பிரிவுகள்
பயணம்

யாதும் ஊரே – ஒளியாவணத் தொடர் – பிரித்தானிய அருங்காட்சியகம்

பயணம் என்பதும் ஊர் சுற்றுதல் என்பதும் மகிழ்ச்சி சார்ந்தது மட்டுமில்லாமல் எமது பார்வையை விரிவாக்கவும் அவசியமானது என்பது எனது எண்ணம். நீண்ட நாட்களாகவே தமிழில் ஒரு பயண ஆவணத்தொடர் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அது சாத்தியப்படவில்லை. (காரணம்? சோம்பேறித்தனம்?)

ஆவணப்படங்கள் என்பதே அரிதாக உள்ள ஒரு தமிழ்ச் சூழலில் ஒரு பயணம் சார்ந்த ஆவணப்பட முயற்சியாக வந்திருக்கிறது யாதும் ஊரே. அதன் முதலாவது அத்தியாயம் பிரித்தானிய அருங்காட்சியகம் பற்றிய விரிவான பல தகவல்களுடன் இப்போது YouTube இல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழிலே ஆதாரிக்கப்படவேண்டிய ஒரு முயற்சி. பார்த்த விட்டு உங்கள் கருத்துக்களை குழுவின் YouTube பக்கத்திலோ Facebook பக்கத்திலோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

பிரிவுகள்
பயணம் Oliyoodai Tamil Podcast

துவும்பா – அவுஸ்திரேலியாவின் பூங்கா நகரம்

துவும்பா: குவின்ஸ்லாந்து மாநிலத்தின் தலைநகர் பிரிஸ்பேனில் இருந்து 130 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கிறது இந்த ரம்யமான அவுஸ்திரேலிய நகரம். பிரபலமான Great Dividing Range மலைத்தொடரின் மகுடமாக திகழும் துவும்பா, கடல்மட்டத்திலிருந்து 700 மீற்றர் உயரத்தில் அமைந்திருக்கிறது.

நூற்றைம்பதுக்கும் அதிகமான பூங்காக்களும் பூந்தோட்டங்களும் நிறைந்திருக்கும் துவும்பாவுக்கு பூங்கா நகரம் என்பது மிகவும் பொருத்தமான ஒரு பெயர்தான். இயற்கையையும் அழகியலையும் ஒன்றாக கண்டுகழிக்க பல பிரபலமான பூங்காக்கள் நகரச் சுற்றிலும் அமைந்திருக்கின்றன.

நகர மத்தியிலேயே இருக்கும் Queens பூங்காவும் அதனோடு இணைந்த தாவரவியல் பூங்காவும் வருடத்தின் எந்த காலத்திலும் அழகிய மலர்க் காட்சிகளைக் கண்டுகளிப்பதற்கு முதன்மையான இடமாகும். நூற்றுக்கணக்கான வாசனை மலர்களால் நிறைந்திருக்கும் Laurel Bank பூங்காவில் சில மணிநேரங்களைக்கூட நாம் செலவிடலாம்.

துவும்பாவில் பல்வேறு சர்வதேச பின்னணிகளை கொண்ட சிறப்பு பூக்காகளும் இருக்கின்றன. தென் குவின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஜப்பானிய பூந்தோட்டம், Annand ஏரிக்கு அருகே இருக்கும் நியூசிலாந்து பூங்கா, மற்றும் ஈரநில தாவரங்களின் பூங்கா என்பன இவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை.

ஆண்டு பூராவும் அழகியலோடு நம்மை வரவேற்கும் துவும்பா வண்ணமயமான மலர்கள் பூத்துக்குலுங்கும் வசந்தகாலத்தில் இன்னமும் ரம்யமானது. ஆண்டு தோறும் செப்டெம்பர் மாதம் துவும்பாவில் மலர்களின் திருவிழா கொண்டாடப்படுகிறது. பத்து நாட்கள் நீடிக்கும் இந்த கொண்டாட்டத்தில் Grand Central மலர் அணிவகுப்பு, உட்பட பல போட்டிகள், சமூக நிகழ்ச்சிகள் என்று நகரே களைகட்டியிருக்கும்.

துவும்பா நகரின் வரலாறு இங்கிருக்கும் பல கட்டடங்களிலும் அருங்காட்சியகங்களிலும் பாதுகாக்கப்படுகிறது. நகரின் மத்தியில் இருக்கும் Heritage Street மற்றும் Russell Street பாரம்பரிய கட்டடங்களால் நிறைந்த இரு முக்கிய இடங்களாகும். இங்கிருக்கும் City Hall மற்றும் Empire Theatre கட்டடங்கள் சிறந்த கட்டிடக்கலைக்கும் மீளமைக்கப்பட்ட ஓவிய அலங்காரங்களுக்கும் பிரபலமானவை.

துவும்பா செல்லும் எல்லோருமே தவறாமல் பார்க்கவேண்டிய இன்னுமொரு இடம் Cobb & Co அருங்காட்சியகம். அவுஸ்திரேலியாவின் போக்குவரத்து பாரம்பரியத்தை குறிக்கும் பல்வேறு காட்சிப் பொருட்கள், வாகனங்கள், குதிரை வண்டில்கள் என நிறைந்திருக்கிறது இந்த அருங்காட்சியகம். துவும்பா நகரின் ஓரமாக இருக்கும் Picnic Point, ஒரு சுற்றுலா நாளின் இறுதியை ஓய்வாக களிப்பதற்கு சிறப்பான இடம்.

துவும்பா நகருக்கான ஒரு சுற்றுலா சிறிவர் பெரியோர் என அனைவருக்குமே உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரக்கூடியது. அழகியலை ரசிப்பவர்களும் இயற்கையை விரும்புபவர்களும் வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களும் வாழ்வில் சிறந்த தருணங்களை நாடுபவர்களும் தவறவிடக்கூடாத ஒரு நகரம், துவும்பா.

