பிரிவுகள்
தொழில்நுட்பம்

வின்டோஸ் கணனியில் லினக்ஸ் கோப்புக்கள்

மு.கு: லினக்ஸ் பிடிக்காதவர்களுக்காகவும். நீங்கள் இவ்வாறானவற்றை தெரிந்து கொள்வதன் மூலம், யாராவது இதைப்பற்றி கதைக்கு போது, “தெரியும், தெரியும்..!”, என பந்தா காட்டலாம். 😉

எனது மடிக்கணனி பெரும்பாலான நேரங்களில் லினக்ஸ் இயங்குதளத்திலேயே இயங்கினாலும் (Ubuntu/Vector/openSUSE), அவ்வப்போது விண்டோஸ் பக்கம் எட்டிப்பார்க்கும் ஆசை என் கணனிக்கும், தேவை எனக்கும் ஏற்படுவதுண்டு. அவ்வாறான நேரங்களில் லினக்ஸில் இருந்து சில கோப்புக்களை பயன்படுத்தும் தேவையும் ஏற்படுவதுண்டு.

இந்த தேவைக்காக இதுவரையும் நான் Explore2fs (தொ-1) (தொ-2) என்ற மென்பொருளையே பாவித்துவந்தேன். ஆனாலும் இதன் மூலம் கோப்புக்களை பிரதிசெய்தே பயன்படுத்த முடிவது இதை பாவிப்பதில் உள்ள அலுப்பான ஒர் விடையம். இருப்பினும் ஒருசில கோப்புக்கள் மட்டும் தேவைப்படுகையில் பயனுள்ளது.

எனவே இத்தேவைக்கான மாற்று வழிகளைப்பற்றி தேடியபோது இந்தப் பக்கம் சிக்கியது. இங்கு குறிப்பிட்டவற்றில் பலவழிகளிலும் சிறந்த்தாக கருதுவது Ext2 IFS For Windows. இதன் முக்கிய சிறப்பாக Ext2, Ext3 வகை partitionகளுக்கும் வாசிக்க, எழுத பயன்படும். அத்துடன் இது அனேக விண்டோஸ் பதிப்புக்களில் இயங்கும். (NT 4.0, 2000, XP, 2003, Vista)

மேலதிக விபரங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் தொடுப்புகள் வழி செல்க…!

கடைசியாக ஒரு கேள்வி, ‘partition‘ என்பதற்கு பொருத்தமான தமிழ்ப் பதம் என்ன?

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

பிரிவுகள்
காண்பவை

இருண்டு போன இதயங்கள் – குறும்டம்

எனது பாடசாலைக் காலத்தில் நண்பர்களுடன் இணைந்து செய்த வீடியோ குறும்படங்கள் பற்றி இந்த பதிவில் சொன்னவற்றின் தொடர்ச்சியான மேலும் சில தகவல்களை இங்கு பகிர்கிறேன்.

இருண்டு போன இதயங்கள்
ஏதோ செய்கிறோம் என்றில்லாமல், எதையாவது பயனுள்ள வகையில் சொல்ல வேண்டுமென்பதற்காக முயற்சி செய்தது. பாடசாலைக் கல்வியை முடித்து, கிடைத்த நேரத்தை வீண்டிக்கவும்(?), இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தால் நடாத்தப்பட்ட குறும்ட போட்டிக்காகவும் உருவாக்கப்பட்டது.

கதை/கரு: எயிட்ஸ் நோய் தொற்றுவதற்கு உடலுறவு தவிர்ந்த வேறுகாரணங்களும் உண்டு. தெரிந்த விடயம் தான் என்றாலும் பலரும் உணராதிருப்பது.

