பிரிவுகள்
அனுபவம்

நாட்குறிப்பு – மே 2001

நான் அதிகமாக நாட்குறிப்பு எழுதிய 2001ம் வருட நாட்குறிப்பில் ஆங்கிலத்தில் இருந்த பகுதிகளை தமிழாக்கி இங்கு தொடராக பதிவிடுகிறேன். இது மே மாதம்.

நாட்குறிப்பில் என்னைப்பற்றி மட்டுமன்றி நண்பர்கள் பலரின் அந்நாளைய காதல்களைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். ஆனால் தேவையில்லாமல் பல குடும்பங்களுக்குள்/புதிய காதல்களுக்குள் குழப்பம் வேண்டாமே என்று அவற்றை பதிவிடவில்லை. 😉

மே 1:
இன்று எந்த வகுப்புக்கும் போகவில்லை.

மே 2:
இன்று ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன். நாளை அவளிடம் கொடுக்க வேண்டும்.

மே 3:
இன்று ஆங்கில இலக்கிய வகுப்பின் பின்னர் அவளைச் சந்திக்கலாம் என்று நினைத்தேன். முடியவில்லை. விரைவில் அவளைச் சந்திக்க வேண்டும்.

மே 5:
நான் அவளுக்கு எழுதிய கடிதத்தை சித்திர வகுப்பில் நண்பர்கள் வாசித்துவிட்டார்கள். மீண்டும் எழுதுகிறேன்.

மே 6:
இன்று காலை கணித வகுப்பில் அவளை பார்த்தேன். கவலை, கோபம், சோகம்.
அவள் கவியரங்கில் இருக்கலாம் என்று மாலை சித்திர வகுப்பு முடிந்து போனேன். ஆனால் நிகழ்ச்சி முடிந்திருந்தது.

மே 7:
அவள் இன்று கணித வகுப்புக்கு வரவில்லை. நான் இராம கிரிஷ்ண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றேன்.

மே 8:
அவளுக்கு தொலைபேசினேன், ஆனால் யாரும் எடுக்கவில்லை.

மே 9:
நினைப்பதை விட மறப்பது கடினம்.

மே 10:
இன்று கதைக்கலாம் என்று நினைத்தேன், சந்தர்ப்பம் அமையவில்லை. எப்படியாவது விரைவில் கதைக்க வேண்டும்.

மே 11:
எம்மிடையே மேலும் பிரிவை விரும்பவில்லை என்று சொல்ல வேண்டும். இன்று தொலைபேச ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அழைப்பு எடுத்துவிட்டு எதுவும் கதைக்காமல் வைத்துவிட்டேன். கதைக்கவேண்டும் என்று நினைக்கிறேன், ஆனால் பல சந்தர்ப்பங்களில் நினைத்த பல விடயங்கள் குரல்வளையை தாண்டி வருவதில்லை.

மே 12:
புதிய கண்ணாடி வாங்கினேன். பாடசாலையில் நாடக பட்டறை.

மே 13:
கணித வகுப்பில் அவளைக் காணவில்லை.

மே 14:
“உன்னை விரைவில் சந்தித்து கதைக்க வேண்டும்…”

மே 15:
அவளுக்கு கணித பரீட்சையில் குறைந்த புள்ளிகள், நானும் ஒரு காரணமோ?

மே 16:
இரண்டு வாரமாக அவளுடன் கதைக்கவும் முடியவில்லை, ஒரு கடிதம் கொடுக்கவும் முடியவல்லை.

மே 17:
அவள் ஒரு திங்கட்கிழமை பிறந்திருக்கிறாள். (கலண்டர் மென்பொருள்)

மே 18:
nimal_panai@hotmail.com
http://www.troyal.8m.net
http://www.troyal.org (1 year free from http://www.domainvilet.com)

மே 19:
என்னுடைய மடைத்தனத்தால் அவளை இழந்து கொண்டிருக்கிறேன்.
நினைப்பது எதுவும் நடப்பதில்லை, ஆனால் நினைக்காத பலதும் நடக்கின்றன.

மே 20:
கணித பரீட்சையில் அவளுக்கு 85, எனக்கு 98.

மே 21-24:
ஓரு கொடுக்காத கடிதமும், நானும், அவளும்.

மே 25:
இரவு 12 வரை பாடசாலையில் வேலை. அதிகாலை 2 மணிக்கு வீடு வந்தால் security கேற்றை திறக்கவில்லை. ஆதலால் நண்பர்கள் சிலருடன் நடைபாதையில் உறக்கம்.

மே 26:
பகல் பாடசாலை சென்று இரவு வந்தேன்.

மே 27:
கணித வகுப்பில் அவளைப் பார்த்தேன். எப்போது அவளை பார்த்தாலும் என்மீதே எனக்கு வெறுப்பாக உள்ளது. நான் அவளைக் காதலிக்கிறேன்.

மே 28:
என் கண்களிலும் நினைவுகளிலும் நீதான் இருக்கிறாய்.

மே 29:
அவள் தமிழ் வகுப்புக்கும் வரவில்லை, கணித வகுப்புக்கும் வரவில்லை.