பிரிவுகள்
பயணம் Oliyoodai Tamil Podcast

எஸ்க் – சுற்றிப் பார்க்க ஒரு சிற்றூர்

எஸ்க், அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இருக்கும் ஒரு சிறு நகரம், சிற்றூர் என்று கூடச் சொல்லலாம். பிரிஸ்பேன் நகரத்தில் இருந்து ஒன்றரை மணிநேர பயண தூரத்தில் இருக்கிறது இந்த ஒரு விடுமுறை நகரம்.

இது திறந்தவெளிச் செயற்பாடுகளில் ஆர்வம் உள்ள எல்லோருமே விரும்பக்கூடிய ரம்யமான ஒரு இடம். பல நீர்த்தேக்கங்களாலும் நீர்நிலைகளாலும் சூழப்பட்டு இருப்பதால் இந்த பிராந்தியம் பலவகையான நீர் விளையாட்டுக்களுக்கும் பிரபலமானது. இரவுகளில் முகாமிட்டு தங்குவதற்கான பல இடங்களும் இருக்கின்றன.

எஸ்கில் ஒரு சுற்றுலாவுக்கு எதிர்பார்கக்கூடிய அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன. வார இறுதிகளில் ஒன்றோ இரண்டு நாடகளை குடும்பமாகவோ நண்பர்களுடனோ கழிக்கவிருபினால் எஸ்க் ஒரு சிறந்த பயணத்தலமாக இருக்கும்.

Download

பிரிவுகள்
பயணம் Oliyoodai Tamil Podcast

லோன் பைன் கோவாலா சரணாலயம்

லோன் பைன் கோவாலா சரணாலயம் 130க்கும் அதிகமான கோவாலாக்களைக் கொண்ட உலகின் முதலாவதும் பெரிதுமான கோவாலா சரணாலயமாகும். அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தலைநகரான பிரிஸ்பேன் நகருக்கும் கோல்ட் கோஸ்ட் நகருக்கும் அண்மையில் அமைந்துள்ள இந்த சரணாலயம், பலவகையான சுற்றிலாப் பிரயாணிகளையும் கவரும் ஒரு பிரதான இடமாகும்.

கோவாலாக்கள் அவுஸ்திரேலியாவுக்கே உரித்தான விலங்குகளில் முக்கியமானவை. லொன் பைன் அழகிய சோம்பேறிகளான கோவாலாக்களை பார்கக்கூடிய ஒரு முக்கிய இடமாகும். அத்தொடு இங்கு கோவாலாக்களுன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முடிவதும் விசேடமானதாகும்.

லோன் பைனில் கோவாலாக்கள் மட்டுமல்லாமல் காங்காருகள், காட்டு நாய்கள், கழுகுகள், ஆந்தைகள் என பல வகையான அவுஸ்திரேலிய விலங்குகளுக்கும் பறவைகளும் உள்ளன. லோன் பைன் சரணாலயத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் முக்கிய அம்சமாக கோவாலாக்கள் இருந்தாலும், பாம்புகளுன் படம் எடுத்துல், கங்காருகளுக்கும் பறவைகளுக்கும் உணவூட்டுதல் போன்ற நடவடிக்கைகளும் முக்கியமானவை. இவற்றைத் தவிரவும் செம்மறி ஆடுகள் காட்சியும் பறவைகள் காட்சியும் தவறவிடாமல் பார்க்கவேண்டிய நிகழ்ச்சிகளாகும்.

ஆகவே, எப்போதாவது பிரிஸ்பேனுக்கோ, கோல்ட் கோஸ்டுக்கோ வந்தால் தவறாமல் லோன் பைன் கோவாலா சரணாலயத்துக்கும் வந்து செல்லுங்கள்.

Download

பிரிவுகள்
பயணம்

ஒரு பயணத்தின் படக்கதை – பெருஞ் சமுத்திர சாலை

பயணத் திகதி: நவம்பர் 28, 2010

எட்டாம் நாள் மெல்பேர்னில் 7.30க்கு விடிந்தது. அருணனின் வீட்டுக்கு அண்மையில் இருந்த ஒரு McDonnald’sல் காலை உணவை முடித்த பின்னர், வாகனத்துக்கு எரிபொருள் நிரப்பச் சென்றோம். அங்கு ஒரு வாகனத்தோடு நான் எமது வாகனத்தை உராசி, அதை கதைத்து சமாளித்த பின்னர் Geelong நோக்கி செல்லலானோம்.

ஒரு பயணத்தின் படக்கதை - பெருங்கடல் பாதைஇன்று Great Ocean Road போவது என்று முடிவு செய்திருந்தாலும் எம்மிடம் சரியான திட்டம் இருக்காததால் Lara எனும் இடத்தில் இருந்த தகவல் நிலையத்தில் பொருத்தமான பயண வழி பற்றி கேட்டறிந்தோம். அவர்கள் Port Campbellல் தொடங்கி கிழக்காக பயணிப்பது பொருத்தமாயிருக்கும் என கூறினார்கள். அங்கிருந்து நாம் Geelong வரை தொடர்ந்து, Geelong கடற்கரையில் சில புகைப்படங்களை எடுத்து, சிறிது நேரம் உலாவிய பின்னர் பயணத்தை தொடர்ந்தோம்.

ஜிலோங் கடற்கரை
ஜிலோங் கடற்கரை

Geelong Waterfront Bollards
ஜிலோங் கடற்கரையில் மர மனிதர்கள்

ஜிலோங் கடற்கரையில்
ஜிலோங் கடற்கரையில் நான்

Princes Highway, Victoria
Geelongல் இருந்து புறப்பட்டு Princess Highwayல் Colac வழியாக Port Campbell நோக்கி பயணிக்கலானோம்.

Great Ocean Road அவுஸ்த்திரேலிய விக்டோரிய மாநிலத்தில் இருக்கும் 243கிமீ நீளமான ஒரு பிரபலமான பாதை. முதலாம் உலகப் போர் நினைவாக கட்டப்பட்ட இந்த பாதை உலகின் பெரிய போர் நினைவிடமாகவும் இருக்கிறது. இந்த பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கியமான இடமாகவும் இது இருக்கிறது.

