இதைப்பற்றி இதுவரை யாரிடமும் எங்கேயும் கதைத்ததில்லை. ஆனால் இன்று என் கதையை பொதுவெளியில் பகிரலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். எனக்கு 12-13 வயது இருக்கும்போது, நான் என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறேன். அதன் விளைவுகள் இன்னமும் என் வாழ்வில் எங்கோ இருப்பதாகவே நான் உணர்கிறேன்.
நான் 7ம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. நான் கொழும்புக்கு இடம்பெயர்ந்து வந்து ஒருவருடத்துக்கும் உள்ளான காலப்பகுதி அது. பாடசாலை முடிந்ததும் ஒரு குறித்த உறவினர் வீட்டில் சென்று நிற்பது வழக்கம் வழமையாக அந்த வீட்டில் பல உறவினர்கள் இருப்பார்கள். ஆனால் இந்த குறிப்பிட்ட நாளில் உறவினர் எல்லோரும் எங்கோ சென்றிருந்தனர் (எதற்காக என்பது நினைவில் இல்லை). அந்த குறித்த உறவினர் மட்டுமே வீட்டில் இருந்தார்.
வழமைபோலவே நான் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் அமர்ந்து ஒரு சிறவர் நிகழ்ச்சியையோ திரைப்படத்தையோ பார்க்கத் தொடங்கினேன். அந்த உறவினர் என் அருகில் இருந்த கதிரையில் வந்து அமர்ந்தார். அது வழமையாகவே இருந்தது. அவர் என் தொடையில் தன் கையை வைத்தார். அது சாதாரணமாக இருந்தது. அவர் என் காற்சட்டை வழியே கையை விட்டு என் ஆணுறுப்பை தொட்டார். அது குழப்பமானதாக இருந்தது. அவர் என் ஆணுறுப்பை வெளியே எடுத்து நாக்கால் நக்கத் தொடங்கிரார். அது பிழையாக இருந்தது.
எனக்கு என்ன நடக்கிறது என்று விளங்கவில்லை, ஆனால் அது தவறானது என்று மட்டும் விளங்கியது. நான் அவரைத் தள்ளிவிட்டு என் பாடசாலைப் பையையும் தூக்கிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே ஓடினேன். பிரதான வீதி வரை ஓடிவந்த எனக்கு வீடு எந்தப்பக்கம் என்பது தெரியவில்லை. பார்த்த நினைவிருந்த சில கட்டடங்களை குறிப்பாக வைத்து ஒரு திசையாக நடக்கத் தொடங்கினேன். பேருந்தில் செல்ல பணமும் இருக்கவில்லை, வழியும் தெரியாது. ஒருவாறாக வழிகேட்டு வீட்டுக்கு போய்விட்டேன். ஆனால் அந்த நேரத்தில் அம்மா என்னை கூட்டிவருவதற்காக அந்த உறவினர் வீட்டுக்கு போயிருந்தார். அங்கு நான் இல்லை என்று திரும்பி வந்த அவரிடம் சொல்ல என்னிடம் காரணம் எதுவும் இருக்கவில்லை. என்ன நடந்தது என்றும் சொல்லவில்லை. அதன் பின்னர் இன்றுவரை யாரிடமும் சொல்லவுமில்லை.
இது என்ன பெரிய விடயமா என்று சிலருக்கு இருக்கலாம். அது மீண்டும் நடக்கவும் இல்லை. அந்த உறவினர் இருக்கும் இடங்களில் தனிமையா இருப்பதை தவிர்த்து வந்திருக்கிறேன். இப்போது அவரை நேரடியாக பயம் இன்று பார்க்கவும் முடிந்திருக்கிறது. ஆனாலும், 21 வருடங்களின் பின்னரும், அந்த சம்பவத்தின் விளைவுகள் என்னை சில வகைகளில் பாதித்திருப்பதாகவே உணர்கிறேன். குடும்பங்கள் உறவுகள் என்ற கட்டமைப்புக்கள் மீது அவநம்பிக்கையான ஒருவனாக நான் வளர்ந்திருக்கிறேன். நான் எப்போதும் தனிமையை விரும்புபவனாகவும் தேவையில்லாமல் மற்றவர்களிம் தொடர்புகளை தவிர்ப்வனாகவும் இருக்கிறேன். என்னுடைய இருபதுகளின் நடுப்பகுதி வரையுமே சுய சந்தேகம் உள்ள ஒருவனாகவே இருந்திருக்கிறேன். இதற்காக நான் சொல்லவரவில்லை இவை எல்லாவற்றுக்குமே அந்த சம்பவம் தான் காரணம் என்று. ஆனால் அதன் பாதிப்புக்கள் என்னில் இருந்திருக்காது என்றும் என்னால் சொல்ல முடியாது.
ஆனால் இப்போது இத்தனை வருடங்களுக்குப் பிறகு நான் ஏன் இதைப்பற்றி பகிர்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். அண்மையில் இதேபோன்ற நெருக்கிய குடும்ப அங்கத்தவர் ஒருவரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளான வேறொருவருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் இது தனக்கு மட்டுமே நடந்ததாக நினைத்துக்கொண்டிருந்ததையும் அறிய முடிந்தது. நான் என் கதையை இவ்வாறு பொதுவெளியில் பகிர்வதன் மூலமாக அவர்களும் தாங்கள் தனித்திருக்கவில்லை என்பதை உணரமுடியும். இந்த பிரச்சனை தொடர்பான உரையாடல்களின் ஆரம்பப்புள்ளியாகவும் இது இருக்கட்டும்.
பின்குறிப்பு: எனக்கு பாலியல் தொல்லைகள் செய்த நபர் யார் என்று நான் இங்கு குறிப்பிடவில்லை. ஆனால் அவரோ அவரின் வளர்ந்த பிள்ளைகளோ இதைக் கட்டாயம் வாசிப்பார்கள். நான் தன் பெயரை சொல்லிவிடுவேனா என்ற சந்தேக்திலேயே அவர் வாழட்டும். அவரின் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளை அவருடன் தனித்து விட நேர்ந்தால் அவதானமாக இருக்கட்டும். பெறாமகனுக்கும் பேரனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.