மே 30:
என்னால் செய்ய முடிவதெல்லாம் என்னை நானே வெறுப்பது மட்டுமே. குறைந்தது நான் அவளை விரும்பிகிறேன் என்பதை கூட நான் சொல்வதில்லை. நான் செய்யும் மடைத்தனமான வேலைகளுக்கு அவள் என்னை விரும்புவாள் என்று நான் எதிர்பார்ப்பது அதிலும் பெரிய மடைத்தனம்.

மே 31:
இந்த மாதம் எல்லாவிதத்திலும் தேவையில்லாத விடயங்கள் மட்டுமே நடந்திருக்கின்றன.

(தொடரும்…)

(Post image plagiarized from Jennifer Donley)

பிரிவுகள்
அனுபவம்

நாட்குறிப்பு – ஏப்ரல் 2001

நான் அதிகமாக நாட்குறிப்பு எழுதிய 2001ம் வருட நாட்குறிப்பில் ஆங்கிலத்தில் இருந்த பகுதிகளை தமிழாக்கி இங்கு தொடராக பதிவிடுகிறேன். இது ஏப்ரல் மாதம்.

ஏப்ரல் 1:
முட்டாள்கள் தினத்தில் முட்டைக் குளியல். கணிதவகுப்புக்குள்ளேயே யாரோ முட்டை எறிந்து விட்டார்கள்.

ஏப்ரல் 2:
நண்பன் ஒருவன் என் நாட்குறிப்பிலிருந்து தன் பெயர்களை அழித்துவிடச் சொன்னான். செய்து விட்டேன்.

ஏப்ரல் 4:
இரவு 9:57க்கு தொலைபேசி பரீட்சைக்கு வாழ்த்து சொன்னாள். நன்றி.

ஏப்ரல் 5:
பாடசாலையில் நாடக மன்ற பொதுக்கூட்டம். பிரணவன் இனி உப தலைவர்.

ஏப்ரல் 6:
கணிதப் பரீட்சையில் 90 புள்ளிகள்.

ஏப்ரல் 8:
பாடசாலை நண்பன் ஜெயப்பிரகாஷின் தந்தை மரண வீட்டிற்கு சென்றோம்.

ஏப்ரல் 10:
சமய பாட பரீட்சை, ஏதோ பரவாயில்லை.

ஏப்ரல் 11:
நாடக மன்ற கூட்டத்திற்கு பிறகு Odel போனோம். சிந்துஜனுடன் தெகிவளைக்கு போய் ஒரு multi-colour shirt வாங்கினேன்.

ஏப்ரல் 12:
ஆங்கில இலக்கிய வகுப்புக்கு தாமதமாக சென்றேன். அவள் மாலை 5.30க்கு தொலைபேசினாள். நான் கடந்த ஒரு வருடத்தில் ஒரு தடவையேனும் தொலைபேசவில்லை என்றாள். இனிமேல் நானும் தொலைபேசுவதாக சொன்னதற்கு, எதையுமே சொன்ன பின் செய்வது காதல் இல்லை என்றாள்.

ஏப்ரல் 14:
அவளிடம் இன்று தொலைபேசுவதாக கூறியிருந்தேன், முடியவில்லை. ஆனால் இன்று கோவிலில் அவளைக் கண்டேன்.

ஏப்ரல் 15:
பிரணவன், திருப்பரன் மற்றும் பிரணவனின் குடும்பத்தினருடன் இன்றும் நாளையும் பொலன்னறுவை, அனுராதபுரம் சுற்றுலா. இன்று தம்புள்ளை, சீகிரிய, பராக்கிரம சமுத்திரம், பொலன்னறுவை அருங்காட்சியகம் மற்றும் பொலன்னறுவையை சுற்றியுள்ள வேறுபல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு சென்றோம்.

ஏப்ரல் 16:
இன்று அனுராதபுரத்தை சுற்றியுள்ள பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு சென்றோம். இரவு 9 மணியளவில் வீடுவந்து சேர்ந்தேன். அவள் நினைவாகவே இருக்கிறது.

ஏப்ரல் 17:
9.45க்கு தொலைபேசினாள். எனக்கும் தனக்கும் இனி எவ்வித தொடர்புமில்லை, மன்னிக்கவும் என்றாள்.
நான் இதை எதிர்பார்க்கவே இல்லை, என்ன சொல்வதென்றும் தெரியவில்லை. 10.15க்கு மீண்டும் தொலைபேசி ஒரு தகவலையும் சொன்னாள். என்ன செய்வதென்று புரியவில்லை. மீண்டும் நான் தொலைபேசி உண்மையா என்று கேட்டதற்கு உண்மைதான் என்று சொல்லை வைத்துவிட்டாள். அதன் பின்னர் பலதடவை முயற்சித்தும் அவள் எடுக்கவில்லை. ஏன் இப்படியெல்லாம், உண்மைதானா, மிகவும் குழப்பமாக இருக்கிறது.??!

ஏப்ரல் 18:
Commerce வகுப்பு முடிந்து வரும்போது அவளைக் கண்டேன். வீடு வந்து சிறிது நேரத்தின் தொலைபேசி தன்னைப்பற்றி என்ன நினைப்பதாக கேட்டால். பின்பு சொல்வதாக கூறி வைத்து விட்டேன். தினம் ஒரு கதை பேசினால் நான் என்ன செய்ய?? இரவும் பலதடவை தொலைபேசினாள், நான் எடுக்கவில்லை.