Port Campbell
கம்பெல் துறைமுகம் (Port Campbell)

Seagulls at Port Campbell
கடற்கரையில் கூட்டமாக பறந்து திரியும் சீகல் பறவைகள்

Break Free
கடற்கரையில் கூட்டமாக பறந்து திரியும் சீகல் பறவைகள்

எமது Great Ocean Road பயணம் Port Campbellல் ஆரம்பித்தது. அங்கிருந்த ஒரு சிறிய உணவகத்தில் பகல் உணவை உண்ட பின்னர் Great Ocean Road வழியாக Twelve Apostles நோக்கி எமது பயணம் நகர்ந்தது.

The Twelve Apostles
அந்த பன்னிரெண்டு தூதுவர்கள் (The Twelve Apostles)

The Twelve Apostles
அதே பன்னிரெண்டு தூதுவர்கள் (The Twelve Apostles)

The Twelve Apostles
இது வலது பக்கம்

The Twelve Apostles
இது இடது பக்கம்

The Twelve Apostles
பன்னிரெண்டில் இரண்டு

The Twelve Apostles
கடலோர மலைப்பாறைகள்

The Twelve Apostles
பன்னிரேண்டு தூதுவர்களும் அருகே நானும்

மீண்டும் Great Ocean Road வழியே தொடர்ந்தோம். பல இடங்களில் பாதை அதிக வளைவுகளை கொண்டிருந்ததுடன் வேகக் கட்டுப்பாடும் இருந்தது. ஆனாலும் அருணன் பெரும்பாலான நேரங்களில் சயனத்தில் இருந்ததால், நான் வேகக் கட்டுப்பாடுகளை மதிக்காமல் வாகனத்தை செலுத்த முடிந்தது. அந்த நேரத்தில் அது சாதாரணமாக இருந்தாலும், இப்போது நினைத்தால் சற்று பயங்கராமாகவே இருக்கிறது. வழி வழியே சில இடங்களில் நிறுத்தி புகைப்படங்களை எடுத்தபடி பயணம் தொடர்ந்தது.

Great Ocean Road
குறுக்கே பெரிய வண்டி வந்தாலும் கெட்ட சகுனம் தான்...

Castle Cove
Castle Cove

Great Ocean Road
கடலும் மலையும் பசுமையும் சூழ்ந்த Great Ocean Road

Great Ocean Road வழியே நாம் Apollo Bayஐ நெருங்கும் போது மாலையாகிருந்தது. வானமும் மேகமூட்டங்களால் நிறைந்திருந்தது. தொடர்ந்து அதே பாதையில் பயணிப்பது பொருத்தமானதாக இல்லாததால் நாம் மீண்டும் மெல்பேர்ன் நோக்கி பயணிக்கலானோம்.

Apollo Bay, Victoria
அப்போலோ குடா

West Barwon Reservoir
அப்போலோ குடாவிலிருந்து கொலாக் வரும் வழியில்

West Barwon Reservoir
West Barwon Reservoir

வழியில் Glen Waverleyல் இருக்கும் Curry & Chips என்கிற இலங்கை உணவகத்தில் இரவு உணவு வாங்கிய பின்னர் வீடு திரும்பினோம். இன்று பயணித்த தூரம் 604.1கிமீ. இதுவரை பயணித்த மொத்த தூரம் 3290கிமீ.

அடுத்த பதிவில் மெல்பேர்னில் கடைசி இரண்டு நாட்கள்…

பிரிவுகள்
பயணம்

ஒரு பயணத்தின் படக்கதை – சிட்னியில் இருந்து மெல்பேர்ன்

பயணத் திகதி: நவம்பர் 27, 2010

கடந்த இரண்டு நாட்களும் சிட்னியில் இடியப்ப உரல் வாங்குவது போன்ற முக்கியமான தனிப்பட்ட வேலைகளைச் செய்வதில் செலவிட்ட பின்னர், 7ம் நாளான இன்று மெல்பேர்ன் நோக்கி எமது பயணத்தை மீள ஆரம்பித்தோம். அதிகாலை 5.30க்கே எழுத்து தயாராகி 6 மணியளவில் நாம் ஹியூம் நெடுஞ்சாலை நோக்கி சென்றுகொண்டிருந்தோம்.

ஒரு பயணத்தின் படக்கதை - சிட்னியில் இருந்து மெல்பேர்ன்

ஹியூம் நெடுஞ்சாலை (Hume Highway) சிட்னியையும் மெல்பேர்னையும் இணைக்கும் பிரதானமான அதிவேக நெடுஞ்சாலை. பெரும்பாலான இடங்களில் வெளியான சமதரைப் பிரதேசங்களுக்கூடாகவும் சில சிறு நகரங்களுக்கூடாகவும் செல்லும் இந்த பாதையில் அனேகமாக இடங்களில் 110கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். அடுத்த 3 மணித்தியாலங்களுக்கு எங்கும் நிறுத்தாமல் பயணித்து 9 நெடுஞ்சாலை ஓர நிறுத்தம் ஒன்றில் மணியளவில் காலை உணவுக்காக நிறுத்தினோம். வழக்கமான காலை உணவை முடித்த பின்னர் சிறிது நேரம் தாமதித்து Gundagai நோக்கி பயணிக்கலானோம். வழியில் யாஸ் (Yass) என்ற நகருக்கு அண்மையில் ஒரு BP நிரப்பு நிலையத்தில் எமது வாகனத்துக்கும், அருகே இருந்த ஒரு KFC உணவக்கதில் எமக்கும் எரிபொருள் நிரப்பிக் கொண்டு பயணத்தைத் தொடரந்தோம்.

Hume Highway
ஹியூம் நெடுஞ்சாலை (Hume Highway)

Gundagai நகருக்கு 8கிமீ முன்னதாக Snake Gully என்ற இடத்தில் சாப்பாட்டுப் பெட்டிக்கு மேல் இருக்கும் நாய் (Dog on the Tuckerbox) இந்த  இந்த நெடுஞ்லையில் பிரபலமான ஒரு நிறுத்தமாக கருத்ப்படுகிறது. அந்த நாயையும் பார்த்துவிடலாம் என்று அங்கு நிறுத்தி சில புகைப்படங்களை எடுத்த பின்னர் ஆல்பெரி நோக்கி பயணத்தை தொடர்ந்தோம்.