எழுத்து/இயக்கம் : நிஷாந்தனன்
தயாரிப்பு : விஜிராம்
படத்தொகுப்பு : நிமல்
ஒளிப்பதிவு : தனுஷியன், நிமல்
இசைக்கோர்வை : அருணன், சிந்துஜன்
தொழில்நுட்ப உதவி : கோகுல்
நடிகர்கள் : தினேஷ், நிஷாந்தனன், கோகுல், அருணன், சிந்துஜன், பகீரதன், ஜனார்த்தனன்

மேலதிக விபரங்களுக்கு உத்தியோகபூர்வ தளத்தை பார்க்கவும். 🙂

முழுமையான வீடியோ:

இனிமையான தயாரிப்பு நேரங்கள்: 😉

இது என(ம)து பழைய நினைவுகளை மீட்டிப்பார்க்கும் ஒரு பதிவு. மீண்டும் சந்திக்கலாம்.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

பிரிவுகள்
காண்பவை

அரங்கம் – இது எங்க (ஊர்) குறும்டம்

வணக்கம்,

இன்று காலை பகீ யின் ஊரோடி வலைப்பதிவில் இந்த பதிவையும் அதற்கான பின்னூட்டங்களையும் பார்த்த பின்புதான் இந்த பதிவை எழுதும் எண்ணம் வந்தது. இது கொஞ்சம் பழசு…. சுயதம்பட்டம் என்றும் சொல்ல்லாம்…

எனது பாடசாலைக் காலத்தில் நண்பர்களுடன் இணைந்து செய்த சில வீடியோ குறும்படங்கள் இரண்டைப்பற்றி சில தகவல்களை இங்கு பகிர்கிறேன்.

அரங்கம் – The Arena
கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் நாடகமன்ற 2004ம் வருட ஆண்டு விழாவினை முன்னிறுத்தி உருவானது. கதை, போட்டி, பொறாமை தொடர்பான ஒரு மர்ம கதை(?). இது பாடசாலை காலத்தில் முற்று முழுதாக பாடசாலை மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு 30 நிமிட குறும்படம். ஆகவே அதிகம் எதிர்பார்க்க வேண்டாம்.

இயக்கம் : சுந்தரகுமார்
எழுத்து : நிஷாந்தனன்
படத்தொகுப்பு : கோகுல்
ஒளிப்பதிவு : தனுஷியன்
இசைக்கோர்வை : அருணன், சிந்துஜன்
தொழில்நுட்ப உதவி : நிமல் 😉
மேலும் … றோயல் கல்லூரி 2004 குழு தமிழ் மாணவர்கள் …!

இதுதான் எமது முதல் முயற்சி, ஒரு சிறு முயற்சி. ஆனாலும் அந்த முயற்சி ஒரு இனிய அனுபவம்.

அடுத்த பதிவில் ‘இருண்டு போன இதயங்கள்‘ பற்றி பார்க்கலாம்.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

பிரிவுகள்
பொது

வலைப்பதிவுகளில் நான்

வலைப்பதிவு எழுத தொடங்கி ஒரு வாரம் ஆகமுன்னரே ‘வலைப்பதிவுகளில் நான்’ என்றமாதிரியான வரலாறு எழுதுவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனாலும் இது ஒரு சிறு அறிமுகம், நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதற்கு.

நான் முதல் முதலாக வலைப்பதிவொன்றை ஆரம்பித்தது 2005ம் வருட காலப்பகுதியில். அப்போது தமிழ் வலைப்பதிவுகள் தொடர்பாக நான் பெரிதாக அறிந்திருக்கவில்லை. அதனால் நான் எனது TalkOut வலைப்பதிவில் ஆங்கிலத்திலேயே எழுத ஆரம்பித்தேன். அப்போது நான் ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்தது அதற்கு இன்னொரு முக்கிய காரணியாக அமைந்தது. பாடசாலைக்கல்வியை தமிழில் கற்றதாலும் ஏதாவது ஒரு பட்டப்படிப்பை படிக்கும் நோக்கம் இருந்ததாலும், ஆங்கிலம் கற்கவேண்டிய ஒரு தேவை இருந்தது. அதன்காரணமாக நான் ஆரம்பித்தது தான் இந்த வலைப்பதிவு. ஆனால் அதுவும் பத்திற்கும் குறைவான பதிவுகளுடன் நின்றுபோனது. காரணம் பெரிதாக ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை… 🙂 அதன் பின்னராக Yahoo 360ல் ஒரு இரண்டு பதிவுகள் எழுதினேன், ஆனால் அதிலும் தொடரவில்லை.

