பிரிவுகள்
அனுபவம்

மகிழ்ச்சியாக வாழ்வது என்பது…

எங்கள் தென்னாசிய குடும்பக் கட்டமைப்பில் தியாகங்களும் அர்ப்ணிப்புக்களும் அதில் தவறினால் வரும் குற்றவுணர்வுகளுமே இயங்குசக்கரங்களாக இருக்கின்றன.

இங்கு பெற்றொர் பிள்ளைகள் என்ற உறவானது ஒருவரின் வாழ்வினூடு இன்னுமொருவர் வாழ்வதாகவே இருக்கிறது. பெரும்பாலான பெற்றொர் தங்கள் வாழ்நாளில் தம் விருப்பிற்கோ மகிழ்விற்கோ வாழ்வதில்லை. அவர்கள் தமக்கான செலவுகள் எதுவும் செய்வதில்லை, பொருட்கள் எதுவும் வாங்குவதில்லை, பயணங்கள் எதுவும் செல்வதில்லை. பிள்ளை வளர்ப்பு என்பது மட்டுமே இங்கு முன்னிறுத்தப்படுகிறது. இங்கு வளரும் பிள்ளைகளும் பெற்றோராலும் சமூகத்தாலும் எதிர்பார்கப்படும் குறித்த வாழ்க்கைப் பாதையில் மட்டுமே செல்ல பழக்கபட்டுவிடுகிறார்கள். இதில் பெற்றோரின் எதிர்பார்ப்பு தங்கள் எதிர்பார்புக்கமைய பிள்ளைகள் வாழவ்வது என்று ஆகிறது. பிள்ளைகளின் எதிர்பார்பு பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்துவது என்று ஆகிவிடுகிறது. தமது வாழ்க்கையின் மகிழ்ச்சியை அடுத்த தலைமுறையில் தேடுவதற்கு அவர்களும் தயாராகிவிடுகிறார்கள்.

எல்லாரும் பெற்றார் பிள்ளைகளுக்காகச் செய்யும் தியாகங்களைப் பற்றிச் சொல்கிறார்கள். அதன் காரணமாக அந்த பெற்றோர் எதிர்பார்ப்பதை பிள்ளைகள் செய்வது அவசியம் என்றும் சொல்கிறார்கள். பெற்றோர் பிள்ளைகள் மகிழ்வாக வாழ்வதற்கே அறிவுரை சொல்வதாகவும் சொல்கிறார்கள். அப்படியாயின் மகிழ்ச்சியாக வாழும் பிள்ளைகள், தங்கள் மகிழ்ச்சியை விடுத்து, பெற்றோர் சொல்லும் வழியில் மகிழ்ச்சியை தேடுவதில் உள்ள நியாயம் என்ன? பெற்றாருக்காக தங்கள் மகிழ்ச்சியை தியாகம் செய்யும் பிள்ளைகள், தங்கள் பிள்ளைகள் தமக்காக அவர்களின் மகிழ்ச்சியை தியாகம் செய்ய எதிர்பார்ப்பதில் உள்ள நியாயம் தான் என்ன? இந்த முடிவில்லா சுழற்சியின் முடிவு தான் என்ன?

குடும்பத்தில் உள்ள அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை மற்றவரின் மகிழ்ச்சிக்காகத் தியாகம் செய்தால், இறுதியில் யாராவது மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? தமது மகிழ்ச்சிக்குக் காரணம் மற்றவரின் தியாகம் எனின், அந்த மகிழ்ச்சி அவர்களுக்கு நிலையானதாக இருக்குமா?

மற்றவரை பாதிக்காமல் தங்கள் மகிழ்ச்சிக்காக வாழ்பவர்களை சுயநலவாதிகளாக முத்திரை குத்தி, அவர்களை குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்கி, அவர்களின் மகிழ்ச்சியில் தவறு காணவே எல்லாரும் தயாராக இருக்கிறார்கள். ஒரு தனிநபர் மற்றவர்களை பாதிக்காத வகையில் மகிழ்சியுடனும் திருப்தியுடனும் வாழ்வதில் என்ன தவறு?

மற்றவர் வகுத்த பாதையில் வாழ்வது மட்டுமா இங்கு முக்கியமாகிறது? எல்லோரும் மகிழ்சியாக வாழ்வதே முக்கியம் என்றல்லவா சொன்னார்கள்!

பிரிவுகள்
அனுபவம்

நான் சிறுவனாயிருக்கையில் நெருங்கிய உறவினர் ஒருவரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளானேன்!

இதைப்பற்றி இதுவரை யாரிடமும் எங்கேயும் கதைத்ததில்லை. ஆனால் இன்று என் கதையை பொதுவெளியில் பகிரலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். எனக்கு 12-13 வயது இருக்கும்போது, நான் என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறேன். அதன் விளைவுகள் இன்னமும் என் வாழ்வில் எங்கோ இருப்பதாகவே நான் உணர்கிறேன்.

நான் 7ம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. நான் கொழும்புக்கு இடம்பெயர்ந்து வந்து ஒருவருடத்துக்கும் உள்ளான காலப்பகுதி அது. பாடசாலை முடிந்ததும் ஒரு குறித்த உறவினர் வீட்டில் சென்று நிற்பது வழக்கம் வழமையாக அந்த வீட்டில் பல உறவினர்கள் இருப்பார்கள். ஆனால் இந்த குறிப்பிட்ட நாளில் உறவினர் எல்லோரும் எங்கோ சென்றிருந்தனர் (எதற்காக என்பது நினைவில் இல்லை). அந்த குறித்த உறவினர் மட்டுமே வீட்டில் இருந்தார்.

வழமைபோலவே நான் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் அமர்ந்து ஒரு சிறவர் நிகழ்ச்சியையோ திரைப்படத்தையோ பார்க்கத் தொடங்கினேன். அந்த உறவினர் என் அருகில் இருந்த கதிரையில் வந்து அமர்ந்தார். அது வழமையாகவே இருந்தது. அவர் என் தொடையில் தன் கையை வைத்தார். அது சாதாரணமாக இருந்தது. அவர் என் காற்சட்டை வழியே கையை விட்டு என் ஆணுறுப்பை தொட்டார். அது குழப்பமானதாக இருந்தது. அவர் என் ஆணுறுப்பை வெளியே எடுத்து நாக்கால் நக்கத் தொடங்கிரார். அது பிழையாக இருந்தது.