The Dog on the Tuckerbox, Snake Gully
சாப்பாட்டுப் பெட்டி மேல் இருக்கும் நாய்
The Dog on the Tuckerbox, Snake Gully
The Dog on the Tuckerbox, Snake Gully
Snake Gully
பழைய ரயில் வண்டி, Snake Gully
Snake Gully
தெருவோரக் கடை, Snake Gully
Snake Gully
சிதிலமடைந்த புகையிரத நிலையம், Snake Gully
Train Stop Antiques Shop, Snake Gully
Train Stop Antiques Shop, Snake Gully
Father
அப்பாவும் மகனும்…

வேகமாக பயணித்துக் கொண்டிருந்த நெடுஞ்சாலை Holbrook என்ன நகருக்கூடாக செல்லும் போது வேகம் குறைந்தது. அங்கே இருந்த ஒரு பழைய நீர்மூழ்கி கப்பல் அருங்காட்சியகத்திலும் நிறுத்தி சில படங்களை எடுத்த பின்னர் மீண்டும் பழைய வேகத்தில் பயணம் தொடர்ந்தது.

Holbrook
Holbrook
Holbrook Hotel
Holbrook Hotel
Holbrook Submarine Museum
Holbrook Submarine Museum
HMAS Otway Holbrook Submarine Museum
HMAS Otway Holbrook Submarine Museum
HMAS Otway Holbrook Submarine Museum
HMAS Otway Holbrook Submarine Museum
HMAS Otway Holbrook Submarine Museum
HMAS Otway Holbrook Submarine Museum
Germanton Park, Holbrook
Germanton Park, Holbrook
Germanton Park, Holbrook
Germanton Park, Holbrook

பகல் உணவுக்காக ஆல்பெரி (Albury) நகரத்தில் நிறுத்திய பின்னர், அங்கிருந்த புகையிரத நிலையத்துக்கும் சென்று சில படங்களை எடுத்துவிட்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தொம்.

Albury
ஆல்பெரி
Albury
Albury
Albury Railway Station
ஆல்பெரி புகையிரத நிலையம்
Albury Railway Station
Albury Railway Station

பகலுக்கு பின்னராக நாம் பயணித்த பிரதேசங்களில் மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. சில இடங்களில் மெதுவான தூறலாகவும் மற்ற இடங்களில் பாதையை மறைக்கும் அளவுக்கு அதிகமான மழையாகவும் பெய்துகொண்டிருந்தது. மழை காரணமாக எமது வேகமும் சற்று குறைய வேண்டி இருந்தது. மாலை நெருங்கும் வேளையில் வழியில் இருந்த ஒரு McDonnalds உணவக்கதில் கோப்பி குடிக்க நிறுத்தினோம். இதன் பின்னர் அதிக நிறுத்தங்கள் இல்லாது எமது பயணம் தொடரந்து இரவு 8 மணியளவில் மெல்பேர்னில் உள்ள அருணனின் வீட்டை அடைந்தோம்.

இன்றய பயணம் 886கிமீ.  ஏழு நாட்களில் பயணித்த மொத்த தூரம் 2685.9 கிமீ.

அடுத்த பதிவில் Great Ocean Road…

பிரிவுகள்
பயணம்

ஒரு பயணத்தின் படக்கதை – ஜினோலன் குகைகள்

பயணத் திகதி: நவம்பர் 24, 2010

இன்று நீல மலைத்தொடர் (Blue Mountains) பகுதிக்குச் செல்வதாக நேற்றே முடிவு செய்திருந்தாலும் எங்கே என்பதைத் திட்டமிடவில்லை. காலை 8 மணியளவில் அருணன் வீட்டிலிருந்து புறப்பட்டு ஜினோலன் குகைகளுக்கு செல்லலாம் என முடிவெடுத்தோம்.

ஒரு பயணத்தின் படக்கதை - ஜினோலன் குகைகள்

நடுவழியில் GPS தன் விருப்பத்துக்கு குழறுபடி செய்து ஒரு நெடுச்சாலையின் நடுவில் குகை இருக்கிறது என்று சொன்னது. பின்னர் ஒருவாறாக சரியான பாதையைத் தெரிவு செய்து பயணத்தைத் தொடர்ந்தோம். நாம் பயணித்த Great Western Highway பெரும்பாலும் காடுகளுக்கும் மலைகளுக்கும் நடுவே செல்லும் ஒரு அழகிய பாதை. ஆனாலும் 100கிமீ வேகத்தில் பயணிக்கக்கூடிய மலைப்பாதையாக இருப்பதால் அங்கு பல கங்காருக்கள் வேகமாக வரும் வாகனங்களில் அடிபட்டு இறந்திருந்ததைக் காணமுடிந்தது.

சாலை ஓரத்தில் காலை உணவு
சாலை ஓரத்தில் காலை உணவு: எமது பயணத்தின் பெரும்பாலான நாட்களில் உண்ட பாணும் டூனாவும்.
Great Western Highway
அழகிய மலைகளாலும் பசுமையான மலைகளாலும் சூழப்பட்ட Great Western Highway

அண்ணளவாக 100கிமீ Great Western Highway வழியே Hartley வரை பயணித்து, அங்கு Jenolan Caves Road வழியாக திரும்ப வேண்டும். அங்கிருந்து மேலும் 45கிமீ குறுகலான பாதையில் பயணித்து நாம் குகைகளின் வாசலை அடையும் போது பகல் 12 மணி ஆகியிருந்தது. அந்த பாதையின் இறுதி 10கிமீ மிகவும் குறுகலானதாகவும் மிக அதிகமான வளைவுகளையும் கொண்டிருக்கிறது. இதற்கு மேலதிகமாக எமது வண்டியில் எரிபொருள் அளவும் அபாய கட்டத்தை நெருங்கிக் கொண்டிருப்பதை நான் தாமதமாகவே அவதானித்தேன்.

