இப்போது பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் சிலருடன் உரையாடிக்கொண்டிருந்தேன். அவர்களின் வாசிப்பு என்பது பாடப்புத்தகங்களுள்ளும் சில இணையப்பக்கங்களுள்ளும் உள்ளடங்கிவிடுவதாகவே தெரிகிறது. புத்தக வாசிப்பு என்பது, அதுவும் தமிழ்ப் புத்தகங்கள் வாசிப்பது, அரிதிலும் அரிதாகவே இருக்கிறது. நான் என்னைப்பற்றி யோசிக்கிறேன். எனது வாசிப்புப்பழக்கமும் அந்த மாணவர்களை விடவும் அதிகம் வித்தியாசமாக இல்லை. புத்தக வாசிப்பு வருடத்திற்கு இரண்டு மூன்று என்றாகிவிட்டது. வலைப்பதிவுகளை தேடித்தேடி வாசித்த காலமும் அடங்கிவிட்டது.
இதைப் போலவே எழுத்துப் பழக்கமும் எழுதும் வழக்கமும் குறைந்து விட்டது. ஒரு காலத்தில் வலைப்பதிவுகளில் எழுதுவது, கருத்துச் சொல்வது, சண்டை பிடிப்பது என்று எழுதிக்கொண்டிருந்தேன். இப்போது தமிழில் எழுதுவது மிக மிக குறைந்து விட்டது. எப்போதாவது எழுத நினைத்தாலும் எண்ணங்கள் ஒரு கோர்வையாக வர மறுக்கின்றன. இந்த பதிவும் மிக குழப்பமாக இருந்தால் அது தான் காரணம்.
இவ்வாறாக எழுத்து-வாசிப்பு பழக்கம் குறையும் நேரத்தில் செய்தி, பொது விடையங்கள் என்று எல்லாவற்றுக்கும் ஓலி-ஒளி ஊடகங்களையே நாடுவது பழக்கமாகிவிட்டது. வீடியோ பதிவுகள் பொட்காஸ்ட் பதிவுகள் என்று மாறிவிட்டது. அதிலும் முக்கியமாக பொட்காஸ்ட் வழியாக வரும் ஒலிப்பதிவுகள் மூலமாக நாளாந்தம் தகவல்களை பெறுவது இலகுவாக இருக்கிறது. பொதுவாக வேலைக்குப் போகும் நேரத்தில் கேட்பது வழக்கம். இதைத் தவிர யூடியூப் வீடியோக்களும் பார்ப்பது அதிகரித்திருக்கிறது.
ஆனால் இந்த சூழலில் நான் அவதானிக்கும் ஒரு விடையம், தமிழில் அதிகமாக இந்த மாதிரியான ஒலி-ஒளி வடிவில் பதிவுகள் இல்லை. நான் இங்கு தேடுவது ஆராய்ந்த தகவல்களை அடிப்டையாகக் கொண்ட ஆவணப்படங்கள் அல்லது பதிவுகள். யூடியூபில் அவ்வாறான பதிவுகள் தமிழில் மிக மிக குறைவாகவே கிடைக்கின்றன. பொட்காஸ்ட் என்று பார்த்தால் தமிழில் எந்த வகையான பதிவுகளுமே குறைவு தான். இல்லை நான் தான் சரியான பதிவுகளை தேடிக் காணவில்லையா?
என்னுடைய இப்போதைய எதிர்பார்ப்பு இனியாவது இவ்வாறான பதிவுகளை தமிழில் உருவாக்குவதில் நாம் ஆர்வம் செலுத்தலாம். இன்னும் இரண்டு வருடங்களின் பின் நாம் பார்த்தால் தமிழ்ச் சூழலில் இணையப் பயன்பாடு இன்னமும் அதிகரிக்கப் போகிறது. அதுவும் ஒலி-ஒளி பதிவுகளை இலகுவாக பெறக்கூடிய இணைய சேவை வசதிகளும் அதிகரிக்கப் போகிறது. ஆகவே நாம் சரியான முறையில் பயனுகள்ள தகவல்களை இந்த வடிவிலான பதிவுகளாக உருவாக்கினால் அவற்றால் பலரும் பயன் பெறுவார்கள் என்பது என் எண்ணம்.
பி.கு.: நீண்ட நாட்களின் பின் எழுதிய இந்த தமிழ்ப் பதிவில் இருக்கும் தமிழ்ப் பிழைகளுக்கு என்னை மன்னிக்கவும். நன்றி.