எனக்கு என்ன நடக்கிறது என்று விளங்கவில்லை, ஆனால் அது தவறானது என்று மட்டும் விளங்கியது. நான் அவரைத் தள்ளிவிட்டு என் பாடசாலைப் பையையும் தூக்கிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே ஓடினேன். பிரதான வீதி வரை ஓடிவந்த எனக்கு வீடு எந்தப்பக்கம் என்பது தெரியவில்லை. பார்த்த நினைவிருந்த சில கட்டடங்களை குறிப்பாக வைத்து ஒரு திசையாக நடக்கத் தொடங்கினேன். பேருந்தில் செல்ல பணமும் இருக்கவில்லை, வழியும் தெரியாது. ஒருவாறாக வழிகேட்டு வீட்டுக்கு போய்விட்டேன். ஆனால் அந்த நேரத்தில் அம்மா என்னை கூட்டிவருவதற்காக அந்த உறவினர் வீட்டுக்கு போயிருந்தார். அங்கு நான் இல்லை என்று திரும்பி வந்த அவரிடம் சொல்ல என்னிடம் காரணம் எதுவும் இருக்கவில்லை. என்ன நடந்தது என்றும் சொல்லவில்லை. அதன் பின்னர் இன்றுவரை யாரிடமும் சொல்லவுமில்லை.

இது என்ன பெரிய விடயமா என்று சிலருக்கு இருக்கலாம். அது மீண்டும் நடக்கவும் இல்லை. அந்த உறவினர் இருக்கும் இடங்களில் தனிமையா இருப்பதை தவிர்த்து வந்திருக்கிறேன். இப்போது அவரை நேரடியாக பயம் இன்று பார்க்கவும் முடிந்திருக்கிறது. ஆனாலும், 21 வருடங்களின் பின்னரும், அந்த சம்பவத்தின் விளைவுகள் என்னை சில வகைகளில் பாதித்திருப்பதாகவே உணர்கிறேன். குடும்பங்கள் உறவுகள் என்ற கட்டமைப்புக்கள் மீது அவநம்பிக்கையான ஒருவனாக நான் வளர்ந்திருக்கிறேன். நான் எப்போதும் தனிமையை விரும்புபவனாகவும் தேவையில்லாமல் மற்றவர்களிம் தொடர்புகளை தவிர்ப்வனாகவும் இருக்கிறேன். என்னுடைய இருபதுகளின் நடுப்பகுதி வரையுமே சுய சந்தேகம் உள்ள ஒருவனாகவே இருந்திருக்கிறேன். இதற்காக நான் சொல்லவரவில்லை இவை எல்லாவற்றுக்குமே அந்த சம்பவம் தான் காரணம் என்று. ஆனால் அதன் பாதிப்புக்கள் என்னில் இருந்திருக்காது என்றும் என்னால் சொல்ல முடியாது.

ஆனால் இப்போது இத்தனை வருடங்களுக்குப் பிறகு நான் ஏன் இதைப்பற்றி பகிர்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். அண்மையில் இதேபோன்ற நெருக்கிய குடும்ப அங்கத்தவர் ஒருவரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளான வேறொருவருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் இது தனக்கு மட்டுமே நடந்ததாக நினைத்துக்கொண்டிருந்ததையும் அறிய முடிந்தது. நான் என் கதையை இவ்வாறு பொதுவெளியில் பகிர்வதன் மூலமாக அவர்களும் தாங்கள் தனித்திருக்கவில்லை என்பதை உணரமுடியும். இந்த பிரச்சனை தொடர்பான உரையாடல்களின் ஆரம்பப்புள்ளியாகவும் இது இருக்கட்டும்.

பின்குறிப்பு: எனக்கு பாலியல் தொல்லைகள் செய்த நபர் யார் என்று நான் இங்கு குறிப்பிடவில்லை. ஆனால் அவரோ அவரின் வளர்ந்த பிள்ளைகளோ இதைக் கட்டாயம் வாசிப்பார்கள். நான் தன் பெயரை சொல்லிவிடுவேனா என்ற சந்தேக்திலேயே அவர் வாழட்டும். அவரின் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளை அவருடன் தனித்து விட நேர்ந்தால் அவதானமாக இருக்கட்டும். பெறாமகனுக்கும் பேரனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

பிரிவுகள்
அனுபவம்

நானும் ஒரு சிங்களத்தமிழன்

கடந்த சில வாரங்களாகவே இணையத்தில் உலாவும் நேரம் குறைந்துவிட்டது. காரணங்கள் இங்கு முக்கியமில்லை. ஆனாலும் பேஸ்புக் டுவீட்டர் பக்கம் மட்டும் அவ்வப்போது தலைகாட்டி ஜனநாயக கடமையை நிறைவேற்றி விடுவதுண்டு. இந்த உலாவல்களில் தான் கடந்த சில நாட்களாக சிங்களத்தமிழர் என்ற ஒரு புதிய சொற்தொடர் பரவலாக பகிரப்படுவதை காணக்கிடைத்த‍து. (அதன் வரலாறு இங்கே. இதையும் இன்னும் சில பல பதிவுகளையும் வாசித்த பின்னரே அதன் பின்னணி அரைகுறையாகவாவது விளங்குகிறது!). இது பலருக்கு அதிச்சியான ஒரு சொற்தொடராக இருக்கலாம், சிலருக்கு தனிப்பட்ட ரீதியில் பாதிப்பதாகவும் இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி இருக்கவில்லை. ஏனென்றால், நானும் ஒரு சிங்களத்தமிழன்.

