பிரிவுகள்
பயணம்

ராஜராஜீஸ்வரம்

(மின்னஞ்சல் வாயிலாக கிடைக்கப்பெற்ற இந்த கட்டுரை அனுமதி இன்றி இங்கு வெளியிடப்படுகிறது. இதன் மூல எழுத்தாளரின் பெயர் தெரியாமையால் இங்கு குறிப்பிடப்படவில்லை)

ராஜராஜீஸ்வரம் - Periya Kovil

தஞ்சாவூர் தமிழ் நாட்டு மாவட்டங்களில் ஒன்று. சென்னையிலிருந்து 334 கிலோமீட்டர் தெற்கே இருக்கும் இந்த மருத நில பரப்பு காவேரி ஆற்றினால் பண்படுத்தப்பட்டுத் தமிழ் நாட்டின் தானியக் களஞ்சியம் என்னும் சிறப்பினைப் பெறுகிறது. இந்த மாவட்டத்தின் தலைநகரும் தஞ்சாவூர்தான். இங்குதான் ராஜராஜன் என்ற மாமன்னன் எழுப்பிய உலகப்பாரம்பரியச் சொத்து என்று ஐக்கிய நாட்டு சபையினரால் (UNESCO) போற்றிப் பாதுகாக்கப்படும் “ராஜராஜீஸ்வரம்” என்ற கோவில் விண்ணோக்கி எழும்பி வெகு தூரத்திலேயே தெரியும் வண்ணம் நிற்கிறது.

சூரிய குலத்தவர் என்று தங்களை அழைத்துக் கொண்ட சோழர்கள் சங்க காலத்திலேயே (கி.மு. 2ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 2ம் நூற்றாண்டு வரை) வாழ்ந்திருந்தாலும் அந்தக் காலக்கட்டதின் முடிவில் தென்னாட்டு வரலாற்றிலிருந்தே காணாமல் போய்விட்டிருக்கிறார்கள். ஆயினும் சங்கம் வளர்த்த இந்த இனத்தவர் குறுநில மன்னர்களாக உறையூர், பழையாறை போன்ற பழைய தலைநகரங்களிலே தொடர்ந்து வாழ்ந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

பல்லவர்களின் ஆட்சியின்போது முத்தரையர் என்ற சிற்றரசர்கள் நியமம் என்ற ஊரை தலைநகராகக் கொண்டு காவேரிப்படுகை ஊர்களை ஆண்டிருக்கிறார்கள். இவர்களில் கோ இளங்கோ என்ற புகழ் பெற்ற முத்தரையரை விஜயாலய சோழன் வென்று கி.பி. 850ல் தஞ்சாவூரில் தம் தலைநகரை நிறுவினார்.

விஜயாலயனின் வழையில் வந்த நான்காம் தலைமுறையைச் சேர்ந்த சுந்தர சோழ பராந்தகனுக்கு மூன்று மக்கள். மூத்த ஆண்மகன் கொலை செய்யப்பட்டார். அடுத்தவர் குந்தவை என்ற பெண் மகவு. இளையவர் அருள்மொழி. இவரே ராஜராஜன் என்ற பெயரில் வீறுகொண்டு எழுந்து, உலகம் சந்தித்த சிறந்த அரசர்களில் ஒருவராக நின்றார். தமிழர் என்ற இனத்தார் தனி நாகரிகர்களாக தென்னாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிரார்கள் என்பதை உலகுக்கு அடையாளம் காட்டியவரும் இவரே. கடல் கடந்தும் தன் அதிகாரத்தை நிலை நாட்டிப் பல அன்னிய நாடுகளோடு உடன்படிக்கைகள் செய்து கொண்டவர். வெல்ல முடியாத படைபலம் கொண்டிருந்தவர்.