ஜினோலன் குகைகளை நோக்கி
மலைப்பாங்கான பாதையில் ஜினோலன் குகைகளை நோக்கி
Jenolan Caves Road
வளைவுகளை மட்டுமே கொண்டிருக்கும் Jenolan Caves Road

ஜினோலன் குகைகள் (Jenolan Caves) சிட்னியில் இருந்து மேற்காக 175கிமீ தொலைவில் அமைந்துள்ளன. சுண்ணாம்புக்கல் பாறைகளால் உருவான இவை உலகின் பழைமையான திறந்த குகைகளாக கருதப்படுகின்றன. பல்வேறு வகையான படுகச் சுண்ணாம்பு உருவாக்கங்கள் இந்த குகைகளுக்குள் காணப்படுகின்றன. இந்த குகைகளுக்கு கீழாக சில நிலக்கீழ் ஆறுகளும் செல்கின்றன.

Blue Lake, Jenolan
குகைகளுக்குள் நுழையும் பாதையும் அருகே ஜினோலன் நீல ஏரியும்

300க்கும் அதிகமான குகைகள் இந்த பிரதேசத்தில் கட்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் 20 குகைகளில் பொதுமக்களை பார்வையிட அனுபதிக்கிறார்கள். சிறிய குகைகளுக்கு சுயமாக செல்லும் வசதி இருப்பதுடன், பெரிய குகைகளுக்கு வழிகாட்டியுடன் குழுக்களாக செல்ல இயலும். நாம் 12.30க்கும் 2மணிக்கும் இரு குகைகளுக்கு செல்ல டிக்கெட் வாங்கினோம். (ஜினோலன் குகைகளுக்கான மேலதிக சுற்றுலா விபரங்களை Jenolan Caves Reserve Trust நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.)

Human Face Rock
வாசலில் எம்மை வரவேற்கும் மனித முகம்
Inscription on  Grand Arch
Grand Arch எனப்படும் நுழைவாயிலில் இருக்கும் இந்த கல்வெட்டு இங்குள்ள பல்வேறு குகைகளும் கண்டுபிடிக்கப்பட்ட விபரங்களை தருகிறது.

நாம் முதலாவதாக சென்றது சைப்ளி குகை (Chifley Cave). 1800ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குகை 1952 வரை இடது இம்பீரியல் குகை (Left Imperial Cave) என்று அறியப்பட்டிருக்கிறது. உலகில் முதலாவதாக மின் விளக்கு பொருத்தபட்ட குகை என்ற பெருமையை 1880ல் இது பெற்றுக்கொண்டது. இங்கு உள்ள இரண்டு குகை அறைகளில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மின்சாரம் அதிகம் பரவலாகாத ஆரம்ப காலங்களில் மின் விளக்குகளை பார்ப்பதற்காகவே இங்கு சுற்றுலாப் பயணிகள் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

Chifley Cave
சைப்ளி குகை
Chifley Cave
வண்ண விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட சைப்ளி குகை

நாம் பயணித்த குழுவில் அண்ணளவாக 20 பெரியவர்களும் சில சிறுவர்களும் இருந்தார்கள். குகைகளுக்குள் பயணிப்பது ஒரு வித்தியாசமா அனுபவம். வாசலில் இருந்து உள்ளே செல்லச் செல்ல குளிர் அதிகரிப்பதுடன் முழுமையான இருளாகிவிடும். அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்படும் போது முழுமையான இருளை உணர முடியும். இந்த குகையில் புகுந்து, முழுமையாக பயணித்து வெளியே வர அண்ணளவாக ஒரு மணித்தியாலம் ஆனது. அடுத்த குகைக்கு செல்ல அரை மணித்தியாலத்துக்கும் குறைவாகவே இருந்ததால் எமது காரில் இருந்த உணவை வைத்து பகல் பசியை போக்கிக் கொண்டோம்.

Group of Tourists inside Chifley Cave
சைப்ளி குகைக்குள்ளே சுற்றுலாப் பயணிகள்
Inside Chifley Cave
சுற்றுலாப்பயணிகளுக்காக சைப்ளி குகைக்குள்ளே அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள்.

இரண்டாவதாக நாம் சென்ற குகை, லூக்காஸ் குகை (Lucas Cave). 1860ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குகை சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது. ஜினோலன் குகைகளுக்கு வரும் பெரும்பாலானோர் செல்லும் ஒரு குகையாகவும் இது இருக்கிறது. இங்கு மற்ற குகைகளை விடவும் அதிக வகையான வித்தியாசமான பாறை உருவாக்கங்கள் இருக்கின்றன. மிகப்பெரிய குகை அறையான Exhibition Chamber, பல தூண் வடிவிலான, மற்றும் மிருகங்களின் வடிவிலான பாறை உருவாக்கங்களை கொண்டுள்ளது. இங்கே இருக்கும் 50 மீ உயரமான Cathedral Chamber அறையில் மாதம் ஒருமுறை இசை நிகழ்ச்சிகளும் சில திருமணங்களும் நடைபெறுவதுண்டு.

Exhibition Chamber
Exhibition Chamberல் உள்ள தூண்
Exhibition Chamber Rhino
Exhibition Chamberல் இருக்கும் ஒரு மிருக வடிவம்
Cave Ceiling
ஒரு குகை அறையின் உட்கூரை அமைப்பு

லூக்காஸ் குகைக்கு சென்ற குழு அதிகமானவர்களை கொண்டிருந்ததுடன், குகை முழுவதையும் சென்று முடிக்க ஒன்றரை மணித்தியாலங்கள் எடுத்தது. இந்த குகைப் பயணம் முதலாவதில் இருந்து மாறுபட்டதாகவும் சிறப்பானதாகவும் இருந்தது. (இதற்கு மட்டுமே போயிருந்தாலும் போதுமானதாக இருந்திருக்கும்). இந்த குகைக்குள் இருந்து ஒரு பகுதியில் நிலக்கீழ் நதியையும் பார்க்க முடியும். நாம் இந்த குகையை விட்டு வெளியே வரும் போது நேரம் 3.30 ஆகியிருந்தது.