தமிழர் என்பது ஒரு இனம் இல்லை என்று நம்புபவன் நான். ஒரு மொழி பேசுவதால் மட்டுமே ஒரு இனமாக முடியாது. அதிலும் முக்கியமாக தமிழ் பேசுபவர்கள். எமக்குள் இருக்கும் ஒற்றுமையே எந்த அடிப்டையிலாவது வேற்றுமை பார்க்க முடிவது. அதைத்தாண்டி தமிழர் என்பது நூற்றுக்கணக்கான ஒத்த மொழி பேசும் குழுக்களை குறிக்கும் ஒரு பொதுப்பெயர். அவ்வளவு தான். தமிழ்த்தமிழர், ஆங்கிலத்தமிழர், சிங்களத்தமிழர் என்பதெல்லாம் தமிழரில் அடங்கும். இந்த அடிப்படையில் நானும் ஒரு சிங்களத்தமிழன்.

நான் பிறந்தது யாழ்ப்பாணம், ஈழத்தமிழர் வாழும் இடம். நான் வளர்ந்தது ஹப்புத்தலை, மலையகத்தமிழர் வாழும் இடம். (அதன் பின் இன்னும் சிறிது காலம் யாழ்ப்பாணம்). நான் படித்த‍தும் அதிக காலம் வாழ்ந்த‍தும் கொழும்பு, சிங்களத்தமிழர் வாழும் இடம். நான் இப்போது இருப்பது அவுஸ்திரேலியா, புலம்பெயர்தமிழர் வாழும் இடம். இவர்களைத் தவிர இலங்கைத்தமிழர், இந்தியத்தமிழர், சிங்கப்பூர்த்தமிழர், மலேசித்தமிழர் போன்ற பலவேறு தமிழர் இனக்குழுக்கழுடன் நெருங்கிப் பழகும் வாய்பும் எனக்கு கிடைத்திருக்கிறது. எனது இந்த அனுபவங்கள் நான் எந்தத்தமிழர் குழுவுக்குள் உள்ளடங்குகிறேன் என்பதில் எனக்குள் பல சந்தேகங்களைத் தோற்றுவித்திருக்கிறது. இந்த சூழலில் நான் ஒரு குழுவை தேர்ந்தெடுக்க பயன்படுத்தக்கூடிய அடிப்படை, நான் எங்கு அதிக காலம் வாழ்ந்திருக்கிறேன் என்பது. அவ்வகையில், நானும் ஒரு சிங்களத்தமிழன்.

இந்த தெரிவில் அரசியல் சார்பு, மதச் சார்பு போன்றவை எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது தெரியவில்லை. அவற்றயும் சேர்த்தால் இன்னும் சில பல உபபிரிவுதமிழர் குழுக்கள் இருக்க‍க்கூடும். ஆனால் இப்போதைக்கு நான் எனக்கான குழுவை தேர்தெடுத்திருக்கிறேன். இன்னும் சில காலத்தில் எனது அனுபவங்கள் மாறும் வேளையில் நான் வேறு ஒரு குழுவை தேர்ந்தெடுக்க கூடும். தமிழர் குழுக்கழுக்கு இடையில் மாறுவதற்கு மதமாற்றம் போன்ற சடங்குகளோ தடைகளோ இருப்பதாக தெரியவில்லை. அதுவரை, நானும் ஒரு சிங்களத்தமிழன்.

பிரிவுகள்
அனுபவம் Oliyoodai Tamil Podcast

மோட்டர் சைக்கிள் டைரி (வீடியோ)

நான் அவுஸ்திரேலியாவில் மோட்டர் சைக்கிள் ஓடப் பழகி, லைசென்ஸ் எடுத்த கதை.

Download

பிரிவுகள்
அனுபவம்

PhD அடிப்படைகள்

ஒரு PhD மாணவனான என்னிடம் பல சந்தர்ப்பங்களிலும் PhD பற்றி பல சந்தேகங்கள் கேட்கப்படும். இது அவ்வாறான அடிப்படையான சந்தேகங்களையும் PhD கல்வி தொடர்பான மேலதிக தகவல்களையும் தரும் ஒரு பதிவு இது.

PhD அடிப்படைகள்

PhD?

  • ஆங்கிலத்தில் Doctor of Philosophy, லத்தின் மொழியில் Philosophiae Doctor, தமிழில் முனைவர்/கலாநிதி
  • இது குறிப்பிட்ட துறையில் ஆய்வு செய்து, ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து பெறும் ஒரு உயர் கல்விப் பட்டம்.
  • Doctor of Philosophy என்பதில் philosophy என்பது கிரேக்க மொழியில் ‘அறிவின் மீதான காதல்’, “love of wisdom” என்று அர்த்தப்படும்.

PhD என்றால் என்ன?

அடிப்படையில் PhD கல்வி ஒரு ஆராய்ச்சிக் கல்வி. ஆனால் இது நோபல் பரிசை வாங்கித்தரும் அளவுக்கான பெரியா ஆராய்ச்சியாக இருப்பதில்லை, (நோபல் பரிசு கிடைத்தாலும் தப்பில்லை). நீங்கள் உலகின் பெரும் ஆராய்ச்சியாளராகவும் ஆகப்போவதில்லை. சரியாக சொல்வதென்றால் PhD என்பது ஒருவருக்கு ஆராய்ச்சி செய்யும் திறமை இருக்கிறது என்பதை நிரூபிக்கும் ஒரு சந்தர்ப்பம். PhD என்பது ஒருவகையில் ஆராய்ச்சி செய்வதற்கான ஒரு பயிற்சி.

ஏன் PhD செய்ய வேண்டும்?

  • பலரும் பல காரணங்களுக்காக PhD செய்வார்கள்.
  • சிலருக்கு இது தொடர்ந்து ஆராய்ச்சி செய்வதற்கான ஒரு பயிற்சி.
  • சிலருக்கு தமது தொழிற்துறைசார்ந்த அறிவை வளரக்கும் ஒரு சந்தர்ப்பம்.
  • சிலருக்கு தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்கும் ஒரு வழி.
  • ஏன் செய்யக்கூடாது என்று நினைக்கும் இன்னும் சிலர்,
    என்னைப் போல, (ஒருவகையான வெட்டி பந்தாவுக்காகவும் செய்யலாம்).

ஒரு PhD கற்கை நெறியில் சேர என்ன தேவை?