ஏப்ரல் 19:
காலை ஒரு தொலைபேசி அழைப்பு. அவளின் friend என்று சொல்லி, ‘நான் அவளைப்பற்றி என்ன நினைப்பதாக’ கேட்டதற்கு நான் எதுவும் சொல்லாமல் வைத்துவிட்டேன். மாலை ஆங்கில இலக்கிய வகுப்பிலும் கண்டேன். வெறுப்பா? கோபமா? அவள் மீதா? என் மீதா? குழப்பம்…!

ஏப்ரல் 20:
காலை தொலைபேசினாள். கதைக்காமல் வைத்துவிட்டேன். பகல் தொலைபேசி அம்மாவிடம் ஏதோ சொல்லியிருக்கிறாள்(?). களனி விகாரை, பொரளை கோத்தமி விகாரை, All Saint’s Church, National Art Gallery.

ஏப்ரல் 21:
‘வீரபாண்டின் மனைவி’ பாகம் 2 வாசித்து முடித்து பாகம் 3 எடுத்துவந்தேன். நண்பன் நேற்று பகல் 12க்கு களனி வந்திருக்கிறான். நாங்கள் அந்த நேரம் திரும்பிவிட்டோம்.

ஏப்ரல் 22:
இன்று கணித வகுப்புக்கு பின்னர் தொலைபேசி சாதாரணமாக கதைத்தாள். இன்று சந்திக்க முடியுமா என்று கேட்டாள். புதன் சந்திப்பதாக சொல்லியிருக்கிறேன். “மனங்கள் ஏன் தினமும் மாறுகின்றன?”

ஏப்ரல் 23:
தொடர்புகொள்ள முயற்சித்தோம்.

ஏப்ரல் 24:
அடுத்த ஞாயிறு தொடக்கம் வேறு கணித வகுப்புக்கு மாறிவிட்டாள்.

ஏப்ரல் 25:
மாலை 5மணிக்கு அவளை சந்திக்க சென்றேன். இருந்த 10 நிமிடத்தில் எவ்வளவொ கதைத்திருக்கலாம், ஆனால் எதுவும் கதைக்கவில்லை. ஆனாலும் அவளை காதலிக்கிறேன் என்பதையாவது நான் சொல்லியிருக்கலாம்.

ஏப்ரல் 26:
பாடசாலையில் நாடக பயிற்சி. ருக்மன் அண்ணா இயங்குனர்.

ஏப்ரல் 27:
பாடசாலையில் நாடக பயிற்சி.

ஏப்ரல் 28:
‘வீரபாண்டின் மனைவி’ பாகம் 3 வாசித்து முடிந்தது.

ஏப்ரல் 29:
இன்று வகுப்புக்கு வருவதாக சொல்லியிருந்தாள், ஆனால் வரவில்லை.

ஏப்ரல் 30:
தொலைந்து போன ஒரு உணர்வு மட்டும்.

(தொடரும்…)

(Post image plagiarized from MyNiceProfile.com)

பிரிவுகள்
அனுபவம்

நாட்குறிப்பு – மார்ச் 2001

நான் அதிகமாக நாட்குறிப்பு எழுதிய 2001ம் வருட நாட்குறிப்பில் ஆங்கிலத்தில் இருந்த பகுதிகளை தமிழாக்கி இங்கு தொடராக பதிவிடுகிறேன். இது மார்ச் மாதம்.

மார்ச் 1:
இன்று றோயல்-தோமியன் வருடாந்த துடுப்பாட்ட போட்டி ஆரம்பமாகியது. பகல் வரை மைதானத்தில் இருந்தேன்.

மார்ச் 2:
தனுஷியனின் வீட்டில் ‘உள்ளம் கொள்ளை போகுதே’ படம் பார்த்தோம். ‘Gun பேசினால்’ புத்தகம் வாசித்து முடித்தேன்.

மார்ச் 9:
{பக்கம் கிழிக்கப்பட்டுள்ளது}

மார்ச் 10:
இன்று சித்திரவகுப்பில் செய்த pencil shading நன்றாக வந்துள்ளது. ஒரு இலக்கம் 0 தூரிகை வாங்க வேண்டும்.

மார்ச் 12:
{பக்கம் கிழிக்கப்பட்டுள்ளது}

மார்ச் 13:
{…} நான் குழம்பியதை யார் காதல் கனவு என்று நினைக்கச் சொன்னது? நீங்களும் உங்கட {…}!!!

மார்ச் 14:
பார்கப் போய்விட்டு வரும்போது அவனைப் பார்த்தேன்… S…!

மார்ச் 15:
மாலை 5 மணியளவில் பல தடவைகள் தொலைபேசினாலும் விஜிராம் இருந்ததால் கதைக்கவில்லை.

மார்ச் 16:
பாடசாலையில் இன்று விளையாட்டுப் போட்டி. பொது நூலகத்தில் ‘பொன்னியின் செல்வன் பாகம் 2’, ‘வீரபாண்டியன் மனைவி’ புத்தகங்கள் எடுத்தேன். இன்று மாலையும் பல தொலைபேசி அழைப்புக்கள், இன்றும் விஜிராம் இருந்ததால் கதைக்கவில்லை. Why… My bad…!