Cathedral
Cathedral அறையில் சுற்றுலாப்பயணிகள்
Lucas Cave
லூக்காஸ் குகைக்குள்ளே இருக்கும் மிருக எலும்புக்கூடு. குகைகளுக்குள் விழுத்து வெளியேற முடியாத விலங்காக இது இருக்காலம் என்று கூறப்படுகிறது.

இப்போது அடுத்த சிக்கல் காத்திருந்தது. வண்டியில் எரிபொருள் ஆபத்தான கட்டத்தை தொட்டிருந்தது. அடுத்த எரிபொருள் நிரப்பு நிலையம் 30கிமீ தொலைவில் இருந்தது. இந்த மலைப்பாங்கான பாதைகளில் இது சாத்தியமாகுமா என்ற சந்தேகமும் இருந்தது. எரிபொருள் சேமிக்கும் ஒரு வகையாக இயலுமானவரை தடுப்புக்களை பிரயோகிக்காமலே வாகனத்தை உச்ச வேகத்தில் செலுத்தி, ஒருவாறாக Obtron என்ன ஊரில் இருந்த எரிபொருள் நிலையத்தை வந்தடைந்தோம்.

Jenolan to Oberon
வேகமாக ஜினோலனில் இருந்து ஒபெரோன் நோக்கி
Great Western Highway near Oberon
ஒபெரோனில் இருந்து மீண்டும் Great Western Highway வழியே
On Great Western Highway
பாதை ஓரமாக படம் எடுத்தல், ஒபெரோனுக்கு அண்மையில்

ஓபிற்ரோனில் எரிபொருள் நிரப்பிய பின்னர் மேலும் 4 மணித்தாயாலங்கள் நிறுத்தாத வாகன ஓட்டம். நாம் வீடு வந்து சேர்ந்த போது இரவு 8 மணி ஆகியிருந்தது. இன்றுவரை நாம் பயணித்திருக்கும் மொத்த தூரம் 1750 கிமீ. இன்று பயணித்த தூரம் 400 கிமீ.

From the old days...
இன்னமும் சுமை தாங்கும்…

அடுத்த பதிவில் சிட்னியில் இருந்து மெல்பேர்னுக்கு பயணிக்கலாம்…

பிரிவுகள்
பயணம்

ஒரு பயணத்தின் படக்கதை – நியூகாசில்

பயணத் திகதி: நவம்பர் 23, 2010

நெல்சன் குடாவிலிருந்து 50கிமீ தெற்கே உள்ள நியூகாசில் (Newcastle), நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னிக்கு அடுத்த பெரிய நகரம். இது அவுஸ்திரேலியாவின் பழைய நகரங்களில் ஒன்றாக இருப்பதுடன் இன்றும் பழைமை மாறாத ஒரு நகரமாகவும் இருக்கிறது. இங்கு அதிகளவான பழைய கட்ட்டங்கள் இன்னமும் பாவனையில் இருப்பதுடன், புதிய உயர் மாடிக்கட்டங்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கிறது. உலகிலேயே அதிக நிலக்கரி ஏற்றுமதி செய்யும் துறைமுகம் (Port of Newcastle) இங்கேயே அமைந்துள்ளது.

ஒரு பயணத்தின் படக்கதை - நியூகாசில்நாம் நியூகாசில் நகரத்துக்குள் பிரவேசிக்கும் போது பிப 2.45 ஆகியிருந்தது. சூரியன் இன்னமும் உச்சியில் எரிப்பது போல வெய்யிலின் கொடுமை அதிகமாகியிருந்தது. அங்கு விசேடமான திட்டம் எதுவும் இல்லததாலும், வெய்யிலால் அதிகமாகயிருந்த பயணக் களைப்பாலும் அதிக நேரம் செலவிடாமல் பயணத்தை தொடர முடிவுசெய்தோம். அங்கு கடற்கரை வீதியில் சில படங்களை எடுத்த பின்னர் 3 மணியளவில் சிட்னி நோக்கி பயணத்தை தொடர்ந்தோம்.

Newcastle
மாறாத பழைமையுடன் நியூகாசில்

The Largest KFC in Australia
அவுஸ்திரேலியாவில் பெரிய KFC உணவகத்துக்கான விளம்பரம்.

நியூகாசில்
பழைமை மாறாத நியூகாசில்

நியூகாசில் கடற்கரை
நியூகாசில் கடற்கரை

நியூகாசிலில் இருந்து சிட்னி 150கிமீ தெற்காக உள்ளது. இரு நகரங்களையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலையில் அதிகபட்சமாக மணிக்கு 110கிமீ வேகத்தில் பயணிக்கலாம். ஆனாலும் நாம் பயணித்த நேரத்தில் அதிகளவான வாகனங்கள் பயணித்ததால் பல இடங்களில் 100கிமீ உட்பட்ட வேகத்திலேயே பயணிக்க முடிந்தது.

சிட்னி நோக்கி
சிட்னி நோக்கி நெடுஞ்சாலையில், சிட்னியை நெருங்க நெருங்க வாகனங்களில் நெரிசல் அதிகரித்தது.

நெடுச்சாலையில்
படகும் ஒரு நாள் பாதையில் போகும்...

நாம் சிட்னி புறநகர் பகுதிகளை நெருங்கும் போது மாலை 5மணி ஆகியிருந்தது. அது ஒரு வேலை நாளாக இருந்ததால் போக்குவரத்து நெரிசலும் அதிகமாகவே இருந்தது. அருணனை பெலா விஸ்டா பகுதியில் இறக்கிவிட்டு நான் வெஸ்ட் பெனன்ட ஹில்ஸ் வரும் போது மாலை 6மணி கடந்திருந்தது.

மூன்றாம் நாள் முடிவில் பயணித்திருந்த மொத்த தூரம் 1350கிமீ, மூன்றாம் நாள் மட்டும் பயணித்த தூரம் 548கிமீ.