  • ஏதாவது ஒரு நோக்கம், அந்த நோக்கத்தை அடைவதற்கு நேரத்தையும் உழைப்பயும் கொடுக்க தயாராயிருத்தல்.
  • இதை தவிர, பெரும்பாலும் ஒரு Masters degree அல்லது first class அல்லது second class, upper division உள்ள ஒரு Bachelors honors degree, அல்லது இவற்றுக்கு சமனாக கருதக்கூடிய வேறு தகமைகள் (துறைசார்ந்த வேலை அனுபவம் போன்றவை).
  • ஆராய்ச்சிப் படிப்பை வெற்றிகரமாக தொடரும் திறமை உள்ளவர் என்பதை நிரூபித்திருத்தல்.
  • அது முன்னைய கல்விகளில் செய்த (சிறு) ஆராய்ச்சி செயற்திட்டங்கள் வாயிலாகவோ, வேறு வழிகளிலோ காட்டப்படலாம்.

எவ்வளவு பணம் செலவாகும்?

  • பொதுவாக PhD மாணவர்களிடம் பாடநெறிக்கான கட்டணம் அறவிடப்படுவதில்லை. (மிகவும் குறைவு, நான் அறிந்து யாரும் இல்லை)
  • ஏதாவது புலமைப்பரிசில் மூலமாக மாணவர்களின் வாழ்க்கைச் செலவுக்காக ஒரு கல்வி உதவித் தொகை வழங்கப்படலாம்.
  • அல்லது மாணவர்கள் கற்பித்தல் உதவியாளர்களாகவோ (teaching assistants) ஆராய்ச்சி உதவியாள்ர்களாகவோ (research assistants) வேலை செய்யவும் முடியும்.

எவ்வளவு காலம் செலவாகும்?

  • இது நாட்டுக்கு நாடு, கல்வி நிறுவனத்துக்கு நிறுவனம், துறைக்குத் துறை வேறுபடும்.
  • குறைந்த பட்சம் 2 வருடங்களாகவும், பெரும்பாலும் 3 அல்லது 4 வருட்ங்களாகவும், பொதுவாக அதிக பட்சம் 6 வருடங்களாகவும் இருக்காலாம்.
  • ஆனாலும் 10-12 வருடம் PhD செய்யும் சிலரையும் சந்தித்திருக்கிறேன்.

PhD முடிவில் என்ன?

  • பொதுவாக ஒரு பட்டம் பெறுவதற்கான ஆராய்ச்சிக் கட்டுரை (ஆய்வேடு) சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
  • இது சில சந்தர்ப்பங்களில் 100,000 அல்லது அதற்கும் அதிக சொற்களை கொண்டதாக இருக்கலாம்.
  • பெரும்பாலான நாடுகளில் ஒரு நேர்முகத் தேர்வில் தேர்வாளர்களின் ஒப்புதலையும் பெற வேண்டும்.
  • இந்த தேர்வுகளில் சித்தி அடைந்தால், பொதுவாக உங்கள் பெயருக்கு முன்னால் 2 எழுத்துக்களும், பெயருக்கு பின்னால் 3 எழுத்துக்களையும் சேர்க்க முடியும்.

இது PhD தொடர்பான ஒரு அடிப்படையான அறிமுகம். உங்களுக்கும் PhD தொடர்பான சந்தேகங்கள் இருந்தலால் தெரியப்படுத்தவும், என்னால் இயலுமானவரை அவற்றுக்கான பதில்களை தர முயற்சிக்கிறேன்.

தேவை இருந்தால் மீண்டும் இன்னுமொரு பதிவில் சந்திக்கலாம்…

பிரிவுகள்
அனுபவம்

எழுதாத சில பதிவுகள் – 2010

நான் ஒரு பதிவு எழுதாத பதிவராக என்னை நிலை நிறுத்திய வருடம் 2010. இந்த வருடம் எனது பழைய நாட்குறிப்புக்களை வைத்து தேற்றிய ஏழு பதிவுகளைத் தவிர்த்துப் பார்த்தால் ஐந்து பதிவுகளை மட்டுமே நான் பதிவு என்று நினைத்து எழுதியிருக்கிறேன். ஏன் என்று யோசித்தால் ஒரே ஒரு காரணம் தான் தோன்றுகிறது: எனக்கு எழுத வரவில்லை.

எழுதாத சில பதிவுகள் - 2010

நான் கதைகள் எழுத கதாசிரியனோ, கவிதைகள் புனைய கவுஜனோ இல்லை. என் வாழக்கையின் சில பக்கங்களை பதிந்து வைப்பதே எனது பதிவுகள். இங்கு எனது எண்ணங்களை எழுத்தாக மாற்றுவது அவ்வளவு சாத்தியமானதாக இல்லை. அதுவும் ஆங்கிலத்தில் எழுத முடிந்த அளவுக்கு தமிழில் எழுத முடிவதில்லை; தமிழ் சிக்கலானதாக இருக்கிறது. ஆங்கிலம் ததிங்கினத்தோம் ஆடிய ஒரு காலத்தில் தரமற்ற கட்டுரைகளானாலும் கருப்பொருளே இல்லாமல் 15-20 பக்கங்கள் (தமிழில்) எழுத முடிந்திருக்கிறது. இப்போது அது சாத்தியமாவது இல்லை. ஆங்கில எழுத்தின் கட்டமைப்பு அல்லது கட்டற்ற கட்டமைப்பு எனக்கு வாய்திருப்பது போல் தமிழ் எழுத்து வடிவத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. ஆங்கிலத்தில் எந்த டென்ஸ் (tense) என்று யோசிக்காமல் எழுதுவது போல் தமிழில் முடிவதில்லை. முக்கியமாக தமிழில் ஸ்பெல்லிங் (spelling) மிகவும் குழப்பமானதாக இருக்கிறது. எல்லாவற்றிலும் மிக முக்கியமாக மற்றவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் என்னால் எழுத முடிவதில்லை (உதாரணம்: இந்த பதிவு).

எழுத ஆரம்பித்து முடிக்காமலே பத்துக்கும் அதிகமான பதிவுகள் இருக்கின்றன. அவற்றில் பாதி ஒரு வருடத்துக்கும் பழையவை. அவற்றை இனியும் எழுதி முடிக்கும் எண்ணம் இல்லை. எனவே இந்த வருடத்தில் எழுதியிருக்க வேண்டிய சில பதிவுகளின் தொகுப்பாக, சம்பவங்களின் தொகுப்பாக இந்த பதிவு.