இறுதியாக 2006ல் (July 19, 2006) Bloggerல் நான் ஆரம்பித்ததுதான் The TalkOut Trojans! வலைப்பதிவு. (இந்த பெயரைப்பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன்…) இதையும் நான் எனக்கான ஒரு கற்றல் தளமாகவே கருதினேன். கடந்த ஒன்றரை வருடமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்று வரை ஒரு 64 பதிவுகள் (ஆஹா… உண்மை… நம்புங்க…!) எழுதியாகிவிட்டது. அவற்றில் பல என்னுடைய சுயதம்பட்ட பதிவுகளாகவும், இன்னும் சில கணிமை தொடர்பானவை என்று சொல்லக்கூடிய வகையிலும் அமைந்தவை. ஆங்காங்கே ஒருசில பதிவுகள் தமிழில் அமைந்தாலும், பெரும்பாலானவை ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டவை. இவை தவிர இன்னும் சில கூட்டு வலைப்பதிவுகளில் இருந்தாலும், அவற்றிலெல்லாம் குறிப்பிடத்தக்க பங்களிப்பு இருந்ததில்லை.

ஆனாலும் நீண்ட நாட்களாகவே மனதிலிருந்த தமிழ் வலைப்பதிவு ஆசையும் இந்த வலைப்பதிவு வாயிலாக நிறைவேறுகிறது.

இந்த பதிவை இதுவரை வாசித்திருந்தாலே அது உங்களின் பொறுமையை காட்டுகிறது. 🙂 ஆதலால் இப்பதிவை இத்துடன் முடிக்கிறேன். இன்னொரு பதிவில் சந்திக்கலாம்.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

பிரிவுகள்
காண்பவை

பங்குனி மாத பிரதிபலிப்புக்கள்

வணக்கம்,

நான் தமிழில் எழுதுவதற்காக இந்த வலைப்பதிவு ஆரம்பித்தாலும் முதலாவது பதிவுக்கு பிறகு எதை எழுதுவது என்று ஒரே குழப்பம். (அதிகம் தெரிந்தோர்க்கும், ஒன்றும் அறியாதோர்க்கும் இந்த நிலை சகஜம் தானே…!)

ஆக இந்தக் குழப்பத்தில் இருந்த நேரம் தான் PIT போட்டியில் படம் காட்டலாம் என்கிற ஒரு எண்ணம். இந்த மாதம் பிரதிபலிப்புக்கள் என்ற தலைப்பில் படம் காட்ட வேண்டும் என்பதற்காக எடுத்த இரு படங்கள் தான் இவை.

வாதுவ கடற்கரை, இலங்கை. மாலை 6 மணி.

வீட்டு குளியலறை. இரவு 10 மணி

படம் காட்டியாச்சு. பின்னூட்டம் போடுபவர்கள் போடலாம். பதிலுக்கு உங்கள் பதிவிலும் ஒரு பின்னூட்டம் போடப்படும் :). அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

பிரிவுகள்
பொது

இந்த வலைப்பதிவு…? இன்று…? ஏன்…?

வணக்கம்,

நீண்ட நாட்களாக பல வலைப்பதிவுகளை வாசித்த அனுபவத்தில் நான் அறிந்த ஒரு விடயம், முதலாவது பதிவிற்கு ‘வணக்கம்’ என்ற சொல் இருக்கத்தக்கவாறான தலைப்பை வைப்பது வழக்கமாக உள்ளது. ஆனாலும் ஒரு மாறுதலாக ‘பரீட்சார்த்த பதிவு’ என்று ஆரப்பித்தாகி விட்டது.