பராந்தகன் 973ம் ஆண்டு அகால மரணம் அடைந்தபோது அவருடைய மனைவியும் உடன்கட்டை ஏறி இறந்து போனார். அப்போது இளைஞராக இருந்த இளவரசர் அருமொழி செய்வதறியாத ஒரு நிலையில் இருந்தார். ஆயினும் விவேகம் நிறைந்த ராஜ தந்திரியாக இருந்ததால் தனக்கு உரிய சிம்மாசனத்தைப் பெறுவதற்கு 18 ஆண்டுகள் பொறுமையாகக் காத்திருந்தார். அதற்கு முன்னரே தன்னுடைய உரிமையை நிலை நாட்ட முயன்றிருந்தால் ஏற்கனவே பிளவுபட்ட நாடு மேலும் சிதறியிருக்கும். அதோடு அவருடைய உயிருக்கும் கூட குந்தகம் விளைந்திருக்கலாம். ஆயினும் அவர் அரியணை ஏறியதும் செய்த முதல் வேலை தன் அண்ணனின் கொலைக்குக் காரணமானவர்களை முறைப்படி தண்டித்ததே.

ராஜராஜன் ஆட்சிப்பொறுப்பை ஏற்றபோது சோழ நாடு ஒரு சிறிய மண்டலமாக மட்டுமே இருந்தது. எனவே தன் நாட்டை விரிவுபடுத்தும் முயற்சிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கொண்டு முதல் கட்டமாக தென்னாட்டை ஒன்றிணைக்க எண்ணினார். அதன்படி பாண்டியன் அமரபுரஜங்கன் என்பானோடு போரிட்டு அவனை வீழ்த்தினார். பின் ரவிவர்மன் என்ற சேர மன்னனையும் “முரட்டொழில் சிங்கள ஈழமண்டலமும்” வென்று வடபுலம் நோக்கித் தன் கவனத்தைச் செலுத்தினார்.

அதற்கு முன் தான் கைபற்றிய நாடுகளில் எல்லாம் அரசு இயந்திரங்கள் சரிவர இயங்க ஆளுநர்களையும் ஏனைய அலுவலர்களையும் நியமித்தார். அதேவேளை ஒவ்வொரு நாட்டிலும் அமைதி காக்கும் படை ஒன்றையும் விட்டுச் சென்றார். ஈழத்தில் அவர் விட்டு வைத்திருந்த வேளைக்காரர் படையின் (COMMANDOS) எண்ணிக்கை 90,000 என்று தெரிகிறது. அப்போது ஈழத்தில் ஆளுநராக இருந்த ராஜராஜனின் மகன் முதலாம் ராஜேந்திரன், தனது 25ம் வயது முதலே தன் தந்தையின் ஒரு படைத்தளபதியாக பணியாற்றி வந்திருக்கிறார். ஈழத்தில் (பொலன்னறுவையில்) இரண்டு சிவன் கோவில்கள் கட்டியவர் இவரே. தனது அன்னையின் பெயரால் வானவன் மகாதேவி ஈஸ்வரம் என்ற அவரால் பெயரிடப்பட்ட ஒரு கோவில் இப்போது சிவன் கோவில் என்றழைக்கப்படுகிறது.

அதன்பின் ராஜராஜன் வென்ற வடபுல நாடுகளைத் திருவாலங்காடு செப்பேடு பட்டியலிட்டு “கங்கை, கலிங்கம், வேங்கி, மகதம், அரட்டம், ஒட்டம், சௌராஸ்டிரம், சாளுக்கியம் ஆகியவற்றை வென்ற பின் அவர்களின் மரியாதையை ஏற்று எழு ஞாயிறு போல உலகை ஆண்டான்” என்று கூறுகிறது.