இந்த வருடம் ஆரம்பித்தபோது நான் கொழும்பில் ஒரு மென்பொருள் பொறியியலாளன். வருட இறுதியில் அவுஸ்திரேலியாவில் ஒரு ஆராச்சி மாணவன். கடந்து வந்த 12 மாதங்களில் பல நல்ல அனுபங்களையும் சில நல்ல மனிதர்களையும் கடந்து வந்திருக்கிறேன். நான் ஏப்ரல் 2009ல் மென்பொருள் பொறியியலாளனாக வேலைக்கு சேர்ந்த போதே எடுத்த ஒரு முடிவு மார்ச் 2010ல் வேலையை விடுவது. வேலையில் சேரும் போதே இதை சொல்லிவிட்டு வேலையில் சேர்ந்த ஒரு விசித்திரமான கதை அது. அதன் பின்னர் என்ன என்று திட்டமிட்டபோது முதன்மையாக இருந்தது ஆராய்ச்சி படிப்பு. இதில் சிறுவயது கனவு, இலட்சியம் என்று எதுவுமம் இல்லை, 3-4 வருடங்கள் திட்டமில்லாமல் கடந்து போகும் என்கிற சோம்பேறி திட்டம் மட்டுமே இருந்தது.

நான் 2009 இறுதியில் இருந்தே பல பல்கலைக்கழகங்களுக்கும் விண்ணப்பித்திருந்தேன். 2010இன் தொடக்கத்திலிருந்து அவர்களின் பதில்கள் வர ஆரம்பித்தன. தம்மிடம் என்னைவிட திறமையான விண்ணப்பங்கள் இருக்கின்றன என்று MIT (US) சொன்னது, மிகவும் நியாயமான கூற்று. Purdue (US) ஸ்காலர்ஷிப் தரமாட்டேன் என்று சொன்னது, நான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டேன். University of Wollongong (AU) ஸ்காலர்ஷிப் இல்லை என்றது, இருந்தாலும் நான் வருவதாக இல்லை என்று பதில் போட்டேன். University of New South Wales (AU) எல்லாம் தரலாம், செப்டெம்பரில் வா என்றது. National University of Singapore (SG) ஜூலையில் வா என்றது, Queensland University of Technology (AU) பெப்ரவரி 15 வா என்று ஜனவரி 30 மின்னஞ்சல் அனுப்பியது. கடைசியில் நான் ஏப்ரல் 30 வருவதாக QUTஐ சமாதானப்படுத்தினேன்.

மார்ச் 31க்கு பின்னர் வேலையில்லா வெட்டிப்பயலாக நண்பர்களோடு ஒரு இரண்டு வாரங்கள் செலவிட்ட பின்னர் ஏப்ரல் கடைசி வாரத்திலிருந்து அவுஸ்திரேலிய வாசம். இந்த புது தேசத்தில் என் முதல் மாத அனுபவங்கள் இங்கே.

இதற்கு பின்னரான எட்டு மாதங்களிலும் வாசித்தலும் எழுதுதலுமாகவே வாழ்க்கை கடந்து போய்விட்டது. தனிமையை விரும்பும் எனக்கு இந்த வாழ்க்கை மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. எப்போதாவது மனிதர்களுடனும் மிகுதி நேரம் எல்லாம் கணனியுடனும் எனது பொழுதுகள் நகர்கின்றன. ஆரம்பத்தில் விசித்திரமானதாக இருந்த ஒரு புது நாட்டின் வாழ்க்கை முறை, சில நாட்களிலேயே சாதாரணமானதாக மாறிவிட்டது. ஆரம்பத்தில் இரண்டு மாதங்கள் வசித்த வீடு மாணவர்களுக்கான ஒரு குடியிருப்பு, ஆண்களும் பெண்களுமான அந்த சர்வதேச மாணவர்களுடன் இருந்தது ஒரு வித்தியாசமான அனுபவம். அதன் பின்னர் தனித்த வீடும், மின்சாரம், தொலைபேசி, நீர் என்று கட்டணங்கள் செலுத்துவதும் ஒரு அனுபவம் தான்.

இதை தவிர சொல்லிக்கொள்ளும் படி செய்த மற்றுமொரு வேலை கண்டதையும் காணாததையும் படமெடுத்து திரிந்தது. எடுத்த சில படங்களை இங்கு காணலாம்.

கடைசியாக பயணிப்பதற்கென்றே விசாலமான இந்த நாட்டில் சில தலங்களை தரிசித்து வரும் வாய்ப்பு இந்த வருடத்தில் அமைந்தது. இரண்டு தடவை தங்க கடற்கரைக்கும், பிரிஸ்பேன் நகரை சுற்றிலும் உள்ள வேறு சில இடங்களுக்கும் அவ்வப்போது சென்று வந்திருக்கிறேன். நவம்பர் மாத இறுதியில் ஒரு 3300கிமீ பெரும் பயணம். பிரிஸ்பேனிலிருந்து மெல்பேர்ணுக்கு நண்பன் அருணனுடன் பயணித்தது. சிட்னி வழியாக பல சுற்றுலா நகரங்களையும் பார்த்து சென்ற இந்த பயணத்தின் இன்னுமொரு முக்கிய அம்சம் நான் முதன் முதலாக வாகனத்தை ஓட்டிச் சென்ற நீண்ட பயணம் இது.

படங்களுடன் இந்த பதிவை மேலும் தெளிவாக இங்கே வாசிக்கலாம்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்…

பிரிவுகள்
அனுபவம்

2010ல் டுவீட்டியவை

2010ம் வருடம் நான் தமிழில் பதிவுகள் தான் எழுதவில்லை என்று பார்த்தால் நான் அதிகம் தமிழில் டுவீட்டவும் இல்லை. இது எனது 2010 தமிழ் டுவீட்டுக்களின் தொகுப்பு. (இதுக்கெல்லாமா தொகுப்பு எண்டு கேக்கப்படாது).