அடுத்த பதிவில் ஜினோலன் குகைகளுக்குள் சென்ற அனுபவம்…

பிரிவுகள்
பயணம்

ஒரு பயணத்தின் படக்கதை – நெல்சன் குடா

பயணத் திகதி: நவம்பர் 23, 2010

நாம் நெல்சன் குடாவைச் சென்றடைந்த போது பகல் 12.30 ஆகியிருந்தது. அங்கிருந்த ஒரு மதுக்கடையில் இறைச்சியும் கிழங்கு சீவலும் பகலுணவாகியது. உண்ட களைப்புக்கு ஓய்வு கொடுக்காமல் நெல்சன் குடாவில் பிரபலமான கலங்கரை விளக்கிற்கு அடுத்ததாகப் பயணித்தோம்.

ஒரு பயணத்தின் படக்கதை - நெல்சன் குடாநெல்சன் குடா (Nelson Bay) ஸ்டீபன்ஸ் துறைமுகத்துக்கும் (Port Stephens) நியூகாஸிலுக்கும் (Newcastle) இடையில் உள்ள ஒரு சுற்றாலா நகரம். சுற்றுலாப் பயணிகள் மத்தியில் டொல்பின், திமிங்கில பயணங்கள், அலைச்சறுக்கு முதலான நீர் விளையாட்டுக்கள், மீன்பிடி போன்ற செயற்பாடுளுக்கு இந்நகரம் பிரபலமானது. இங்குள்ள கலங்கரை விளக்கு (Nelson Head Light) ஸ்டீபன்ஸ் துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு வழிகாட்டுவதற்காக 1872ல் அமைக்கப்பட்டுள்ளது. பொதுவான கலங்கரை விளக்கங்கள் போல கோபுரமாக அல்லாது, உயரமாக குன்றின் மீது இருப்பதால் அங்குள்ள ஒரு கட்டடத்தின் யன்னல் வழியாகவே இங்கிருந்து வெளிச்சம் அனுப்பப்பட்டிருக்கிறது. தற்போது இது செயற்பாட்டில் இல்லாவிட்டாலும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு அருங்காட்சியகமாக இது தொழிற்படுகிறது.

Port Stephens
அமைதியான நெல்சன் குடாவும் ஸ்டீபன்ஸ் துறைமுகமும், கலங்கரை விளக்கத்திலிருந்து.

Nelson Head Lighthouse Trust
Nelson Head Lighthouse Trust

Nelson Head Light House
நெல்சன் கலங்கரை விளக்கம் தற்போது தொலைத்தொடர்பு கோபுரமாகவும் துறைமுக கண்காணிப்பு கோபுரமாகவும் பயன்படுகிறது.

Nimal at Nelson Head Light House
நெல்சன் கலங்கரை விளக்கத்துக்கு அருகே நான்

அங்கு சில புகைப்படங்களை எடுத்த பின்னர் நாம் சென்ற இடம் Gan Gan Lookout. 160மீ உயரமா இந்த குன்று ஸ்டீபன்ஸ் துறைமுக பிரதேசத்தில் உள்ள உயரமாக புள்ளியாக இருப்பதால் இந்த பிரதேசத்தை முழுமையாக பார்கக்கூடிய ஒரு இடமாக இது இருக்கிறது. ஒரு ஒடுங்கியா பாதையால் அந்த குன்றின் உச்சிவரை வாகனத்திலேயே செல்லமுடியும். அந்த பாதையின் ஆபத்தை உணர்த்தும் வகையில் உச்சியில் வானத்தை திருப்பும் இடத்தில் ஒரு கார் பாதையை விட்டு விலகி பள்ளத்துக்குள் விழுந்திருந்ததையும் பார்க்க முடிந்தது. மாலை நேரங்களில் இங்கிருந்து கடலைப் பார்ப்பது ஒரு ரம்யமான காட்சியாகவே இருக்க முடியும். ஆனாலும் நாம் சென்ற கண் கூசும் உச்சி வெய்யில் நேரத்தில் சில படங்களை எடுத்த பின்னர் கீழ் நோக்கி பயணிக்கலானோம்.

Gan Gan Lookout
Gan Gan Lookout, ஸ்டீபன்ஸ் துறைமுக பிரதேசத்தையும் நெல்சன் குடாவையும் முழுமையாக பார்க்க பொருத்தமான இடம்.

Port Stephens Panorama
ஸ்டீபன்ஸ் துறைமுக பிரதேசத்தின் பரந்ததோற்றம் (panorama). மாலை வேளைகளில் இந்த தோற்றம் இன்னமும் ரம்யமானதாக இருக்கும்.

I'm Lonely...
மனித நடமாட்டம் இல்லாத மலை உச்சியில் தனித்திருக்கிறது

On the top of Gan Gan Lookout Hill
Gan Gan மலை உச்சியில் நான் (காருடன் எடுக்கும் typical photo).

அடுத்த பதிவில் முன்றாம் நாள் முடிவில் சிட்னி நோக்கி பயணிக்கலாம்…

பிரிவுகள்
பயணம்

ஒரு பயணத்தின் படக்கதை – ஹண்டர் பிராந்தியம்

பயணத் திகதி: நவம்பர் 23, 2010

மூன்றாம் நாள் பனிக்குளிரில் முழுநிலா ஒளிர்ந்து கொண்டிருந்த அதிகாலை 4.30க்கு விடிந்தது. சற்றுத் தாமதித்தே புறப்படலாம் என்பதால் அன்று என்ன இடங்களைப் பாரக்கலாம் என்பதை முதல் நாள் சேகரித்திருந்த கையேடுகளில் இருந்து தெரிவு செய்தேன்.

ஒரு பயணத்தின் படக்கதை - ஹண்டர் பிராந்தியம்காலை 5.45க்கு டாரியிலிருந்து தெற்காக பசிபிக் நெடுஞ்சாலையில் ஹண்டர் (Hunter) பிராந்தியத்தை நோக்கிப் பயணிக்கலானோம். ஹண்டர் பிராந்தியம் அல்லது ஹண்டர் பள்ளத்தாக்கு என்று அறியப்படும் இந்த பகுதி நியூ சவுத் வேல்ஸ் மாநிலந்தின் சிட்னிக்கு வடக்காக அமைந்துள்ளது.