இப்படி ஒரு மாபெரும் சோழப்பேரரசை நிறுவ அவர் மேற்கொண்ட போர்களில் எல்லாம் அவர் பயன்படுத்திய சேனைகளின் எண்ணிக்கை பதினொரு லட்சத்திற்கும் மேலென்று கணக்கிட்டிருக்கிறார்கள். 31 படை பிரிவுகள் கொண்ட இத்தகைய அளவிலான சேனையைப் பராமரிப்பதற்கும், நிருவகித்து பயன்படுத்துவதற்கும் அசாத்திய திறமையும் நிருவாகத்திட்டமிடல் அறிவும் இருந்திருக்க வேண்டும்.
ராஜராஜப் பேரரசர் தீவிர பக்திமானாக மாறுமுன்னர் அவர் மாலைத் தீவுகளையும் லட்சத்தீவுகளையும் சார்ந்த 12,000 தீவுகளை (”முன்னீர்ப்பழந்தீவு பன்னீராயிரமும்”) கைபற்றியதுவே அவருடைய கடைசிப் போர் நடவடிக்கை ஆகும்.

கோவில்கள்.

இவருடைய ஆட்சியின்போது பல கோவில்களைக் கட்டுவித்தார். சிவன், விஷ்ணு, புத்தர், சமணர் என்று வெவ்வேறு வழிபாடுகளுக்காக இவரும் இவரது குடும்பத்தவர்களும் ஒப்பிலா ராஜராஜேஸ்வரம் உட்பட 52 கோவில்களை எழுப்பி உள்ளனர். இது உலக அளவில் ஒரு சாதனை ஆகும்.

இவருடைய தமக்கை குந்தவை நாச்சியார் ஒரே மாதிரியான மூன்று கோவில்களை (சிவன், விஷ்ணு, ஜெயின்) கட்டினார். ராஜராஜனின் மகன் ராஜேந்திரன் இலங்கையில் கட்டிய கோவில்களோடு கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு சிவன் கோவிலைத் தஞ்சை கோவிலின் மாதிரியிலேயே ஆனால் சற்று சிறிய வடிவத்தில் எழுப்பியுள்ளார்.

ராஜராஜன் ஒரு சிறந்த மாமன்னர். அவரிடம் எல்லா குண நலன்களும் பக்தி, வீரம், தாராளகுணம், நன்றியுணர்வு, இனிமை, பிறரை மதித்தல், ஆழ்ந்த அறிவு, தூய்மை, சலனமடையாதிருத்தல், கண்ணியம், இரக்கம், கொள்கையில் உறுதி, விடாமுயற்சி, குடிமக்களின் நலனில் அக்கறை இத்தனையும் நிறைந்திருந்தன. ஆயினும் கடல் கடந்த நாடுகளில் அவருடைய வெற்றியோ, செங்கோல் வளையாத ஆட்சியோ, போர்த்திறனோ, அவருடைய நினைவுகளை நிரந்தரமாக்கிடவில்லை. மாறாக அவர் கட்டிய இந்த அற்புத சிவன் கோவிலே அவருடைய ஆட்சியின் மேன்மைக்கோர் நினைவுச் சின்னமாக அமைந்தது. அவருடைய காலமே தமிழ் நாட்டு வரலாறின் ஒரு மகோன்னத காலமாக இருந்ததை இக்கோவில் காட்டுவதாகவும் அமைந்து இது தொடர்பாக உலக வரலாற்றில் அவருடைய பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவும் வைத்துவிட்டது.

ராஜராஜீஸ்வரம்

சிவபெருமானுக்காக அர்ப்பணம் செய்யப்பட்ட இந்தக் கோவிலை ராஜராஜன் “ராஜராஜீஸ்வரம்” என்றும் அதில் உறையும் இறைவனை ராஜராஜீஸ்வரம் உடையார் என்றும் பெயரிட்டு வழிபட்டார். ” நாம் எடுப்பிச்ச திருக்கற்றளீ ராஜராஜீஸ்வரம் ” என்கிறது அப்பேரரசன் தன்னுடைய கோவிலில் வெட்டுவித்த முதல் கல்வெட்டு. பிற்காலத்தில் வந்தவர்கள் இந்த இறைவனை பிருகத் ஈஸ்வர் என்று அழைக்கத் தொடங்கினர்.
காலத்தை வென்ற இக்கோவில் முழுவதும் கல்லால் ஆனது. இது ராஜராஜனின் 19 வது ஆட்சி ஆண்டில் கட்டத் தொடங்கி அவரது 25வது ஆட்சி ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு அந்த ஆண்டின் 275 வது நாள் குடமுழுக்கு செய்யப்பட்டது.