2010ல் டுவீட்டியவை

  1. 2 Jan – புதுவருடத்தில் மீண்டும் ‘புது வெள்ளம்’ முடிந்தது இனி ‘சுழற்காற்று’ ஆரம்பம்…
    • இந்த வருடமும் நான் மீண்டும் ‘பொன்னியின் செல்வன்’ வாசித்தேன். இது எத்தனையாவது தடவை என்பதெல்லாம் நினைவில் இல்லை, ஆனால் ஒவ்வொரு முறையுமே அது புதிதாகவே இருக்கிறது.
         
  2. 8 Janசொந்த செலவில் சூனியம் வைக்க விரும்புவோர் கட்டணம் செலுத்தி உத்தமம் (INFITT) உறுப்பினராகலாம். (என்னாம கும்மியடிக்கிறாங்க…!) #தமிழ்
    • 25$ கட்டணம் செலுத்தி சேர்ந்து ஒரு வாரத்தின் பின் அது ஒரு கட்டண எரித சேவை போல இருப்பதாக உணர்ந்து எழுதியது. ஒரு வருடத்தில் அந்த கருத்து இன்னமும் வலுப்பெற்று அடுத்த வருடம் அங்கத்துவத்தை புதுப்பிப்பதில்லை என்று முடிவெடுத்தாயிற்று.
         
  3. 12 Sep – SMSம் Emailம் Facebookம் இல்லாத காலங்களில் காதல் கடிதம் என்று ஒன்று இருந்திருக்கிறது… http://bit.ly/nimal-tamil-blog-diary-2001
    • பழைய நாட்குறிப்பு ஒன்றை வைத்து நான் எழுதிய பதிவுகளின் தொகுப்பு. இந்த வருடம் நான் எழுதிய பதிவுகள் என்று இதைச் சொல்லலாம்.
         
  4. 25 Sepமா புளிச்சாலும் சப்பாத்தி சுடலாம், மா புளிக்காமலும் தோசை சுடலாம்…
    • சமயலும் கைப்பழக்கம்…
         
  5. 24 Oct – இங்கே இடியும் மழையும்…
    • பிரிஸ்பேனில் மழைகாலம் ஆரம்பம்.
         
  6. 3 Nov – தின்னத் தெரியாதவனுக்கு தான் பன்னு கிடைக்கும் – http://t.co/PcMiqZy
    • நான் பார்த்த ஒரு நல்ல குறும்படம். தமிழில் ஒரு சில நல்ல குறும்படங்கள் வந்த ஆண்டாகவும் 2010ஐ சொல்லலாம்.
         
  7. 10 Novதங்களை ஆன்மீகவாதிகள் என்று கூறிக்கொள்ளும் சில அரைகுறை வியாதிகளைப் பார்க்கும் போது தோன்றும், “நான் எவ்வளவோ பரவாயில்லை…!” 😉
    • அப்பப்ப இப்படி எதாவது கருத்துக்கள் கபால் என்று வந்து விழும், அதை உடனடியா டுவீட்ரில போடாட்டி பிறகு மறந்திடும்.
         
  8. 17 Nov – அடுத்த வாரம் சிட்னி என்னை இருகரங்கூப்பி வரவேற்கவிருக்கிறது.
    • சிட்னி பயணத்துக்கான முன்னறிவிப்பு.
         
  9. 24 Decஅந்தப்பக்கம் எலி, இந்தப்பக்கம் நான்… ஒரு புரிந்துணர்வோடு பொழுது போகிறது…!
    • இந்த வருட்த்தின் ஸ்டார் டுவீட் இதுதான்.
         
  10. 28 Dec – மன் மதன் அம்பு – எனக்கு பிடித்திருக்கிறது. விசேஷமான படம் என்று இல்லை, ஆனால் நல்ல படம். Good entertainer.
    • வருடத்தின் ஒரே ஒரு திரைப்பட டுவீட்.
         
பிரிவுகள்
அனுபவம்

தியேட்டரில் நானும் திருட்டு வீசீடியும்

அண்மையில் எந்திரன் வெளிவந்த போது திரையரங்கிற்கு சென்று அதை பார்க்கலாம் என்று யோசித்தாலும் பின்னர் இல்லாத இன்ன பல காரணங்களால் டொரண்டில் இறக்கிய கமெரா கொப்பியில் (camera copy downloaded via bit-torrent) பார்த்துவிட்டேன். அப்படி பார்த்திருந்தால் அது நான் திரையரங்கில் பார்க்கும் ஒரு 15வது படமாகவும் 5வது தமிழ்ப்படமாகவும் முதல் ரஜினி படமாகவும் இருந்திருக்கும்.

தியேட்டரும் திருட்டு வீசீடியும் நானும்

நான் ஏன் தியேட்டரில் படம் பார்ப்பதில்லை?

முதலாவது, எனக்கு பிடிக்காத காட்சிளையோ, பாடல் காட்சிகளையோ தவிர்க்க முடியாது. நான் சாதாரணமான ஒரு தமிழ்/இந்தி/தெலுகு/மலையாளம்/பிற இந்திய திரைப்படத்தை பார்க்கும் பொது டெம்லேட் பாடல் காட்சிகளை தவிர்ப்பது வழமை. பாடல்களை கேட்கும் அளவுக்கு பார்ப்பதில் ஆர்வம் இருப்பதில்லை. டெம்லேட் சண்டைக்காட்சி தொடங்கினால் ஹீரோ சண்டையில் வெல்லும் இடம்வரை தாவு. இப்படியாக இரண்டரை மணித்தியால படத்தை பொதுவாக ஒன்றரை மணித்தியாலத்துக்குள்ளாகவே பார்த்து முடித்துவிடுவேன். இது திரையரங்கில் சாத்தியமில்லை.

அடுத்து, எனக்கு பிடித்த காட்சிகளை மட்டும் திரையரங்கில் மீண்டும் பார்க்க முடியாது. உதாரணமாக வில்லு படத்தில் வரும் சில மொக்கை சிரிப்பு காட்சிகள் எனக்கு பிடிக்கும். அதற்காக ஒரு முழு மொக்கை படத்தை இரண்டரை மணிநேரம் இருந்து பார்ப்பது நியாயம் இல்லை. (நான் திரையரங்கில் பார்த்த 5 தமிழ்ப்படங்களில் வில்லு நாலாவது).