மார்ச் 17:
இன்று சித்திரம், ஆங்கில இலக்கியம், சமூக கல்வி, தமிழ் வகுப்புக்கள்.

மார்ச் 18:
வாழ்க்கையில் மகிழ்ச்சியும் கவலையும் மாறி மாறி வரும்.

மார்ச் 19:
இன்றைய வகுப்பில் நானும் சிந்துஜனும் copy அடித்ததாக குற்றச்சாட்டு. உண்மையா copy அடிக்கிற நாளில விட்டிட்டு, copy அடிக்காத நாளில பிடிச்சா என்ன செய்ய. 🙂

மார்ச் 20:
அடேய் நண்பா, உனக்கேன் தேவையில்லாத வேலை.

மார்ச் 22:
இன்று ஆங்கில இலக்கிய வகுப்பில் அவளைப் பார்க்க முடியவில்லை. ஆனால் வகுப்பு முடிந்த பின் பார்த்தேன்.

மார்ச் 24:
சிலேவ் ஐலண்ட் காகம் ஒன்றுக்கு மரண அறிவித்தல் ஒட்டியிருந்தது.

மார்ச் 25:
இரவு 10:30 அளவில் தொலைபேசி என்னோடு நிறைய கதைக்க வேண்டும் என சொன்னாள். விரைவில் நேரடியாக சந்தித்து கதைக்க வேண்டும்.

மார்ச் 27:
கணித வகுப்பு பரீட்சையில் அவளுக்கு 87, எனக்கு 90.

மார்ச் 29:
நான் அவளை காதலிப்பதாக ஹரேஷிடம் கூறினேன். ஆனால் மற்றவர்களிடம் இல்லை என்று கூறிவிட்டேன். ஏன்?

மார்ச் 30:
‘வீரபாண்டின் மனைவி’ பாகம் 1 வாசித்து முடித்து பாகம் 2 எடுத்துவந்தேன். ‘இந்திரகுமாரி’, ‘துறவு’ புத்தகங்களும் எடுத்தேன்.

(தொடரும்…)

(Post image plagiarized from Paul Watson)

பிரிவுகள்
அனுபவம்

நாட்குறிப்பு – பெப்ரவரி 2001

நான் அதிகமாக நாட்குறிப்பு எழுதிய 2001ம் வருட நாட்குறிப்பில் ஆங்கிலத்தில் இருந்த பகுதிகளை தமிழாக்கி இங்கு தொடராக பதிவிடுகிறேன். இது பெப்ரவரி மாதம்.

பெப்ரவரி 1:
நூலகத்திலிருந்து பொன்னியின் செல்வன் (பாகம் 1), நாகதேவி எடுத்து வந்திருக்கிறேன். இந்த மாதம் வாசிக்க வேண்டும்.

பெப்ரவரி 2:
புதிதாக உருவாக்கிய இணையப்பக்கத்தை தரவேற்ற “North-pole Net-cafe” போனேன், ஆனால் ஏதோ சிக்கல்.

பெப்ரவரி 5:
‘புதுயுகத்தில் புத்தர்’ என்று ஒரு குறு நாடகம் எழுதியிருக்கிறேன்.

பெப்ரவரி 6:
அவள் மகிழ்ச்சியாக இருப்பதாக தோன்றுகிறது. நாளை மாலை 5 மணிக்கு சந்திக்க கேட்டிருக்கிறாள், என்ன நடக்குமோ…?

பெப்ரவரி 7:
troyal வடிவமைப்பை முடித்துவிட்டேன், ஒரு newsletter செய்யும் எண்ணமும் இருக்கிறது.
பகல் 2.30க்கு தொலைபேசி இன்று வரவில்லை என்றாள். இரவு 10மணிக்கு தொலைபேசி நாளை மாலை 5.30க்கு சந்திக்க கேட்டாள்.

பெப்ரவரி 8:
சந்திக்க போனேன், ஆனால் வரவில்லை. ஏன்…?

பெப்ரவரி 9:
பொன்னியின் செல்வன் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

பெப்ரவரி 10:
சாரணர் கூட்டத்தில் கலந்துகொண்டேன்.

பெப்ரவரி 13:
கடிதத்தை கிழித்து எறிந்து விட்டேன்.

பெப்ரவரி 14:
இல்லை என்று சொல்லிவிட்டேன், எல்லாம் இத்தோடு முடிந்ததா…! I think that the chapter is closed…!!!
“ePanai Graphics” உருவாக்கம்.

பெப்ரவரி 15:
பொன்னியின் செல்வன் பாகம் 1 வாசித்து முடிந்தது.
என்னை நினைக்க பயமாம்…?!?!

பெப்ரவரி 17:
நண்பன் ஒருவன் தன் காதலிக்கு முதல் கடிதம் கொடுத்தான்.

பெப்ரவரி 24:
நண்பனின் காதல் இனி இருதலைக் காதல்…

பெப்ரவரி 28:
இன்று பாடசாலையில் ஆசிரியர்-மாணவ தலைவர்கள் கிரிக்கட் போட்டி. நானும், விஜிராமும் இன்னும் சில நண்பர்களும் 12 மணியளவில் பாடசாலையில் இருந்து மதில் பாய்ந்து வீடு வந்தோம்.