கோவில் வளாகம் 3,20,000 சதுர அடி பரப்பில் விரிந்திருக்கிறது. 216 அடி உயரத்தில், இந்திய தீப கற்பத்திலேயே மிக உயரமான ஒரு விமானம், ஓர் அர்த்த மண்டபம், ஒரு மகா மண்டபம், ஒரு முக மண்டபம் இவை அனித்தும் ஒரே கட்டடமாக அமைக்கபப்ட்டிருக்கின்றன. எதிரே ஒரு நந்தி மண்டபமும், வளாகத்தில் அம்மன், சுப்பிரமணியர், சண்டேசுவரர், பிள்ளையார் ஆகியோர் சந்நிதிகளும் இருக்கின்றன. சுற்றிலும் ஒரு திருச்சுற்று மாளிகை காணப்படுகிறது. கோவிலின் தரை மட்டத்திலிருந்து உயர்த்தப்பட்டு தூண்கள் தாங்கும் கூரை கொண்ட தாழ்வாரம் இத்திருச்சுற்றுமாளிகை. இதைத் தொடர்ந்து ஒரு உட்சுவரும் அரணாக புறச்சுவரும் அமைக்கப்பட்டிருகின்றன. கிழக்குப் பகுதியில் இரண்டு பெரிய கோபுரங்கள் நிற்கின்றன.

கோவில் கிழக்கு நோக்கி இருக்கிறது. கோவிலில் நுழையும் முன் கோவிலைச் சுற்றியிருக்கும் அகன்ற அகழி கண்ணில் படும். அகழி சேதமடைந்து வருகிறது. ஆங்காங்கே சிறிது நீரும் தேங்கி நிற்கிறது. கோவில் முன்னால் அகழியை மண்ணிட்டு நிரப்பிக் கோவில் வளாகத்தின் தரை உயரத்திற்கு பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதைக் கடந்ததும் கோவிலை அரணிட்டிருக்கும் கோட்டைச்சுவர் எதிர்ப்படும். சுவர் அகழியை ஒட்டியவாறு செல்கிறது. நுழைவாயிலைக் கடந்ததும் இன்னும் பெரியதொரு சுவர் கோவிலைச் சூழ்ந்திருப்பதைக் காணலாம். இந்தச் சுவரின் வாயிலின் மீது முதல் கோபுரம் எழும்பியிருக்கிறது. இந்த கோபுரத்திற்கு “கேரளாந்தகன் திருவாயில்” என்று பெயர். கேரளாந்தகன் என்பது ராஜராஜனின் பெயர்களில் ஒன்று. இதைக் கடந்து 300 அடி சென்றதும் கோவிலின் உள்கோபுரம் வரும். இதற்கு “ராஜராஜன் திருவாயில்” என்று பெயர். இந்தக் கோபுரத்தின் தாங்குதளத்தில் புராண கால நிகழ்ச்சிகளும் இலக்கிய நிகழ்ச்சிகளும் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கின்றன.

ராஜராஜன் திருவாயில் வழியாக கோவிலுக்குள் நுழைந்ததுமே நந்தி மண்டபம் எதிர்ப்படும். மேற்கு நோக்கியவாறு இருக்கும் இந்த மாபெரும் நந்தி 11 அடி உயரத்தில் படுத்த நிலையில் இருக்கிறது. இது பிற்காலத்தில் நாயக்கர்களால் நிலை நிறுத்தப்பட்ட உருவம். ராஜராஜன் அமைத்திருந்த நந்தி கோவிலின் தெற்குத் திருச்சுற்றுமாளிகையில் வைக்கப்பட்டிருக்கிறது.