முக்கியமாக, பிடித்த ஒரு படத்தை மீள்பார்வை செய்ய முடியாது. பல படங்களை வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு கண்ணோட்டங்களில் பார்க்க முடிந்திருக்கிறது. இது திரையரங்கில் பார்ப்பதில் சாத்தியமில்லை. மேலும் தனிமை விருப்பியான எனக்கு திரையரங்கில் கூட்டத்துடன் படம் பார்ப்பது எப்போதும் குழப்பமாகவே இருந்திருக்கிறது.

ஏன் திருட்டு வீசீடி?

திருட்டு வீசீடி என்று சொன்னதற்காக நான் வீசீடியில் படம் பார்பதாக அர்த்தமில்லை. பொதுவாக நான் பார்பது டொரண்டில் இறக்கிய டீவீடிறிப் (DVD Rip downloaded via bit-torrent). பெரும்பாலும் இது படத்தின் ஒரிஜினல் டீவீடியில் இருந்து எடுத்தாத இருக்கும் நல்ல தரத்திலும் இருக்கும். சிலவேளைகளில் திருட்டு கமெரா கொப்பியின் திருட்டு வீசீடிறிப் கொப்பியாகவும் இருக்கும். ஆனாலும் இது எனக்கு சுதந்திரமான பார்வை அனுபவத்தை கொடுத்திருக்கிறது.

திருட்டு? நியாயமா? தவறில்லையா?

எல்லா தவறிலும் ஒரு நியாயம் இருக்கும். தவறு செய்பவனுக்கு அந்த தவறும் நியாயம் தான். அந்த வகையில் திருட்டு வீசீடி/டீவீடீ/டொரண்ட் வழியே படம் பார்க்கும் எனக்கும் அது நியாயம் தான்.

காரணம் 1: திரையரங்கிற்கு மாற்றீடு இல்லை. உதாரணமாக ஒறிஜினல் வீசீடி/டீவீடீ இருந்தால் அதை வாங்கி பார்க்கும் மனநிலை எனக்கு இருக்கிறது. (விதிவிலக்கு: காரணம் 2) பெரும்பாலாத இந்திய/தமிழ் படங்களுக்கு இது தான் காரணம். பல இந்தி/தெலுகு/இதர இந்திய படங்களை நான் வாழ்த்த/வாழும் பிரதேசங்களில் பார்ப்பதற்கு வேறு மாற்று வழிகளும் இல்லை.

காரணம் 2: ஒறிஜினல் வீசீடி/டீவீடீ வாங்கும் விலையில் இல்லை. இது பெரும்பாலான ஆங்கில படங்களுக்கு. இது விற்பதை விலைக்கும் செலவு செய்ய இயலுமான பெறுமதிக்குமான வேறுபடு. என்னால் வாங்க முடிந்த விலையில் பெரும்பாலும் படங்கள் கிடைத்ததில்லை. ஆனால் அவ்வாறு கிடைத்த சந்தர்பங்களில் வாங்கியிருக்கிறேன்.

இதற்கு முடிவு என்ன?

ஒரு தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை. நான் தியேட்டரை விட திருட்டு வீசீடி/டீவீடீ/டொரண்ட் வழியே தான் அதிகம் படம் பார்த்திருக்கிறேன். இனியும் அப்படித்தான், நான் சொன்ன காரணங்கள் மாறும் வரை.

(Post image uses images from Bryan Brenneman, Andy Mangold, Andres Rueda, and Schristia licensed under a Creative Commons Attribution license.)

பிரிவுகள்
அனுபவம்

நாட்குறிப்பு 2001 – குறிப்பிடாத சில குறிப்புகள்

சாதாரணமாக எப்போதாவது மட்டுமே பதிவுகள் எழுதும் நான் தொடர்ந்து எழுதியது எனது நாட்குறிப்பு 2001 பதிவுகளைத் தான். அதற்கு முக்கிய காரணம் நான் புதிதாக எதையும் எழுதவில்லை, நாட்குறிப்பில் எழுதியிருந்ததை தட்டச்சி பதிவிட்டேன். மாற்றங்கள் இல்லை, தணிக்கைகள் உண்டு.

நான் ஏன் இந்த பதிவுகளை எழுதினேன் என்று பலரும் கேட்டார்கள், நானே அந்த கேள்வியை கேட்டிருக்கிறேன். சிலகாலங்களுக்கு முன்னர் நான் பார்த்த ஒரு ஹிந்தி திரைப்படம் Bachna Ae Haseeno. ஏதோ ஒரு விமான பயணத்தில் பார்த்த ஞாபகம். சாதாரணமாக திரைப்படங்கள் என்னில் தாக்கம் செலுத்துவது மிகவும் குறைவு, ஆனாலும் இந்த படம் எனக்கு மிகவும் நெருக்கமானதாக இருந்த்து. அந்த திரைப்படத்தின் பாதிப்பும் நான் இந்த பதிவுகளை எழுத முக்கிய காரணம்.

ஏன் என்றால், விடுபட்ட சில எண்ணக் குறிப்புகளை பதிவுசெய்து கொள்வதும்,அந்த குறிப்புகளை முன்வைத்து நான் கடந்த காலங்களில் செய்த சில தவறுகளைப் பதிவு செய்வதும்.

யாருக்காக என்றால், முதன்மையாக இது எனக்கானது. எனது திருப்திக்கானது. இந்த பதிவுகள் என் மனக்குழப்பங்கள் பலவற்றுக்கும் தெளிவு தருவதாக அமைந்தன. மேலும் சம்மந்தப்பட்டவர்களிடம் மட்டும் மன்னிப்புக் கேட்பது சாத்தியமானது தான். ஆனாலும் நான் செய்திருகக் கூடிய பல தவறுகள் பொதுவிலேயே செய்யப்பட்டன, அவற்றுக்கு பொதுவிலே மன்னிப்புக் கேட்பதே சரியானது.

முதலில்,
எனது தவறுகள் பலவற்றுக்கும் என் நண்பர்களை காரணமாக கருதியிருக்கிறேன். பல வருடங்களின் பின்னர் நினைத்துப் பார்க்கையில் அது எவ்வளவு அர்தமற்ற செயல் என்று புரிகிறது.