குறிப்புகள்:
என் கை எழுத்தை திருத்துவதா, தலை எழுத்தை திருத்துவதா – குழப்பம்…!

(தொடரும்…)

(Post image plagiarized from Rami Halim)

பிரிவுகள்
அனுபவம்

நாட்குறிப்பு – ஜனவரி 2001

எனக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் பெரிதாக இருந்ததில்லை. நான்கு வருடங்கள் (1999-2002) ஏதோ எழுதியிருக்கிறேன். அதில் அதிகமாக எழுதிய வருடம் 2001. அந்த நாட்குறிப்பில் ஆங்கிலத்தில் இருந்த அனேக பகுதிகளை தமிழாக்கி இங்கு தொடராக பதிவிடுகிறேன். அந்த காலத்தில் Twitter இருந்திருந்தால் டுவீட்டியிருக்க வேண்டியவை… 😉

ஜனவரி 10:
கடல்புறா (பாகம் 2) வாசித்து முடித்துவிட்டேன்.

ஜனவரி 13:
கடந்த மூன்று நாட்களாக எனது ஓவியங்கள் காட்சிப்படுத்திய ஒரு ஓவிய கண்காட்சியில் கலந்துகொண்டேன்.

ஜனவரி 15:
இன்று காலை கோவிலுக்கு போனேன்.

ஜனவரி 20:
சாரணர் கூட்டத்தில் கலந்துகொண்டேன்.

ஜனவரி 21:
கணித பரீட்சையில் 100 புள்ளிகள்.

ஜனவரி 22:
Macromedia Flash பயன்படுத்தி ஒரு அசைபடம் உருவாக்கியிருக்கிறேன், நன்றாகத்தான் இருக்கிறது. பண்டாரவன்னியன் புத்தகம் வாசித்து முடித்துவிட்டேன்.

ஜனவரி 23:
இன்று ‘நாம்’ இருவரும் மகிழ்ச்சியாக இருந்ததாக தோன்றுகிறது, ஏனென்று தெரியவில்லை. நாளை மாலை 5 மணிக்கு சந்திப்பதாக சொல்லியிருக்கிறேன்.

ஜனவரி 24:
அந்த கடிதம் கிடைக்காமலேயே இருந்திருக்கலாம்.

ஜனவரி 25:
Windows Movie Makerல் ஒரு அசைபடம் உருவாக்கினேன்.

ஜனவரி 26:
புதிய மின்னஞ்சல் முகவரி nimal-ana@newmail.com. ஒவ்வொரு வெள்ளியும் மின்னஞ்சல் பார்க்க வேண்டும்.

ஜனவரி 27:
கடல்புறா (பாகம் 1) வாசித்து முடித்தேன்.

ஜனவரி 28:
இன்று ‘நாம்’ இருவரும் குழப்பத்துடனும் கவலையுடனும் இருந்ததாக தோன்றுகிறது.

ஜனவரி 29:
இலவசமாக இணைய பக்கங்களை 8m.com என்ற தளத்தில் உருவாக்கலாம் என்று விஜிராம் மூலமாக தெரிந்துகொண்டேன். ஏதாவது செய்ய வேண்டும்.

ஜனவரி 30:
‘உலகம் ஒரு அகதி முகாம்’ என்ற தலைப்பில் ஒரு நீ…..ண்ட கட்டுரை எழுதினேன். என்னுடைய எழுத்து எனக்கே திருப்ப வாசிக்க கடினமாக இருந்தது.

ஜனவரி 31:
troyalist என்று ஒரு இணைய பக்கத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்.

(தொடரும்…)

(Post image plagiarized from Jens Kuehnemann)

பிரிவுகள்
அனுபவம்

ஒரு மாதமும் ஒரு நாளும்

நான் பிரிஸ்பேன் வந்து இன்றுடன் ஒரு மாதமும் ஒரு நாளும் ஆகிறது. மூன்று வருட அவுஸ்திரேலிய வாழ்க்கையின் ஆரம்பம். புதிய இடம், புதிய மக்கள், புதிய தனிமை, புதிய அனுபவம், கடந்த ஒருமாத அனுபவங்களின் தொகுப்பு இது. (பதிவு வைத்திருக்கும் இலங்கைப் பதிவர் என்பதிலிருந்து இனி பதிவு வைத்திருக்கும் அவுஸ்த்திரேலிய பதிவர் என்றும் சொல்லலாம்.)