Sunrise in Taree
கிழக்கே உதிக்கும் சூரியன்

Toyota Camry Altise
பனியில் குளித்து நிற்கும் கார்

பசிபிக் நெடுஞ்சாலை
தெற்கே செல்லும் இந்தப் பாதை, ஹண்டர் நோக்கி...

எமது முதலாவது நிறுத்தம் ஹோக்ஸ் நெஸ்ட் (Hawks Nest). இது மாயல் ஏரிகளுக்கும் (Myall Lakes) ஸ்டீபன்ஸ் துறைமுகத்துக்கும் (Port Stephens) இடையில் அமைந்துள்ள ஒரு கடற்கரை ஊர். நாம் டாரீயிலிருந்து 115கிமீ தெற்காக பயணித்து ஹோக்ஸ் நெஸ்ட் கடற்கரையை அடையும் போது நேரம் காலை 8.30. மிகவும் குறைந்த சனத்தொகையை கொண்டுள்ள இந்தப் பிரதேசம் பெரும்பாலும் விடுமுறை வீடுகளையும் ஓய்வுபெற்றொர் குடியிருப்புக்களையும் மட்டுமே கொண்டுள்ளது. தங்களுடைய வான்களிலேயே குடியிருந்து பயணிக்கும் பலரையும் அங்கு காணக்கூடியதாக இருந்தது. அந்த கடற்கரையோரமாக காலை உணவை முடித்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.

Nimal at Hawks Nest Beach
ஹோக்ஸ் நெஸ்ட் கடற்கரையில் நான்

Arunan at Hawks Nest Beach
ஹோக்ஸ் நெஸ்ட் கடற்கரையில் அருணன்

எமது அடுத்த நிறுத்தம் ஹண்டர் பள்ளத்தாக்கு (Hunter Valley) பிரதேசத்தில் உள்ள பொக்கொல்பின் (Pokolbin). எமது பிரதான பாதையான பசுபிக் நெடுஞ்சாலையில் தெற்காக 70கிமீ நியூகாஸில் (Newcastle) வரை பயணித்து அங்கிருந்து 80 கிமீ மேற்காக பயணிக்க வேண்டும். ஆனால் நாம் GPS சொல் கேட்டு சென்றதால் சற்று மாறுபட்ட பாதையால் சென்றோம்.

Setting GPS
சுத்தலில் விட்ட GPSஐ சுத்துதல்

நாம் சென்ற பாதை ரம்யமான பச்சை நிலங்களாலும் அமைதியான காடுகளாலும் இருமருங்கிலும் சூழப்பட்டிருந்தது. நாம் கடந்து சென்ற குரி குரி (Kurri Kurri), செஸ்நொக் (Cessnock) போன்ற சிறு நகரங்களில் பழைமையான பல கட்டடங்களையும் காணக்கூடியதாக இருந்தது. நாகரிக மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படாத இயற்கையோடு இணக்கமான பிரதேசமாக அது இருந்தது.

Carousel Keepsakes / The Old Edwards Wine Salon
ஒரு பழைய வைன் மதுக்கடை.

School of Arts
இந்த பிராந்தியத்திலுள்ள பழைமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றான செஸ்நொக்கில் அமைந்துள்ள கலைப் பாடசாலை (School of Arts).

Cessnock Airport
செஸ்நொக் விமான நிலையம் பெரும்பாலும் தனியார் விமானங்களாலும் பயிற்சி விமானங்களாலும் பயன்படுத்தப்படுகிறது.

ஹண்டர் பள்ளத்தாக்கு திராட்சைத் தோட்டங்களுக்கும் வைன் உற்பத்திக்கும் பிரபலமான ஒரு பிரதேசம். நாம் நேரடியாக அங்கிருந்த தகவல் மையத்திற்கு சென்றோம். அங்கு வைன் சுவைக்கும் சுற்றுலாக்களில் வந்திருந்த பெருமளவான சீன சுற்றுலாப் பயணிகளை காணக்கூடியதாக இருந்தது. நாம் உலகில் எங்கு சென்றாலும் அங்கு சீனர்களை சுற்றுலா பயணிகளாக காண முடியும். சீன அரசு நாட்டின் சனத்தொகையை கட்டுப்படுத்த மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறது என்று நண்பன் அருணன் சொன்னதில் உண்மை இல்லையென்றே நினைத்துக்கொண்டேன். அந்த தகவல் மையத்தில இருந்த பெண்மணியின் வீட்டுப்பிரச்சனை காரணமாக அவர் கடுப்பான மனநிலையில் இருந்ததால் அங்கிருந்து பயனுள்ள தகவல்கள் எதையும் பெறமுடியவில்லை. ஆனாலும் இங்கு வந்ததற்காக சில புகைப்படங்களை எடுத்துவிட்டு மீண்டும் வந்த பாதை வழியே எமது பயணத்தை தொடர்ந்தோம்.

Potters Hotel Brewery Resort
நுல்கபாவில் அமைந்துள்ள இந்த தங்கும் விடுதி வைன் சுவைக்கும் சுற்றுலாக்களில் வருபவர்கள் மத்தியில் பிரபலமானது.

Hunter Beer Co.
Hunter Beer Co. நுல்கபாவில் அமைந்துள்ள ஒரு பியர் தயாரிக்கும் நிறுவனம். இது பியர் தயாரிப்போடு கலந்த விடுமுறை வாய்ப்புகளை வழக்குகிறது. மட்டையாகி மகிழ்ச்சியாக இருக்கி பொருத்தமான இடம்.

Pokolbin, New South Wales
பொகோல்பினில் நாம் கண்ட ஒரு திராட்சைத் தோட்டம். இந்த பிரதேசமே பெரும்பாலும் திராட்சைத் தோட்டங்களால் நிறைந்திருக்கிறது.

அடுத்த பதிவில் நெல்சன் குடா…