பிரிவுகள்
பொது

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – ஒரு பிந்திய பதிவு

கந்தசாமி மாதிரி ஏதாவது படம் வந்தா தான் எல்லாரும் பதிவா போட்டு தாக்குவாங்கள் எண்டு பாத்தா, இந்த பதிவர் சந்திப்பு முடிஞ்சு நாலு நாளுக்குள்ள நாப்பது பதிவுக்கு மேல போட்டுட்டாங்கள். நான் சந்திப்புக்கு வர முன்னமே சொன்னனான் நான் பதிவெழுதுற பதிவரில்ல, பதிவு வச்சிருக்கிற பதிவர் எண்டு. இருந்தாலும் எல்லாரும் எழுதுறாங்கள் நாங்களும் எழுதாலாம் எண்டுதான் இந்த பதிவு…

நாம படிக்கேக்க லெக்சருக்கு அரை மணித்தியாலம் லேட், இப்ப வேலைக்கு ஒரு மணித்தியாலம் லேட். இந்த நிலமையில காலம 4 மணிக்கு படுத்தா எப்பிடி 9 மணி சந்திப்புக்கு வாறது. அதில காலம ஏழுமணிக்கு டயலொக்காரன் எழுப்பி bug ஒண்ட பிடிச்சிட்டன் fix பண்ணித்தா எண்டு அடம்பிடிச்சு அதை செய்து முடிக்கவே 9 மணி ஆகீட்டுது. எண்டாலும் நம்ம ஊர் கூட்டம் தானே எண்டு ஆறுதலா கமராவையும் மூட்டை கட்டிக்கொண்டு வெளிக்கிட்டு ஒரு ஒம்பதரை போல மண்டபத்துக்கு போனா அங்க எல்லாம் தொடங்கி நடந்து கொண்டிருக்கு. நானென்ன பங்சுவாலிட்டி பரமசிவமா, நமக்கு இதெல்லாம் சகஜம் தானே எண்டு உள்ளுக்க போய் படமெடுக்கிற் வேலைய தொடங்கினன்.

நானும் ஏதோ பதிவர் சந்திப்பெண்டா புல்லட் குடுக்கிறதா சொன்ன வடைய சாப்பிட்டு கலந்துகட்டி உரையாடி வாறதெண்டு பாத்தா, அறிவிப்பாளர் எல்லாம் வச்சு பொதுக்கூட்டம் மாதிரி நடந்து கொண்டிருந்திச்சு. நமக்கு அது முக்கியமில்லத விசயம் என்றதால நான் படமெடுக்கிற வேலைய மட்டும் செய்தனான். அங்க இருந்தாக்களுக்குள்ள எனக்கு தெரிஞ்சது ஒரு பத்து பதினஞ்சு பேர்தான், மற்றப்படி எல்லாமெ பது முகங்கள், பலதும் பது பெயர்கள். கௌபாய் மதுவும் ஊரோடி பகீயும் ஒரு லப்டோப்பை வச்சு சுத்தி சுத்தி படம் காட்டிக்கொண்டிருந்தாங்கள், அது சந்திப்ப உலகத்துக்கே நேரடியா காட்டவாம். நல்ல முயற்சி, என்ன கௌபாயின்ட மொபைல் பில் வந்தாப்பிறகு தான் அவரிண்ட நிலமை தெரியும்.

பிறகு திரட்டிகளை பற்றி மருதமூரான் என்ற பதிவர் கதச்சவர். அவரும் ஒரு திரட்டி வச்சிருக்கிறார், அதப்பற்றி கதைக்கப்போய் எல்லாரும் அந்தாள போட்டு வாங்கீட்டாங்கள். பதிவர் சேரன்கிரிஷ் தொழில்நுட்ப விசயங்கள கதைச்சார் பலருக்கும் அது உபயோகமா இருந்தது. நானும் ஒரு திரட்டி வச்சிரு(க்கிறன்)ந்தனான் எண்டு ஆருக்காவது சொல்லோணுமெண்டு நினச்சனான், ஏன் நமக்கு தேவையில்லாத கதை எண்டு விட்டுட்டன்.

பிறகு எப்படி டைப் அடிச்சு தமிழ் வந்தா நல்லம் எண்டு கதச்சவ. எனக்கு நல்ல தமிழ் வாறதே கஷ்டம், இதில அத டைப்பினா என்ன அடிச்சா என்ன. (நான் பாவிக்கிறது தமிழ் 99, பரிந்துரைக்கிறது தமிழ் 99, ஆனா நாம சொல்றத யார் கேக்கிறாங்கள்…).