சில நாள் பயணம்

ஏப்ரல் 23 – கொழும்பிலிருத்து சிங்கப்பூர் வழியே சிட்னி, பின் பிரிஸ்பேன். வெறிச்சோடி இருத்த கொழும்பு-சிங்கப்பூர் விமானத்தில் அதிகாலை/நடுராத்திரி 1 மணிக்கு தந்த காலை(?) சாப்பாட்டுக்குப் பின் 3 ஆசனங்களில் ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழும்பினால் சிங்கப்பூர். ஆனா ஒரு அரைமணி நேரம் சிங்கப்பூரை சுத்திக்காட்டிய பின்னர் தரையிறங்கும் போது நேரம் காலை 7 மணி. அடுத்து சிங்கப்பூர்-சிட்னி விமானம் இரவு 8மணிக்கு(!). இடைப்பட்ட 12 மணித்தியாலம்  பல்கலைக்கழக நண்பன் பிறைதீசனோடு சிங்கப்பூர் சுத்துப்பார்த்துவிட்டு மீண்டும் இரவு 7 மணிக்கு விமான நிலையத்துக்கு வந்தோம். சிட்னிக்கான இரட்டைத்தட்டு விமானத்தில் பயணித்ததும் ஒரு முதல் அனுபவம். 7 மணித்தியால பயணத்தில் 2 தடவை உணவு, சில மணிநேர தூக்கம் என்று சிட்னியில் தரையிறங்கும் போது நேரம் காலை 7 மணி – ஏப்ரல் 24.

ஏப்ரல் 24 – உறவினர்களுன் இரண்டு நாட்களும் நண்பர்கள் சஞ்சயன், கேசவனுடன் ஒரு நாளும், மீதி தூக்கத்திலும் என்று சிட்னியில் தங்கியிருந்த நான்கு நாடகளும் போயின. வலைப்பதிவர் கானா பிரபா சிட்னியில் இருக்கும் விடையம் மறந்து போனதால் அவரை சந்திக்க சந்தர்ப்பம் வாய்கவில்லை. (இல்லாவிட்டால் ஒரு பதிவர் சந்திப்பு நடத்தியிருக்கலாம்). சிட்னியில் இருந்து பிரிஸ்பேன் வந்த போது நேரம் இரவு 11 மணி – ஏப்ரல் 27.

பல்கலைக்கழகம்

ஏப்ரல் 28 – பல்கலைக்கழகத்தில் முதல் நாள். ஒரு ஆராய்ச்சி மாணவனாக இருப்பதாலும் தவணை ஆரம்பித்து 2 1/2 மாதங்களின் பின்னர் சேர்வதாலும் இலகுவாக பதிவுசெய்தல் மற்றும் இதர செயற்பாடுகளை செய்ய முடிந்தது. வாரம் ஒருதடவை எனது research supervisorஐ சந்திப்பது தவிர்த்து மீதி எல்லாம் சுயகற்றலாகவே (இப்போது இரண்டு பெரும் புத்துகங்களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறேன்.) இன்றுடன் ஒரு மாதம் – மே 28.

தமிழ்க் கோவில், தமிழ்ப் பாடசாலை மற்றும் Duplex Mode

ஒரு சில குடும்ப நண்பர்கள், முகுந்த் மற்றும் சில பல்கலைக்கழக சீனியர்கள் தவிர பிரிஸ்பேனில் வேறு தமிழர்கள் யாரையும் எனக்கு தெரிந்திருக்கவிலை. ஒரு தடவை குயின்ஸ்லாந்து பிள்ளையார் கோவிலுக்கும் போன போது அங்கு சில தமிழர்களையும் காண முடிந்தது. இங்கும் எல்லாவிதமான அர்ச்சனைகளும் பூசைகளும் இருக்கின்றன. தமிழர்கள் மட்டுமல்லாது வேறு இந்துக்களும் அங்குவருவதை அவதானிக்க முடிந்தது. (அர்ச்சனை பிரசாதமாக ஆப்பிள் வழங்கப்படுகிறது.)

முகுந்த் மூலமாக ‘தமிழ் பிரிஸ்பேன்’ மின்னஞ்சல் குழுமம் பற்றி அறிந்து அந்த குழுவில் இணைந்து கொண்டேன். கடந்த ஞாயிறு பிரிஸ்பேன் தமிழ்ப் பாடசாலையின் விளையாட்டு போட்டிக்கும் போகும் சந்தர்ப்பம் அமைந்து. அங்கு பலருடன் உரையாடும் சந்தர்பமும் கிடைத்தது. தமிழ்ப் பாடசாலை என்றாலும் இங்கு ஆங்கிலம் மூலமாகவே தமிழ் கற்பிக்கப்படுகிறது. இந்த பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்புவது ஒரு குற்ற உணர்ச்சியாலா அல்லது தங்கள் பிள்ளைகளும் தமிழ் கற்கவேண்டும் என்ற எண்ணத்தாலா என்பது எனக்கு குழப்பமாகவே இருந்தது. பல பெற்றொரும் தமது பிள்ளைகளுன் ஆங்கிலத்திலேயே உரையாடுவதை காணக்கூடியதாக இருந்தது.

வெளிநாடுகளில் வாழும் தமிழ் குடும்பங்களில் காணக்கூடிய இன்னொரு முக்கிய அம்சம் ‘Duplex Mode Communication”. அதாவது பிள்ளைகளுக்கு தமிழ் (ஓரளவு) விளங்கும், ஆனால் கதைக்கமாட்டார்கள். ஆதலால் பெற்றோர் தமிழில் உரையாடுவார்கள், பிள்ளைகள் ஆங்கிலத்தில் உரையாடுவார்கள். இந்த விசித்திரமான உரையாடல்களை கிரகித்து கொள்ள சிலகாலம் தேவை. ஆக இந்த தலைமுறையோடு அவர்கள் ஆங்கிலம் பேசும் தமிழர்கள் ஆகிவிடுவார்கள். அதாவது தமிழர் என்பது ஒரு மொழி கடந்த ஒரு சமூக அடையாளமாக மாறிவிடும்.