அடுத்து என்ன எழுதலாம் என்றால், சரியாக எதுவும் யோசிக்க முடியவில்லை. (வேலைப்பளு அதிகம் என்று(ம்) காரணம் கூறலாம்…) ஆனாலும் எதையாவது எழுதலாம் என்று தொடங்கித்தான் இவ்வாறு அரற்றி/அலட்டிக் கொண்டிருக்கிறேன். இதற்கு மேலும் இவ்வாறு எழுதினால் இதை மொக்கைப் பதிவு என்று இந்திய நண்பர்கள் சொல்லிவிடுவார்கள் என்பதால் (இலங்கையில் மொக்கை என்ற வார்த்தை அதிகம் பாவிக்கப்படுவதில்லை) அடுத்த விடையத்திற்கு வரலாம்.

ஏன் இன்றைய தினம்?

இன்றைய தினம் (29/02/2008) இந்த வலைப்பதிவை தொடங்க காரணம், எதாவது ஒரு காரணத்தால் இந்த வலைப்பதிவு அகில உலக பிரபலமாகினால், உலகெங்கும் பரந்துவாழும் ரசிக பெருமக்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காக வருடாந்தம் பெருவாரியாக செலவுசெய்வதை தவிர்த்து, நான்கு வருடங்களுக்கு ஒரு முறையாக மட்டுப்படுத்தவே. 🙂

ஏன்? தமிழில் ஏன்?

இவை எனக்கும் உள்ள கேள்விகள். முக்கிய காரணம் எனக்கு தமிழ் மறக்கிறது. என்ன..? ஆம், நான் தமிழ் மொழிமூல பாடசாலையிலேயெ கல்விகற்றேன், எனக்கு தமிழ் ஒரு வாசகனாக பலவற்றை கொடுத்திருக்கிறது. அவ்வாறிருக்க இது என்ன கதை..? ஆனாலும் இதுதான் கசப்பான உண்மை.

காரணம்… தமிழில் எழுதி பலகாலமாகிறது. பல்கலைக்கழகம் சென்ற பின், ஆங்கில மொழி அறிவை பெற்று ஆங்கிலத்திலேயே எல்லா எழுத்து நடவடிக்கைகளையும் செய்வேண்டி உள்ளது. தமிழில் வாசிப்பதை தவிர்த்து வேறெதுவும் இல்லை. இது எனது தமிழில் ஒரு தேக்க நிலையை தேற்றுவித்துவிட்டது. உதாரணத்திற்கு, நான் இப்போது எழுதுவது கூட ஒரு நிலையான உரைநடையில் இல்லை. ஆகவே எனது தமிழறிவை நான் மீளப்பெற வேண்டும்.

தமிழனாய் இருந்து தமிழ் சரியாக தெரியாது என்று கூறுவது வெட்கக்கேடானது தான். ஆனாலும் அவ்வாறே இருக்காமல் மாற்றத்திற்காய் முயல்வது எவ்வளவோ மேல்…! ஆகவேதான் இந்த வலைப்பதிவு.

நான் உங்களுடம் இருந்தது ஒன்றைத்தான் எதிர்பார்க்கிறேன், நான் விடும் பிழைகளை தயவுசெய்து சுட்டிக் காட்டவும். இதற்கு ஈடாக என்ன தருவேன்..?

  • உங்களுக்கு ஒரு வலைப்பதிவு இருந்தால் அங்கு சில பின்னூட்டங்கள் போடுவேன். 🙂
  • இல்லை, என்னால் முடிந்தால் பயனுள்ள விடையங்களை தமிழில் எழுதுவேன்…!

மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

பிரிவுகள்
பொது

பரீட்சார்த்த பதிவு

வணக்கம் நண்பர்களே,

இதுவரை தமிழ் வலைபதிவுகளின் வாசகனாக இருந்த நான் இன்றுமுதல் ஒரு வலைப்பதிவராக(?) மாறுகிறேன். நீண்ட நாட்களாகவே தமிழில் ஒரு வலைப்பதிவை ஆரம்பிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், இன்றுதான் அது கைகூடியுள்ளது.

இது ஒரு பரீட்சார்த்த பதிவு (சோதனைப் பதிவு) என்பதால் அடுத்த பதிவிலிருந்து உருப்படியான(?) விடையங்களுடன் சந்திக்கலாம்.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்