பிரிவுகள்
அனுபவம்

ஒரு மாதமும் ஒரு நாளும்

நான் பிரிஸ்பேன் வந்து இன்றுடன் ஒரு மாதமும் ஒரு நாளும் ஆகிறது. மூன்று வருட அவுஸ்திரேலிய வாழ்க்கையின் ஆரம்பம். புதிய இடம், புதிய மக்கள், புதிய தனிமை, புதிய அனுபவம், கடந்த ஒருமாத அனுபவங்களின் தொகுப்பு இது. (பதிவு வைத்திருக்கும் இலங்கைப் பதிவர் என்பதிலிருந்து இனி பதிவு வைத்திருக்கும் அவுஸ்த்திரேலிய பதிவர் என்றும் சொல்லலாம்.)

சில நாள் பயணம்

ஏப்ரல் 23 – கொழும்பிலிருத்து சிங்கப்பூர் வழியே சிட்னி, பின் பிரிஸ்பேன். வெறிச்சோடி இருத்த கொழும்பு-சிங்கப்பூர் விமானத்தில் அதிகாலை/நடுராத்திரி 1 மணிக்கு தந்த காலை(?) சாப்பாட்டுக்குப் பின் 3 ஆசனங்களில் ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழும்பினால் சிங்கப்பூர். ஆனா ஒரு அரைமணி நேரம் சிங்கப்பூரை சுத்திக்காட்டிய பின்னர் தரையிறங்கும் போது நேரம் காலை 7 மணி. அடுத்து சிங்கப்பூர்-சிட்னி விமானம் இரவு 8மணிக்கு(!). இடைப்பட்ட 12 மணித்தியாலம்  பல்கலைக்கழக நண்பன் பிறைதீசனோடு சிங்கப்பூர் சுத்துப்பார்த்துவிட்டு மீண்டும் இரவு 7 மணிக்கு விமான நிலையத்துக்கு வந்தோம். சிட்னிக்கான இரட்டைத்தட்டு விமானத்தில் பயணித்ததும் ஒரு முதல் அனுபவம். 7 மணித்தியால பயணத்தில் 2 தடவை உணவு, சில மணிநேர தூக்கம் என்று சிட்னியில் தரையிறங்கும் போது நேரம் காலை 7 மணி – ஏப்ரல் 24.

ஏப்ரல் 24 – உறவினர்களுன் இரண்டு நாட்களும் நண்பர்கள் சஞ்சயன், கேசவனுடன் ஒரு நாளும், மீதி தூக்கத்திலும் என்று சிட்னியில் தங்கியிருந்த நான்கு நாடகளும் போயின. வலைப்பதிவர் கானா பிரபா சிட்னியில் இருக்கும் விடையம் மறந்து போனதால் அவரை சந்திக்க சந்தர்ப்பம் வாய்கவில்லை. (இல்லாவிட்டால் ஒரு பதிவர் சந்திப்பு நடத்தியிருக்கலாம்). சிட்னியில் இருந்து பிரிஸ்பேன் வந்த போது நேரம் இரவு 11 மணி – ஏப்ரல் 27.

பல்கலைக்கழகம்

ஏப்ரல் 28 – பல்கலைக்கழகத்தில் முதல் நாள். ஒரு ஆராய்ச்சி மாணவனாக இருப்பதாலும் தவணை ஆரம்பித்து 2 1/2 மாதங்களின் பின்னர் சேர்வதாலும் இலகுவாக பதிவுசெய்தல் மற்றும் இதர செயற்பாடுகளை செய்ய முடிந்தது. வாரம் ஒருதடவை எனது research supervisorஐ சந்திப்பது தவிர்த்து மீதி எல்லாம் சுயகற்றலாகவே (இப்போது இரண்டு பெரும் புத்துகங்களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறேன்.) இன்றுடன் ஒரு மாதம் – மே 28.

தமிழ்க் கோவில், தமிழ்ப் பாடசாலை மற்றும் Duplex Mode

ஒரு சில குடும்ப நண்பர்கள், முகுந்த் மற்றும் சில பல்கலைக்கழக சீனியர்கள் தவிர பிரிஸ்பேனில் வேறு தமிழர்கள் யாரையும் எனக்கு தெரிந்திருக்கவிலை. ஒரு தடவை குயின்ஸ்லாந்து பிள்ளையார் கோவிலுக்கும் போன போது அங்கு சில தமிழர்களையும் காண முடிந்தது. இங்கும் எல்லாவிதமான அர்ச்சனைகளும் பூசைகளும் இருக்கின்றன. தமிழர்கள் மட்டுமல்லாது வேறு இந்துக்களும் அங்குவருவதை அவதானிக்க முடிந்தது. (அர்ச்சனை பிரசாதமாக ஆப்பிள் வழங்கப்படுகிறது.)

