர் வாழும் இடம். (அதன் பின் இன்னும் சிறிது காலம் யாழ்ப்பாணம்). நான் படித்ததும் அதிக காலம் வாழ்ந்ததும் கொழும்பு, சிங்களத்தமிழர் வாழும் இடம். நான் இப்போது இருப்பது அவுஸ்திரேலியா, புலம்பெயர்தமிழர் வாழும் இடம். இவர்களைத் தவிர இலங்கைத்தமிழர், இந்தியத்தமிழர், சிங்கப்பூர்த்தமிழர், மலேசித்தமிழர் போன்ற பலவேறு தமிழர் இனக்குழுக்கழுடன் நெருங்கிப் பழகும் வாய்பும் எனக்கு கிடைத்திருக்கிறது. எனது இந்த அனுபவங்கள் நான் எந்தத்தமிழர் குழுவுக்குள் உள்ளடங்குகிறேன் என்பதில் எனக்குள் பல சந்தேகங்களைத் தோற்றுவித்திருக்கிறது. இந்த சூழலில் நான் ஒரு குழுவை தேர்ந்தெடுக்க பயன்படுத்தக்கூடிய அடிப்படை, நான் எங்கு அதிக காலம் வாழ்ந்திருக்கிறேன் என்பது. அவ்வகையில், நானும் ஒரு சிங்களத்தமிழன்.
இந்த தெரிவில் அரசியல் சார்பு, மதச் சார்பு போன்றவை எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது தெரியவில்லை. அவற்றயும் சேர்த்தால் இன்னும் சில பல உபபிரிவுதமிழர் குழுக்கள் இருக்கக்கூடும். ஆனால் இப்போதைக்கு நான் எனக்கான குழுவை தேர்தெடுத்திருக்கிறேன். இன்னும் சில காலத்தில் எனது அனுபவங்கள் மாறும் வேளையில் நான் வேறு ஒரு குழுவை தேர்ந்தெடுக்க கூடும். தமிழர் குழுக்கழுக்கு இடையில் மாறுவதற்கு மதமாற்றம் போன்ற சடங்குகளோ தடைகளோ இருப்பதாக தெரியவில்லை. அதுவரை, நானும் ஒரு சிங்களத்தமிழன்.
You must be logged in to post a comment.