பிரிவுகள்
பயணம்

ஒரு பயணத்தின் படக்கதை – ஜினோலன் குகைகள்

பயணத் திகதி: நவம்பர் 24, 2010

இன்று நீல மலைத்தொடர் (Blue Mountains) பகுதிக்குச் செல்வதாக நேற்றே முடிவு செய்திருந்தாலும் எங்கே என்பதைத் திட்டமிடவில்லை. காலை 8 மணியளவில் அருணன் வீட்டிலிருந்து புறப்பட்டு ஜினோலன் குகைகளுக்கு செல்லலாம் என முடிவெடுத்தோம்.

ஒரு பயணத்தின் படக்கதை - ஜினோலன் குகைகள்

நடுவழியில் GPS தன் விருப்பத்துக்கு குழறுபடி செய்து ஒரு நெடுச்சாலையின் நடுவில் குகை இருக்கிறது என்று சொன்னது. பின்னர் ஒருவாறாக சரியான பாதையைத் தெரிவு செய்து பயணத்தைத் தொடர்ந்தோம். நாம் பயணித்த Great Western Highway பெரும்பாலும் காடுகளுக்கும் மலைகளுக்கும் நடுவே செல்லும் ஒரு அழகிய பாதை. ஆனாலும் 100கிமீ வேகத்தில் பயணிக்கக்கூடிய மலைப்பாதையாக இருப்பதால் அங்கு பல கங்காருக்கள் வேகமாக வரும் வாகனங்களில் அடிபட்டு இறந்திருந்ததைக் காணமுடிந்தது.

சாலை ஓரத்தில் காலை உணவு
சாலை ஓரத்தில் காலை உணவு: எமது பயணத்தின் பெரும்பாலான நாட்களில் உண்ட பாணும் டூனாவும்.
Great Western Highway
அழகிய மலைகளாலும் பசுமையான மலைகளாலும் சூழப்பட்ட Great Western Highway

அண்ணளவாக 100கிமீ Great Western Highway வழியே Hartley வரை பயணித்து, அங்கு Jenolan Caves Road வழியாக திரும்ப வேண்டும். அங்கிருந்து மேலும் 45கிமீ குறுகலான பாதையில் பயணித்து நாம் குகைகளின் வாசலை அடையும் போது பகல் 12 மணி ஆகியிருந்தது. அந்த பாதையின் இறுதி 10கிமீ மிகவும் குறுகலானதாகவும் மிக அதிகமான வளைவுகளையும் கொண்டிருக்கிறது. இதற்கு மேலதிகமாக எமது வண்டியில் எரிபொருள் அளவும் அபாய கட்டத்தை நெருங்கிக் கொண்டிருப்பதை நான் தாமதமாகவே அவதானித்தேன்.

ஜினோலன் குகைகளை நோக்கி
மலைப்பாங்கான பாதையில் ஜினோலன் குகைகளை நோக்கி
Jenolan Caves Road
வளைவுகளை மட்டுமே கொண்டிருக்கும் Jenolan Caves Road

ஜினோலன் குகைகள் (Jenolan Caves) சிட்னியில் இருந்து மேற்காக 175கிமீ தொலைவில் அமைந்துள்ளன. சுண்ணாம்புக்கல் பாறைகளால் உருவான இவை உலகின் பழைமையான திறந்த குகைகளாக கருதப்படுகின்றன. பல்வேறு வகையான படுகச் சுண்ணாம்பு உருவாக்கங்கள் இந்த குகைகளுக்குள் காணப்படுகின்றன. இந்த குகைகளுக்கு கீழாக சில நிலக்கீழ் ஆறுகளும் செல்கின்றன.

Blue Lake, Jenolan
குகைகளுக்குள் நுழையும் பாதையும் அருகே ஜினோலன் நீல ஏரியும்

300க்கும் அதிகமான குகைகள் இந்த பிரதேசத்தில் கட்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் 20 குகைகளில் பொதுமக்களை பார்வையிட அனுபதிக்கிறார்கள். சிறிய குகைகளுக்கு சுயமாக செல்லும் வசதி இருப்பதுடன், பெரிய குகைகளுக்கு வழிகாட்டியுடன் குழுக்களாக செல்ல இயலும். நாம் 12.30க்கும் 2மணிக்கும் இரு குகைகளுக்கு செல்ல டிக்கெட் வாங்கினோம். (ஜினோலன் குகைகளுக்கான மேலதிக சுற்றுலா விபரங்களை Jenolan Caves Reserve Trust நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.)

Human Face Rock
வாசலில் எம்மை வரவேற்கும் மனித முகம்
Inscription on  Grand Arch
Grand Arch எனப்படும் நுழைவாயிலில் இருக்கும் இந்த கல்வெட்டு இங்குள்ள பல்வேறு குகைகளும் கண்டுபிடிக்கப்பட்ட விபரங்களை தருகிறது.