நந்தி மண்டபத்தைக் கடந்ததும் கோவிலின் முக மண்டபம் வரும். நடுவிலும், இரு புறமும் இருக்கும் படிகள் வழியே மேலே ஏறிச் சென்று மண்டபத்தை அடைய வேண்டும். சிற்பங்கள் செதுக்கப்பட்ட கல் தூண்களின் வரிசையைக் கடந்ததும் முன்மண்டபத்தை ஒட்டியபடி மகாமண்டபம் இருக்கிறது. வாயிலின் இரு புறமும் இரு மாபெரும் காவலர்கள் (துவாரபாலகர்கள்) நிற்பதைக் காணலாம். ராஜராஜன் பாணியில் அமைக்கப்பட்ட இந்த காவலர்களின் 18 உருவங்கள் கோவிலின் பிற்பகுதிகளிலும் நிறுத்தப்பட்டிருகின்றன.

உள்ளே நுழைந்ததும் பிரமாண்டமான தூண்களை வரிசை வரிசையாகக் காணலாம். அவற்றின் மீது மிகப் பெரிய குறுக்கு கற்களை வைத்து கூரை அமைத்திருக்கிறார்கள். வெளியே எவ்வளவுதான் வெய்யிலின் கொடுமை தெரிந்தாலும் உள்ளே ஒரு குளிர்ச்சி நிலவுவதை உணரலாம். மகாமண்டபத்தின் இருபுறமும் உலோகச் சிலைகள் வைக்கப்பட்டிருகின்றன.
மகாமண்டபத்திற்கும் கருவறைக்கும் இடையே இருப்பது அர்த்த மண்டபம். இது திருமஞ்சன அறையாகவும் அந்த நாட்களில் பயன்பட்டிருக்க வேண்டும். அர்த்த மண்டபத்தின் வடக்கு, தெற்குப் புறங்களில் இருக்கும் வாயில்கள் வழியாகவும் உள்ளே வரலாம். கோவிலின் தாங்குதளம் மிக உயரமாக இருப்பதால் அர்த்த மண்டபமும் கருவறையும் தரைமட்டத்திற்கு 20 அடி உயரத்தில் இருக்கின்றன. எனவே தெற்கு, வடக்கு வாயில்களைச் சென்றடைய இரு நிலைகளில் உள்ள படிகளில் ஏறிச்செல்ல வேண்டும். படிகளின் பிடிச்சுவர்களில் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருகின்றன. இரு வாயில்களிலும் காவலர் சிலைகள் காணப்படுகின்றன.

தெற்குப்புறம் இருக்கும் வாயின் மேல் “விக்கிரம சோழன் திருவாசல்” என்ற பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த எழுத்துக்களை மறைத்துக் கொண்டு இப்போது ஒரு மின் விளக்கு அமைக்கப்பட்டிருக்கிறது. வடக்குப்புறம் இருக்கும் வாயில் அரசனின் மாளிகைக்கு அருகே இருந்ததால் அணுக்கன் திருவாயில் என்று அழைக்கப்பட்டது.
கோவிலின் முக்கிய பகுதி, முழுக்கோவிலுமே ஒரு தனித்தன்மையையும் ஒரு வடிவத்தையும் பெறும் பகுதி, கோவிலின் விமானமதான்.