முகுந்த் மூலமாக ‘தமிழ் பிரிஸ்பேன்’ மின்னஞ்சல் குழுமம் பற்றி அறிந்து அந்த குழுவில் இணைந்து கொண்டேன். கடந்த ஞாயிறு பிரிஸ்பேன் தமிழ்ப் பாடசாலையின் விளையாட்டு போட்டிக்கும் போகும் சந்தர்ப்பம் அமைந்து. அங்கு பலருடன் உரையாடும் சந்தர்பமும் கிடைத்தது. தமிழ்ப் பாடசாலை என்றாலும் இங்கு ஆங்கிலம் மூலமாகவே தமிழ் கற்பிக்கப்படுகிறது. இந்த பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்புவது ஒரு குற்ற உணர்ச்சியாலா அல்லது தங்கள் பிள்ளைகளும் தமிழ் கற்கவேண்டும் என்ற எண்ணத்தாலா என்பது எனக்கு குழப்பமாகவே இருந்தது. பல பெற்றொரும் தமது பிள்ளைகளுன் ஆங்கிலத்திலேயே உரையாடுவதை காணக்கூடியதாக இருந்தது.

வெளிநாடுகளில் வாழும் தமிழ் குடும்பங்களில் காணக்கூடிய இன்னொரு முக்கிய அம்சம் ‘Duplex Mode Communication”. அதாவது பிள்ளைகளுக்கு தமிழ் (ஓரளவு) விளங்கும், ஆனால் கதைக்கமாட்டார்கள். ஆதலால் பெற்றோர் தமிழில் உரையாடுவார்கள், பிள்ளைகள் ஆங்கிலத்தில் உரையாடுவார்கள். இந்த விசித்திரமான உரையாடல்களை கிரகித்து கொள்ள சிலகாலம் தேவை. ஆக இந்த தலைமுறையோடு அவர்கள் ஆங்கிலம் பேசும் தமிழர்கள் ஆகிவிடுவார்கள். அதாவது தமிழர் என்பது ஒரு மொழி கடந்த ஒரு சமூக அடையாளமாக மாறிவிடும்.

தனிமையும் ஒரு அனுபவம்

வெளிநாட்டு கல்வி, தனிமையான வாழ்க்கை என்று பலரும் பயங்காட்டினாலும், இதுவும் ஒரு புதிய அனுபவமாக தான் இருக்கிறது. ஒரு புதிய நகரம், புதிய மனிதர்கள், புதிய மனிதர்கள் என ஒரு பெரு நகரத்தில் தொலைந்த குழந்தையை போன்ற அனுபவம், ஆனால் இங்கும் பல புதிய விடையங்கள் சூழ்ந்திருகின்றன அறிந்து கொள்ள. இந்த அனுபவம் எனக்கு பிடித்திருக்கிறது, தனிமை என்பது தனித்திருப்பது அல்ல என்பதும் புரிந்திருக்கிறது.

3 replies on “ஒரு மாதமும் ஒரு நாளும்”

//அர்ச்சனை பிரசாதமாக ஆப்பிள் வழங்கப்படுகிறது.

கொடுத்து வைச்ச பிள்ளையார்.. ஆப்பிள் ஆப்பிளா சாப்பிடுறார்.. அங்க வன்னியல பாவம் மனுசன் ஒன்னும் இல்லாம சனத்தோடு சனமா காஞ்சு போய்கிடக்கார்…

Like

“Duplex Mode Communication”. நல்ல பொருத்தமான கருத்து.. இங்கு இருக்கும் தமிழர்களுக்கும்-ஆங்கிலத் தமிழர்களும் இதே போலத்தான்.. பிள்ளைகளுடன் உரையாடினால் அவர்கள் கஸ்டப்பட்டுதான் தமிழும் சரளமாக ஆங்கிலமும் கதைக்கின்றார்கள். அடுத்த தலையோடு தமிழ் வெறும் இனத்தின் அடையாடளம். அதன் பின்னர் அதுவும் கரைந்து போய்விடும்..

Like

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.