புல்லட் ஏற்பாட்டில வடை, பற்றீஸ், கேக் எல்லாம் பால்குடி (எ) தனஞ்சி குடுத்தவர், ஆனாலும் கையில் கமரா இருந்ததால கிட்ட வந்தது கைக்கு வராமா போயிட்டுது. அதவிட குடிக்கிறதுக்கு குடுத்தது டீயா கோப்பியா எண்டு பலருக்கும் டவுட் இருந்தது. நாலு கப் குடிச்சு டெஸ்ட் பண்ணி பாத்தனான், கடைசி வரைக்கும் அதுமட்டும் பிடிபடேல்ல.

பிறகு வந்தியத்தேவன் எண்ட ஒரு மூத்தவர் (பதிவுலகில) நன்றியுரைய பின்னூட்டம் எண்ட பேரில சொன்னவர். அது முடிய கூட்டம் கலஞ்சது. பிறகு மிஞ்சின பட்டீஸ சாப்பிட்டுட்டு, ஊரோடி பகியோடையும் வேற சிலரோடையும் கதச்சிட்டு வெளிக்கிட்டு வீட்ட வரேக்க ஒரு மணி தாண்டீட்டுது. வந்து சேர திரும்ப டயலோக்காரன் இன்னொரு bug பிடிச்சிட்டன் எண்டு நிண்டான்… பேந்தென்ன வழமைதான்….

சில குறிப்புக்கள்:

  1. இணையத்தில் நேரலை ஒளிபரப்பு நல்ல முயற்சி, இனிவரும் சந்தர்ப்பங்களில் இன்னமும் சிறப்பாக செய்யலாம்.
  2. சந்திப்பு வழமையான மரபுசார் கூட்டங்கள் போல் நடத்தப்பட்டதாக எண்ணுகிறேன். இனிவரும் காலங்களில் சற்றே இலகுவான சூழலுடன் நடத்தப்படலாம்.
  3. பதிவர்களுக்கிடையில் சந்திப்பில் அதிக ஊடாடல் நிகழ சந்தர்ப்பம் இருக்காததால் இது ஒரு பதிவர் சந்திப்பாகவன்றி கூட்டமாகவே இருந்தது.
  4. கலந்துரையாடல் விவாதப்போருட்களில் செக்குமாடு மாதிரி அதிகம் சுற்றத்தேவையில்லை. தேடலுக்கான முதல்புள்ளியை கொடுப்பதாக இருப்பதே பொதுமானது.
  5. குறித்த நேரத்துக்கு ஆரம்பித்தது நல்ல விடையம். (அப்பதான் நாம நம்மட லேட் மரப மீறாம இருக்கலாம்)

படம் காட்டுதல்:

இந்த பதிவர் சந்திப்பில் நான் செய்த ஒரே உருப்படியான காரியம் ஒரு சில புகைப்படங்களை எடுத்தது தான். மொத்தமாக எடுத்த 110 படங்களில் தேறிய 80 படங்களை என்னுடைய Flickr தளத்தில் இட்டு வைத்திருக்கிறேன். இவற்றை பதிவர்களும் ஏனையவர்களும் பின்வரும் நிபந்தனைகளுக்கு அமைவாக (Creative Commons Attribution-Noncommercial) தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.

  1. Attribution – https://nimal.info/ அல்லது http://www.flickr.com/photos/nimal/ என்ற முழு முகவரிகள் குறிப்பிடப்படல் வேண்டும், அல்லது நிமல் என்ற பெயர் குறிப்பிட்டு மேலுள்ள முகவரிகளில் ஏதாவது ஒன்றிற்கு தொடுப்பு கோடுக்கப்பட வேண்டும்.
  2. Noncommercial – இந்த படங்களை நீங்கள் எந்த வணிக நோக்கிலும் பயன்படுத்தலாகாது.
படங்களை இங்கு பெறலாம்.

7 replies on “இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – ஒரு பிந்திய பதிவு”

//கௌபாய் மதுவும் ஊரோடி பகீயும் ஒரு லப்டோப்பை வச்சு சுத்தி சுத்தி படம் காட்டிக்கொண்டிருந்தாங்கள், அது சந்திப்ப உலகத்துக்கே நேரடியா காட்டவாம். நல்ல முயற்சி, என்ன கௌபாயின்ட மொபைல் பில் வந்தாப்பிறகு தான் அவரிண்ட நிலமை தெரியும்.//ம்…நானும் ஏதோ சங்கத்தில் free wifi இருக்கோ என்று நினைச்சு சந்தோசப்பட்டுப் போட்டன்

Like

கௌபாய்மதுவின் நிலை இன்னும் பதினான்கு நாட்களில் அறிவிக்கப்படும். கௌபாய்மதுவுக்கு உதவுங்கள் என்று இணையம் முழுக்க பதாகை வைக்கவேண்டு வந்தாலும் வரலாம்..

Like

"குடுத்தது டீயா கோப்பியா எண்டு பலருக்கும் டவுட் இருந்தது. நாலு கப் குடிச்சு டெஸ்ட் பண்ணி பாத்தனான்" சபாஷ் நீ நம் ஜாதியடா!

Like

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.