தனிமையும் ஒரு அனுபவம்

வெளிநாட்டு கல்வி, தனிமையான வாழ்க்கை என்று பலரும் பயங்காட்டினாலும், இதுவும் ஒரு புதிய அனுபவமாக தான் இருக்கிறது. ஒரு புதிய நகரம், புதிய மனிதர்கள், புதிய மனிதர்கள் என ஒரு பெரு நகரத்தில் தொலைந்த குழந்தையை போன்ற அனுபவம், ஆனால் இங்கும் பல புதிய விடையங்கள் சூழ்ந்திருகின்றன அறிந்து கொள்ள. இந்த அனுபவம் எனக்கு பிடித்திருக்கிறது, தனிமை என்பது தனித்திருப்பது அல்ல என்பதும் புரிந்திருக்கிறது.

பிரிவுகள்
அனுபவம்

ஒரு காதல் கதையின் மறுபக்கம்

நான் நீண்டநாட்களுக்கு முன்னர் எழுத தொடங்கி பின்னர் காணமல் போன கதையின் மறுபக்கம். இது எனது பதிவுக்கு பதில் பதிவும் அல்ல, இது நான் எழுதியதும் அல்ல. எழுதியவருக்கு நன்றி…!

உன் ரசிகையாய் வந்து காதலாய் மாறி கனவாகிப்போன கதை இது!

பள்ளிப்பாடம் படிக்கும் போது கொஞ்சம் bore அடிக்க
வேறெந்த நினைவுமின்றி என் நினைவில் நீ மட்டும் எப்படி?

நீ விட்டுச்சென்ற நினைவுகள் அழிந்து போக
உன்மேல் இருந்த காதல் சிதைந்து போக
உனக்காக என் உடல் தழும்புகள் மட்டும் இன்னும் உயிர் வாழுவதனாலா?

காதல் என்ற சொல்லுக்கு அர்த்தம் தந்தவனும் நீ தான்
உன்னோடு என் காதல் கல்லறைக்கு அடிக்கல் எடுத்து தந்தவனும் நீ தான்!

என் காதல், காதல் என்ற புனிதசொல்லை சுமக்க தகுதியானதா? தெரியவில்லை

இரண்டு வருட முகில்கள்
எந்நாளும் பனிமூட்டம்
எப்போதாவது சூரிய சந்திர கிரகணம்.
உன் காதலில் முழுமையில்லை
என் காதலில் வரமுமில்லை.

இரண்டு வயதுக்குழந்தையின் சாமர்த்தியம் கூட தெரியாத பேதை இவள்.
என் கண்கள் கடலில் மூழ்கியும், கண்ணாளனின் கருணை இல்லை.
கடவுளாகிப்போனான் அவன் அதாவது
கல்லாகிப்போனான்.

நான்கு வருடம் நாராய் போனது.
உன்னை காதலித்த இரு வருடம்
உன்னை மறக்க முயன்ற இரு வருடம்.
ஐந்தாம் வருட இன்ப அதிர்ச்சியாய் என்னை தேடி வந்தாய் !

என்னை காதலிப்பதாய் உணர்ந்தாய்
என் நான்கு வருட அழிவிற்கு நீதி கேட்ட போது
எனக்கு possessive என்றாய்.
உன் கண்ணில் நான் என்னை பார்த்ததும் உண்மை
அதில் உன் குற்ற உணர்வு பாராததும் உண்மை.

மீண்டும் கைப்பிடிப்போம் என்றாய்!

உன்னை பிடிக்கும்
உன்னுடன் வாழப்பிடிக்கும்
உனக்காக சாகப்பிடிக்கும்
ஆனால் உன் சாக்குப்போக்கு காரணம் பிடிக்கவில்லை.

என்னிடம் உனக்கு இரண்டாம் முறை காதல் வரக்காரணம் புரியவில்லை
புரியாத காதல் எளிதில் பிரியாதா?

முதன் முறை பூகம்பத்தில் ஏற்பட்ட தாக்கமே
பத்து வருடமாய் இன்னும் பாத்தி கட்டி நிற்கும் போது
இரண்டாம் முறை ஏற்க மனம் இடம் கொடுக்குமா?
கொடுத்தாலும் தாங்குமா ???????????

இன்று உனக்கு ஒரு காதலி
எனக்கு ஒரு காதலன்
நாம் இருவரும் நண்பர்கள்!
திரைப்படங்கள் கூட இன்னும் சித்தரிக்காத உறவு இது.

நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன் உனக்கு
நான் தவிக்க தவிக்க என் காதலை தூக்கி ஏறிந்ததற்கு!

