பிரிவுகள்
அனுபவம்

நாட்குறிப்பு – ஏப்ரல் 2001

நான் அதிகமாக நாட்குறிப்பு எழுதிய 2001ம் வருட நாட்குறிப்பில் ஆங்கிலத்தில் இருந்த பகுதிகளை தமிழாக்கி இங்கு தொடராக பதிவிடுகிறேன். இது ஏப்ரல் மாதம்.

நான் அதிகமாக நாட்குறிப்பு எழுதிய 2001ம் வருட நாட்குறிப்பில் ஆங்கிலத்தில் இருந்த பகுதிகளை தமிழாக்கி இங்கு தொடராக பதிவிடுகிறேன். இது ஏப்ரல் மாதம்.

ஏப்ரல் 1:
முட்டாள்கள் தினத்தில் முட்டைக் குளியல். கணிதவகுப்புக்குள்ளேயே யாரோ முட்டை எறிந்து விட்டார்கள்.

ஏப்ரல் 2:
நண்பன் ஒருவன் என் நாட்குறிப்பிலிருந்து தன் பெயர்களை அழித்துவிடச் சொன்னான். செய்து விட்டேன்.

ஏப்ரல் 4:
இரவு 9:57க்கு தொலைபேசி பரீட்சைக்கு வாழ்த்து சொன்னாள். நன்றி.

ஏப்ரல் 5:
பாடசாலையில் நாடக மன்ற பொதுக்கூட்டம். பிரணவன் இனி உப தலைவர்.

ஏப்ரல் 6:
கணிதப் பரீட்சையில் 90 புள்ளிகள்.

ஏப்ரல் 8:
பாடசாலை நண்பன் ஜெயப்பிரகாஷின் தந்தை மரண வீட்டிற்கு சென்றோம்.

ஏப்ரல் 10:
சமய பாட பரீட்சை, ஏதோ பரவாயில்லை.

ஏப்ரல் 11:
நாடக மன்ற கூட்டத்திற்கு பிறகு Odel போனோம். சிந்துஜனுடன் தெகிவளைக்கு போய் ஒரு multi-colour shirt வாங்கினேன்.

ஏப்ரல் 12:
ஆங்கில இலக்கிய வகுப்புக்கு தாமதமாக சென்றேன். அவள் மாலை 5.30க்கு தொலைபேசினாள். நான் கடந்த ஒரு வருடத்தில் ஒரு தடவையேனும் தொலைபேசவில்லை என்றாள். இனிமேல் நானும் தொலைபேசுவதாக சொன்னதற்கு, எதையுமே சொன்ன பின் செய்வது காதல் இல்லை என்றாள்.

ஏப்ரல் 14:
அவளிடம் இன்று தொலைபேசுவதாக கூறியிருந்தேன், முடியவில்லை. ஆனால் இன்று கோவிலில் அவளைக் கண்டேன்.

ஏப்ரல் 15:
பிரணவன், திருப்பரன் மற்றும் பிரணவனின் குடும்பத்தினருடன் இன்றும் நாளையும் பொலன்னறுவை, அனுராதபுரம் சுற்றுலா. இன்று தம்புள்ளை, சீகிரிய, பராக்கிரம சமுத்திரம், பொலன்னறுவை அருங்காட்சியகம் மற்றும் பொலன்னறுவையை சுற்றியுள்ள வேறுபல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு சென்றோம்.

ஏப்ரல் 16:
இன்று அனுராதபுரத்தை சுற்றியுள்ள பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு சென்றோம். இரவு 9 மணியளவில் வீடுவந்து சேர்ந்தேன். அவள் நினைவாகவே இருக்கிறது.

ஏப்ரல் 17:
9.45க்கு தொலைபேசினாள். எனக்கும் தனக்கும் இனி எவ்வித தொடர்புமில்லை, மன்னிக்கவும் என்றாள்.
நான் இதை எதிர்பார்க்கவே இல்லை, என்ன சொல்வதென்றும் தெரியவில்லை. 10.15க்கு மீண்டும் தொலைபேசி ஒரு தகவலையும் சொன்னாள். என்ன செய்வதென்று புரியவில்லை. மீண்டும் நான் தொலைபேசி உண்மையா என்று கேட்டதற்கு உண்மைதான் என்று சொல்லை வைத்துவிட்டாள். அதன் பின்னர் பலதடவை முயற்சித்தும் அவள் எடுக்கவில்லை. ஏன் இப்படியெல்லாம், உண்மைதானா, மிகவும் குழப்பமாக இருக்கிறது.??!

ஏப்ரல் 18:
Commerce வகுப்பு முடிந்து வரும்போது அவளைக் கண்டேன். வீடு வந்து சிறிது நேரத்தின் தொலைபேசி தன்னைப்பற்றி என்ன நினைப்பதாக கேட்டால். பின்பு சொல்வதாக கூறி வைத்து விட்டேன். தினம் ஒரு கதை பேசினால் நான் என்ன செய்ய?? இரவும் பலதடவை தொலைபேசினாள், நான் எடுக்கவில்லை.

ஏப்ரல் 19:
காலை ஒரு தொலைபேசி அழைப்பு. அவளின் friend என்று சொல்லி, ‘நான் அவளைப்பற்றி என்ன நினைப்பதாக’ கேட்டதற்கு நான் எதுவும் சொல்லாமல் வைத்துவிட்டேன். மாலை ஆங்கில இலக்கிய வகுப்பிலும் கண்டேன். வெறுப்பா? கோபமா? அவள் மீதா? என் மீதா? குழப்பம்…!