இது தரை மட்டத்திலிருந்து 216 அடி உயரத்தில் நெடிதோங்கி நிற்கிறது. இரண்டு அடுக்குகளைக்கொண்ட கருவறை, அடிப்பாகத்தில் 98 அடி அகலம் கொண்ட சதுர அமைப்பு. அடுக்குகள் இடயே கொடுங்கைகள் துருத்திக் கொண்டிருக்கின்றன. முதல் நிலையில் தேவகோட்ட மாடங்களில் சிவபெருமானின் 28 முழு உருவச்சிலைகள் வைக்கபாடிருக்கின்றன. இவை சிவனின் பலவித தோற்றங்கள். இரண்டாவது நிலையில், முதலாவது நிலையிலிருக்கும் சிலைகளுக்கு நேர் மேலே திரிபுராந்தகராகத் தோன்றும் சிவனின் சிலைகள் வெவ்வேறு பாவங்களில் நிற்கின்றன.

இந்த அடிப்பாகத்தின் மேல் 13 நிலைகளில் விமானம் இன்னும் மேலே எழுந்து கூராக நிற்கிறது. தமிழரின் கட்டடக்கலையின் தன்மையின்படி ஒரு கோவில் சாதாரண மக்களின் குடியிருப்புகளைவிட வேறுபட்டதாக இருந்துவிட்டால் மட்டும் போதாது. அது அந்த சுற்றுச் சூழலைவிட மிக உயர்ந்து நிற்க வேண்டும் என்ற நியதிக்கோர் எடுத்துக்காடாக விமானம் கம்பீரமாக நிற்கிறது.

உச்சியில் இருக்கும் தளம் 25 அடி சதுரமானது. சிகரம் கூம்பு வடிவில் செதுக்கபப்ட்டு நுனியில் 12 1/2 உயரமான கலசத்தைத் தாங்குகிறது. ராஜராஜனின் 25 ம் ஆட்சி ஆண்டின் 275ம் நாள் கோவிலுக்கு அளிக்கப்பட்ட இக்கலசம் அக்காலத்தில் தங்கத்தால் கவசமிடப்பட்டிருந்தது. இப்போது இல்லை. இதன் பிரமரந்திரத்தளக்கல் ஒரே பாறையால் ஆனது என்றும், 80 டன் எடையுள்ளது என்றும் எல்லாரும் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ஆனால் திருச்சிராப்பள்ளி நகரிலிருக்கும் டாக்டர் மா. இராசமாணிக்கணார் வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குநர், வரலாற்று ஆய்வு மேதை டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்கள் தமது ஆய்வர்களோடும் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையின் அலுவலர்களின் துணையுடனும் விமானத்தின் உச்சிவரை ஏறி இது ஒரே பாறையால் ஆனது அல்ல, பல கற்களை இணைத்து ஒரே பாறை போன்று தோற்றும் வண்ணம் மிக நேர்த்தியாக இணைக்கப்பட்டிருக்கிறது என்றும் கண்டறிந்திருக்கிறார். இந்தக் கல்லின் நான்கு முனைகளிலும் நந்தியின் உருவங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

விமானத்தின் 13 நிலைகளிலும் சிற்பங்கள் அழகுறச் செதுக்கப்பட்டிருக்கின்றன. இது கங்கை கொண்ட சோழபுரம் கோவில் போன்று உள் வாங்காமல் ஒரே நேர்ச்சரிவில் அமைந்திருக்கிறது. இது அந்தக் கால கட்டத்தில் தங்களிடமிருந்த சாதனங்களைக் கொண்டு தமிழர்களால் உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த பொறியியல் சாதனை. பிற்காலத்தில் வந்த அரசுகளின் தீய எண்ணங்களுக்கும், ஆங்கில பிரஞ்சு ஆதிக்கத்தின் போது கோவிலின் வளாகம் வேறு தவறான பயன்களுக்கு உட்பட்டிருந்தபோதும், எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்து அழிவிலிருந்து தன்னைக் காத்துக்கொண்டு அது நிமிர்ந்து நிற்பது தமிழ் நாட்டுக் கலைஞர்களின் திறமைக்கு ஒரு சான்றாக இருக்கிறது. இத்தகைய சாதனை செய்து, இத்தனைப் பொருட்செலவில் ஒரு பொறியியல் சாதனை படைக்கத் துணிந்த இந்த விந்தை மன்னனின் இறையுணர்வும், கலையுணர்வும் போற்றுதற்குரியவை.
கருவறை அழகாகச் செதுக்கப்பட்ட துணைப் பீடத்தின் மீதும் தாங்குதளத்தின் மீதும் நிற்கிறது. கருவறையின் உள்ளே 11 அடி உயரத்தில் அழகிய லிங்க வடிவில் சிவபெருமான் தரிசனம் தருகிறார். மிகப்பிரமாண்டமான உருவம் இது.