அடுத்து,
எனது தவறுகளை ஏற்றுக் கொள்ளும் மனநிலை எனக்கு இருந்ததில்லை. ஆனாலும் காலம் அந்த மாற்றத்தை எனக்கு தந்திருக்கிறது. எனது தொடர் பதிவுகளை வாசித்த பலரும் குறிப்பிட்ட ஒரு விடயம், ‘அவள்’ தான் நாம் பிரிந்ததற்குக் காரணம் என்பது. ஆனால் இது முற்றிலும் தவறான ஒரு எண்ணம். எனது நாட்குறிப்பு எனது நோக்கிலேயே எழுதப்பட்டதால் அவ்வாறு தோன்றியிருக்கலாம். ஆனால் உண்மையில் நான் தான் அவளைவிட்டு பிரிந்தேன். அந்த காதல் பிரிவில் முடிந்ததற்கு நான் தான் காரணம்.

அடுத்து,
எனது பொறுப்பற்ற செயற்பாடுகளால் ‘அவள்’ அந்த காலத்திலிருந்து மிகுந்த மன உளைச்சலுக்கு இதர கேலிப் பேச்சுக்களுக்கும் உட்பட்டிருக்கிறாள். அதற்கு சாதாரணாமாக ‘மன்னிப்பு’ என்று ஒரு வார்த்தை மட்டும் பரிகாரமாகாது. ஆனாலும் எனது மனபூர்வமான மன்னிப்பை இங்கு பதிவு செய்கிறேன்.

இறுதியாக,
தவறுகளுக்கு ‘மன்னிப்பு’ என்ற ஒரு வார்தை மட்டும் தீர்வாகாது. அது சம்மந்தப்பட்வர்கள் சார்ந்தது. ஆனாலும் நாம் மன்னிப்பு கேட்டோம் என்பதே மனத்திருப்தியை தர பொதுமானது.

(முற்றும்…!)

பிரிவுகள்
அனுபவம்

நாட்குறிப்பு – ஜூன் 2001

நான் அதிகமாக நாட்குறிப்பு எழுதிய 2001ம் வருட நாட்குறிப்பில் ஆங்கிலத்தில் இருந்த பகுதிகளை தமிழாக்கி இங்கு தொடராக பதிவிடுகிறேன். இது ஜூன் மாதம்.

ஜூன் 1:
மகாவலி நிலையத்தில் நடந்த ஒரு கருத்தரங்கிற்கும் பின்னர் நூலகத்திற்கும் சென்றேன்.

ஜூன் 2:
ஒரு சில உண்மைகள் உண்மைகளா பொய்களா?

ஜூன் 3:
காலை 10 மணியளவில் தொலைபேசி மாலை சந்திக்க வேண்டும் என்றாள். மாலை 4.30க்கு சந்தித்து கடிதங்கள் பரிமாறினோம்.

ஜூன் 4:
இரவு 10.30க்கு தொலைபேசினாள். மகிழ்ச்சியாக இருந்தது. தனக்கு வீட்டில் ஏதோ பிரச்சினை, நான் ஏதோ செய்ய வேண்டும் என்றாள். குழப்பமாக இருக்கிறது.

ஜூன் 5:
மாலையிலிருந்து இரவு வரை தொலைபேச முயற்சித்தாள். அம்மா இருந்ததால் கதைக்கவில்லை.

ஜூன் 6:
கெட்ட நாள். ‘காதல் கவிதை’ படம் பார்த்தேன்.

ஜூன் 7:
நண்பர்கள் எல்லாம் நண்பர்களாக இல்லை.
மாலை 5.30க்கு தொலைபேசி எதிர்காலத்தைப்பற்றி நீண்ட நேரம் கதைத்தாள்.

ஜூன் 8:
பாடசாலையில் கண்காட்சி.

ஜூன் 12:
நண்பர்கள் என்று சொல்பவர்களில் பலர் ஒருவகையில் துரோகிகளாகவும் இருக்கிறார்கள்.

ஜூன் 13:
அவன் செய்ததை மன்னிக்கமுடியாது. அவனுக்கும் நடந்தால் தான் விளங்கும்.
அவளிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஜூன் 17:
அவனைப்பற்றி இனியும் எழுத விரும்பவில்லை.

ஜூன் 18:
காய்ச்சலும் தடிமலும்.

ஜூன் 19:
கணிதப் பரீட்சை. 51, 32.

ஜூன் 20:
கருத்துக்கள் நினைப்பதை விட வேகமாக மாறுகின்றன.

ஜூன் 21:
அவளின் நண்பி ஒருத்தி தொலைபேசினாள். அம்மா இருத்ததால் சரியாக பேச முடியவில்லை.
{சில நண்பர்களைப்பற்றி இன்னும் சில}

ஜூன் 22:
இப்போது உன்னுடன் கதைப்பது குறைவு, கதைப்பதில்லை என்பதே சரி. இப்போது தான் உன்னை அதிகமாக நினைக்கிறேன். ஆனாலும் ஏன் கதைக்காமல் இருக்க விரும்புகிறேன்?

ஜூன் 23:
ஆங்கில இலக்கிய வகுப்பு.

ஜூன் 24:
அவள் கணித வகுப்புக்கு வரவில்லை. வேறு குழுவுக்கு மாறிவிட்டாள்.

ஜூன் 25:
மாலை தொலைபேசி என்னை இரவு தொலைபேசச் சொன்னாள். நான் இரவு 9.30க்கு தொலைபேச எடுத்து எதுவும் பேசாமல் வைத்துவிட்டாள். பிறகு 10மணியிலிருந்து தொலைபேச முயற்சிக்கிறாள். ஆனால் இப்போது என்னால் பேசமுடியாது.

ஜூன் 27:
செய்யவேண்டியதை அவ்வப்போது செய்யாவிட்டால் பின்னர் செய்வது கடினம்.

ஜூன் 30:
இனி நான் என் நாட்குறிப்பை எழுத மறக்கலாம், ஆனால் உன்னை…

(தொடரும்…)

(Post image plagiarized from Neto Gonzalez)