ஏப்ரல் 20:
காலை தொலைபேசினாள். கதைக்காமல் வைத்துவிட்டேன். பகல் தொலைபேசி அம்மாவிடம் ஏதோ சொல்லியிருக்கிறாள்(?). களனி விகாரை, பொரளை கோத்தமி விகாரை, All Saint’s Church, National Art Gallery.

ஏப்ரல் 21:
‘வீரபாண்டின் மனைவி’ பாகம் 2 வாசித்து முடித்து பாகம் 3 எடுத்துவந்தேன். நண்பன் நேற்று பகல் 12க்கு களனி வந்திருக்கிறான். நாங்கள் அந்த நேரம் திரும்பிவிட்டோம்.

ஏப்ரல் 22:
இன்று கணித வகுப்புக்கு பின்னர் தொலைபேசி சாதாரணமாக கதைத்தாள். இன்று சந்திக்க முடியுமா என்று கேட்டாள். புதன் சந்திப்பதாக சொல்லியிருக்கிறேன். “மனங்கள் ஏன் தினமும் மாறுகின்றன?”

ஏப்ரல் 23:
தொடர்புகொள்ள முயற்சித்தோம்.

ஏப்ரல் 24:
அடுத்த ஞாயிறு தொடக்கம் வேறு கணித வகுப்புக்கு மாறிவிட்டாள்.

ஏப்ரல் 25:
மாலை 5மணிக்கு அவளை சந்திக்க சென்றேன். இருந்த 10 நிமிடத்தில் எவ்வளவொ கதைத்திருக்கலாம், ஆனால் எதுவும் கதைக்கவில்லை. ஆனாலும் அவளை காதலிக்கிறேன் என்பதையாவது நான் சொல்லியிருக்கலாம்.

ஏப்ரல் 26:
பாடசாலையில் நாடக பயிற்சி. ருக்மன் அண்ணா இயங்குனர்.

ஏப்ரல் 27:
பாடசாலையில் நாடக பயிற்சி.

ஏப்ரல் 28:
‘வீரபாண்டின் மனைவி’ பாகம் 3 வாசித்து முடிந்தது.

ஏப்ரல் 29:
இன்று வகுப்புக்கு வருவதாக சொல்லியிருந்தாள், ஆனால் வரவில்லை.

ஏப்ரல் 30:
தொலைந்து போன ஒரு உணர்வு மட்டும்.

(தொடரும்…)

(Post image plagiarized from MyNiceProfile.com)

4 replies on “நாட்குறிப்பு – ஏப்ரல் 2001”

அவள் பற்றிய கதைகளெல்லாம், அடுத்த நிமிடம் பற்றிய நிகழ்வுகள் பற்றிய ஆர்வத்தை தருவதை தவிர்க்க முடியவில்லை. கொஞ்ச நேரம், நான் விண்ணைத் தாண்டி வருவாயா? திரையில் தோன்றிய காட்சியை வாசிப்பதாக எண்ணி, பின்னர் சுதாகரித்துக் கொண்டேன். அந்தக் காலத்திலும், அழகிய காதல் பற்றிய பகிர்வை அறிகின்ற உணர்வு அழகியதாகவே இருக்கிறது. இதுவரையிலும், நான் காதலிக்கவில்லை என்றாலும், (நம்புங்க சார்) காதல் பற்றிய எண்ணக்கருவை அதிகமாகவே காதலித்திருக்கிறேன். அதனால், எல்லாக் காதலையும் ரசிக்க முடிகிறது.

நாடகம், கணிதம், காதல், புத்தகம் என்ற அழகிய நான்கு விடயங்கள் அடிக்கடி அர்த்தம் சேர்ப்பது சுவையாய் இருக்கிறது. நாட்குறிப்புகள் பலவேளைகளில், எமக்கு பிரியமான விடயங்கள் பற்றி, நமக்கு முதலிலேயே அறிந்து கொள்ளுவது கவிதை. மே மாதத்தில் அவள் வருவாளா?

இனிய புன்னகையுடன்,
உதய தாரகை

Like

உண்மையிலேயே நாட்குறிப்புகள் சொல்லும் பலசேதிகள் அந்தந்த காலப்பகுதிகளில் சரியாக உணராதவையாகவே இருந்திருக்கின்றன.

எனக்கு ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ பிடித்திருந்ததற்கு இந்த நிகழ்வுகளும் ஒரு காரணமாக இருக்கலாம். நீங்கள் காதலித்ததில்லை என்பதையும் நிச்சயமாக ஏற்றுக் கொள்கிறேன்.

இன்னும் ஓரிரு மாதங்கள் வரலாம்…!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,
நிமல்

Like

நிமல்,

நாட்குறிப்புகள் சுவாரசியமாக இருக்கின்றன. பழையவற்றை அசைபோடுவதில் ஒரு பரம திருப்திதான் இல்லையா.
நானும் இரண்டு வருட நாட்குறிப்பு வைத்திருக்கிறேன். அவற்றை எழுதவேண்டும் போல் உணர்கிறேன் இதன் பின்பு. ஆனாலும்… 😦

Like

உண்மை தான், அவற்றை பதிவிலே எழுதுவது இன்னும் வித்தியாசமான அனுபவம். Privacy is Dead என்பதும் இதுதான்… 🙂

நீங்கள் எழுதுவதில் என்ன ‘ஆனால்’…?

Like

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.