கருவறையின் உட்சுவருக்கும் புறச்சுவருக்குமிடையே மூன்று புறமும் ஒரு தாழ்வாரம் இருக்கிறது. இவற்றில் உள்ள சுவர்களில் சோழர், நாயக்கர் காலத்து ஓவியங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. உண்மையில் சோழர் காலத்து ஓவியங்கள் மீது பிற்காலத்தில் வந்த நாயக்கர்களால் ஓவியங்கள் தீட்டப்பட்டு முன்னையது மறைக்கப்பட்டிருக்கிறது. நாயக்கர் கால ஓவியங்கள் சில இடங்களில் உதிர்ந்து போக பழைய மூல ஓவியங்கள் காட்சி தந்திருக்கின்றன. இந்த மூல ஓவியங்களைக் கண்டுபிடித்தவர் திரு ச.க. கோவிந்தசாமிப்பிள்ளை என்பவர். இந்தத் தாழ்வாரத்திற்கு மேலே உள்ள பகுதியில் நாட்டிய கரணங்களைக் கல்லில் வடித்திருக்கிறார்கள். 108 கரணங்களில் 81 மாத்திரமே செதுக்கப்பட்டு, எஞ்சியவை செதுக்க இடம் ஒதுக்கப்பட்டுக் காணப்படுகிறது.
விமானத்தின் ஒரு தளத்தின் மூலையில் தொப்பி அணிந்த ஆங்கிலேயரின் முகம் வடிக்கப்பட்டிருக்கிறது. இவர் யார் என்பதற்குப் பலவிதமான கருத்துக்கள் சொல்லபப்டுகின்றன.

ராஜராஜீஸ்வரத்தின் சிறப்புகள்

ராஜராஜீஸ்வரம் பல வழிகளில் தனித்தன்மை வாய்ந்தது. மிகவும் சிறப்பாகத் திட்டமிடப்பட்டு நேர்த்தியாகக் கட்டப்பட்டிருக்கிறது. வெகு தூரத்திற்கு அப்பாலிருந்து மிகவும் தரமான கற்களையே தேடிக்கொண்டு வந்து அவற்றைப் பொறுத்தி அழகுறச் செதுக்கியிருக்கிறார்கள். அதன் உறுதி வாய்ந்த கட்டட அமைப்பு ஒரு நிரந்தரத் தன்மையை தோற்றுவிக்கிறது.