பிரிவுகள்
அனுபவம்

ஒரு நீண்ட ஓய்வை நோக்கி

மிக நீண்ட நாட்களாக எனது பதிவுப்பக்கம் வருவதந்கான சந்தர்பம் கிடைக்கவில்லை. கடந்த பலநாட்களாக 15 மணித்தியாலங்களாக மாறிவிட்ட வேலை முறையும் 4 மணித்தியால நித்திரையும் முழுமையாக எந்த பதிவுகளையும் எழுதிமுடிக்க ஏதுவாக இல்லை. இன்று கூட அதிகாலை 5 மணிக்கு வேலை முடித்து, மீண்டும் காலை அலுவலகம் செல்லவேண்டும் என்பதால் இடையில் நித்திரையின்றி இருக்கு இந்த நேரத்திலேயே இந்த பதிவையும் எழுத முடிகிறது.

இவ்வாறான சூழ்நிலை இன்னும் 3-4 மாதங்களுக்கு நீடிக்கும் நிலை இருப்பதால் எனது பதிவுகளில் புதிதாக எதையும் எழுதும் வாய்ப்புக்கள் இல்லை. ஏற்கனவே எழுத ஆரம்பித்து இன்னமும் Draftல் உள்ள இஸ்தான்புல் மற்றும் மலேசிய பயண கட்டுரைகளை மட்டும் அவ்வப்போது எழுதினால் வெளியிடலாம்.

மீண்டும் சந்திக்கலாம்… //

பிரிவுகள்
அனுபவம்

அழகு – காதல் – கடவுள் – பணம்

நான் பதிவு எழுதுவதே அபூர்வம், தொடர்பதிவு எழுதியதே இல்லை. இது தான் நான் முதல் முறையாக வலைப்பதிவில் எழுதும் தொடர் பதிவு. ஆதலால் விதிமுறைகளும் தெரியாது, இந்த தொடர்பதிவின் வரலாறும் தெரியாது. ஏதோ கொடுக்கப்பட்ட தலைப்பை மட்டும் வைத்துக்கொண்டு இதை எழுதுகிறேன்.

அழைத்தவர்:

  • மயூரேசன் – நன்றி… 🙂

அழைப்பது:

  • யார் ஏற்கனவே அழைக்கப்பட்டிருக்கிறார்கள், யார் அழைக்கப்படவில்லை போன்ற விபரங்கள் தெரியாததால் யாரையும் அழைக்கப்போவதில்லை. – தப்பிச்சிட்டாங்க… 🙂

—————————————-

அழகு

அக அழகு, புற அழகு, பிற அழகு என்று பல அழகுகள் இருப்பதாக அறிஞர் பெருமக்கள் கூறுவர். ஆனாலும் எனக்கு அது பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது. எனக்கு அழகு என்றவுடன் ஞாபகம் வருவது ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள். பொதுவாக இயற்கையின் அழகு பிடிக்கும். இது பெண்களையும் சேர்த்து தான்… 😉

அழகியல் சிறப்புள்ள புகைப்படங்களை எடுக்கவேண்டும் என்பது நீண்டநாள் ஆசை, பயிற்சியும் முயற்சியும் இருந்தால் அதுவும் கைகூடலாம். (இதில் Nude photography (NOT erotic photography) போன்றவற்றிலும் ஆர்வம் உண்டு)

காதல்

காதலில் வெற்றியா தோல்வியா என்பதல்ல முக்கியம், காதலித்தவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்களா என்பதே முக்கியம் என்பது என் கருத்து. காதலில் எனது அனுபவங்களை தொகுத்து கதை ஒன்று எழுதிக்கொண்டிருக்கிறேன்….(ஆனால் எப்போது எழுதி முடியும் என்பது தெரியாது 🙂 )

கடவுள்

இல்லாத ஒன்றை இல்லை என்று சொல்வது, அந்த இல்லை என்றை கூற்றை தவறாக்கி இல்லை என்று சொல்லப்பட்டது இருக்கிறது என்பதாவ அமையும் என்பது “Nothing means Something” என்ற கூற்றுக்கு நான் கொடுக்கும் விளக்கம். ஆக நான் கடவுள் இல்லை என்று சொல்ல மாட்டேன். (இது ஒரு தெளிவான கூற்று, விளங்காதவர்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டால் விளக்க முடியும் 😉 ).

பணம்

பணம் என்பது நாம் செலவு செய்யும் வரை பெறுமதியற்றது, ஆதலால் பணத்தை செலவு செய்வதே பிடிக்கும். ஆனாலும் குறுகியகாலத்துக்கு சேமித்து மொத்தமாக செலவளிப்பது எனது வழக்கம். செலவு செய்வதற்கு என்பதை தாண்டி பணத்தின் மீது ஆர்வமில்லை. (வேறு எதற்கு தான் என்ற கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது, எப்போதுமே செலவுசெய்யாமல் தொடர்ந்து சேமிக்கும் யாரிடமாவது கேட்கவும்…)

—————————————-

பானையில் அவ்வளவுதான்…. ஆகவே பதிவிலும் அவ்வளவே…

அன்புடன்,
நிமல் (எ) நிமலபிரகாசன்

பிரிவுகள்
அனுபவம்

Skandha (அ) அப்பா

Skandha ஒரு கண்டிப்பான வங்கி மேலாளர், எனக்கு ஓரளவு கண்டிப்பான அப்பா.

Skandha நேற்றோடு வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார், ஏனென்றால் அப்பாவுக்கு இன்று அறுபதாவது பிறந்தநாள்.

அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்…!

அன்புடன்,
நிமல்