நாம் முதலாவதாக சென்றது சைப்ளி குகை (Chifley Cave). 1800ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குகை 1952 வரை இடது இம்பீரியல் குகை (Left Imperial Cave) என்று அறியப்பட்டிருக்கிறது. உலகில் முதலாவதாக மின் விளக்கு பொருத்தபட்ட குகை என்ற பெருமையை 1880ல் இது பெற்றுக்கொண்டது. இங்கு உள்ள இரண்டு குகை அறைகளில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மின்சாரம் அதிகம் பரவலாகாத ஆரம்ப காலங்களில் மின் விளக்குகளை பார்ப்பதற்காகவே இங்கு சுற்றுலாப் பயணிகள் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

Chifley Cave
சைப்ளி குகை
Chifley Cave
வண்ண விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட சைப்ளி குகை

நாம் பயணித்த குழுவில் அண்ணளவாக 20 பெரியவர்களும் சில சிறுவர்களும் இருந்தார்கள். குகைகளுக்குள் பயணிப்பது ஒரு வித்தியாசமா அனுபவம். வாசலில் இருந்து உள்ளே செல்லச் செல்ல குளிர் அதிகரிப்பதுடன் முழுமையான இருளாகிவிடும். அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்படும் போது முழுமையான இருளை உணர முடியும். இந்த குகையில் புகுந்து, முழுமையாக பயணித்து வெளியே வர அண்ணளவாக ஒரு மணித்தியாலம் ஆனது. அடுத்த குகைக்கு செல்ல அரை மணித்தியாலத்துக்கும் குறைவாகவே இருந்ததால் எமது காரில் இருந்த உணவை வைத்து பகல் பசியை போக்கிக் கொண்டோம்.

Group of Tourists inside Chifley Cave
சைப்ளி குகைக்குள்ளே சுற்றுலாப் பயணிகள்
Inside Chifley Cave
சுற்றுலாப்பயணிகளுக்காக சைப்ளி குகைக்குள்ளே அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள்.

இரண்டாவதாக நாம் சென்ற குகை, லூக்காஸ் குகை (Lucas Cave). 1860ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குகை சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது. ஜினோலன் குகைகளுக்கு வரும் பெரும்பாலானோர் செல்லும் ஒரு குகையாகவும் இது இருக்கிறது. இங்கு மற்ற குகைகளை விடவும் அதிக வகையான வித்தியாசமான பாறை உருவாக்கங்கள் இருக்கின்றன. மிகப்பெரிய குகை அறையான Exhibition Chamber, பல தூண் வடிவிலான, மற்றும் மிருகங்களின் வடிவிலான பாறை உருவாக்கங்களை கொண்டுள்ளது. இங்கே இருக்கும் 50 மீ உயரமான Cathedral Chamber அறையில் மாதம் ஒருமுறை இசை நிகழ்ச்சிகளும் சில திருமணங்களும் நடைபெறுவதுண்டு.

Exhibition Chamber
Exhibition Chamberல் உள்ள தூண்
Exhibition Chamber Rhino
Exhibition Chamberல் இருக்கும் ஒரு மிருக வடிவம்
Cave Ceiling
ஒரு குகை அறையின் உட்கூரை அமைப்பு

லூக்காஸ் குகைக்கு சென்ற குழு அதிகமானவர்களை கொண்டிருந்ததுடன், குகை முழுவதையும் சென்று முடிக்க ஒன்றரை மணித்தியாலங்கள் எடுத்தது. இந்த குகைப் பயணம் முதலாவதில் இருந்து மாறுபட்டதாகவும் சிறப்பானதாகவும் இருந்தது. (இதற்கு மட்டுமே போயிருந்தாலும் போதுமானதாக இருந்திருக்கும்). இந்த குகைக்குள் இருந்து ஒரு பகுதியில் நிலக்கீழ் நதியையும் பார்க்க முடியும். நாம் இந்த குகையை விட்டு வெளியே வரும் போது நேரம் 3.30 ஆகியிருந்தது.

Cathedral
Cathedral அறையில் சுற்றுலாப்பயணிகள்
Lucas Cave
லூக்காஸ் குகைக்குள்ளே இருக்கும் மிருக எலும்புக்கூடு. குகைகளுக்குள் விழுத்து வெளியேற முடியாத விலங்காக இது இருக்காலம் என்று கூறப்படுகிறது.

இப்போது அடுத்த சிக்கல் காத்திருந்தது. வண்டியில் எரிபொருள் ஆபத்தான கட்டத்தை தொட்டிருந்தது. அடுத்த எரிபொருள் நிரப்பு நிலையம் 30கிமீ தொலைவில் இருந்தது. இந்த மலைப்பாங்கான பாதைகளில் இது சாத்தியமாகுமா என்ற சந்தேகமும் இருந்தது. எரிபொருள் சேமிக்கும் ஒரு வகையாக இயலுமானவரை தடுப்புக்களை பிரயோகிக்காமலே வாகனத்தை உச்ச வேகத்தில் செலுத்தி, ஒருவாறாக Obtron என்ன ஊரில் இருந்த எரிபொருள் நிலையத்தை வந்தடைந்தோம்.

Jenolan to Oberon
வேகமாக ஜினோலனில் இருந்து ஒபெரோன் நோக்கி
Great Western Highway near Oberon
ஒபெரோனில் இருந்து மீண்டும் Great Western Highway வழியே
On Great Western Highway
பாதை ஓரமாக படம் எடுத்தல், ஒபெரோனுக்கு அண்மையில்

ஓபிற்ரோனில் எரிபொருள் நிரப்பிய பின்னர் மேலும் 4 மணித்தாயாலங்கள் நிறுத்தாத வாகன ஓட்டம். நாம் வீடு வந்து சேர்ந்த போது இரவு 8 மணி ஆகியிருந்தது. இன்றுவரை நாம் பயணித்திருக்கும் மொத்த தூரம் 1750 கிமீ. இன்று பயணித்த தூரம் 400 கிமீ.

From the old days...
இன்னமும் சுமை தாங்கும்…

அடுத்த பதிவில் சிட்னியில் இருந்து மெல்பேர்னுக்கு பயணிக்கலாம்…

4 replies on “ஒரு பயணத்தின் படக்கதை – ஜினோலன் குகைகள்”

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.