இக்கோவிலின் சமகாலத்திலும் அதன் பிறகும் எத்தனையோ கோவில்கள் எழுந்தன. ஆயினும் எந்தக் கோவிலையும் தஞ்சை ராஜராஜீஸ்வரம் கோவிலோடு ஒப்பீடு செய்ய இயலாத அளவுக்கு இத்திருக்கோவில் எழுந்து நிற்கிறது. இக்கொவில் போன்று உலகின் வேறு எந்தக் கோவிலுமோ, வரலாற்றுச் சின்னமோ தன்னுடைய வரலாறு பற்றிய விளக்கமான சாசனங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கவில்லை. இந்தக் கோவிலின் தாங்குதளக்கற்களிலும், குமுதவரிகளிலும், வேறு பகுதிகளிலும் இருக்கும் கல்வெட்டுகள் இக்கோவில் நிர்மாணிக்கப்பட்ட கதையையும் அது நிறுவப்பட்டபோது இருந்த மகோன்னத நாட்களின் சமுதாய அமைப்புகள் பற்றிய விரிவான விளக்கங்களையும் சொல்கின்றன. மேலும் கோவிலுக்கு அளிக்கப்பட்ட அறக்கட்டளைகளின் பட்டியல்கள், வழிபாடு செவ்வனே நடைபெற செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள், கோவிலுக்கு அளிக்கப்பட்ட உலோகத்தாலான சிலைகள், சிலைகளுக்கு உரிய தங்கம் வெள்ளியிலானா அணிகலன்கள், கோவிலின் அதிகாரிகள், அலுவலர்கள், ஏனைய பணியில் இருப்போரின் பெயர்கள், முகவரிகள், சம்பளங்கள் (400 தளிப்பெண்டிர் உட்பட) முழுவதுமே சிறிய சிறிய விவரங்களைக்கூட விட்டுவிடாமல் துல்லியமாக எழுதப்பட்டிருக்கிறது.

இவற்றுள் ஒரே வரிசையில் வரும் 107 பகுதிகள் உள்ள கல்வெட்டு மிகவும் முக்கியமானது. இது ராஜராஜனின் 25 ஆவது ஆட்சி ஆண்டின் 275 ஆவது நாள் தொடங்கி 29 ஆவது ஆண்டு வரையிலான அவரது கொடைகள் மற்றும் அவரது குடும்பத்தவரும் அரசு அதிகாரிகளும் அளித்த கொடைகள் பற்றி விரிவாக குறிப்பிடப்படுகிறது.

கலை வளர்த்த கோவில்

அக்காலத்தில் சிற்பியரே கட்ட்டக்கலை நிபுணர்களாகவும் வண்ணம் பூசுவோராகவும் பணி புரிந்தனர். தஞ்சைக் கோவிலில், அதைக் கட்டிய இந்த விற்பன்னர்களின் இந்த மூன்று கலைகளும் மிக நேர்த்தியாக இணைந்திருப்பதைக் காண முடியும். சோழர்களுக்குக் கோவில் கட்டுவது என்பது தங்களின் கலை உள்ளத்தின் ஒரு வெளிப்பாடு மட்டுமன்றி அது ஒரு வாழ்க்கை முறையாகவும் இருந்திருக்கிறது. இதனால் அக்கால சமுதாய வாழ்க்கை கோவிலையே சார்ந்து சுழன்றிருக்கிறது. நாட்டிஅய்ம், நாடகம், இசை ஆகியவையும் கோவிலில்மரங்கேறி, கவின் கலைகள் ( FINE ARTS) வளர்க்கபப்ட்ட ஒரு மையமாகவும் கோவில் செயல்பட்டிருக்கிறது. சோழரின் 450 ஆண்டுகால புக்ழபெற்ற வாழ்வு விஜயாலய சோழனின் காலத்தில் தொடங்கியது. ஆயினும் அவர்தம் மகோன்னத காலம் ராஜராஜன் என்ற அந்தப் பெரும் ஆற்றல் அரியணை ஏறியபோதுதான் தொடங்கியது. அந்த ஆற்றல் ஏற்படுத்திய அலையில் சில நூற்றாண்டுகள் பயணம் செய்து, விஜயாலய சோழனின் நேர்வழி வாரிசுகள் 1279ல் அழிந்து போனதோடு சோழரின் இனம் யாருமே நன்றி நினைக்காத ஒரு நிலையில் புவியின் பரப்பிலிருந்தே மரைந்து போனது.

ஆயினும் ராஜராஜன் என்ற ஒப்பில்லா மறத்தமிழனின் புகழ் ராஜராஜீஸ்வரம் என்ற அவர் கல்லில் எழுதிய காவியம் இருக்கும்வரை நிலைத்திருக்கும். உலகமும் அவரைக் கைகூப்பித் தொழும்.